சிரித்திரபுரம் - 5

காட்சி - 8

அரண்மனை நந்தவனம். மன்னன் ‘மணி’ கவலையுடன் ஒரு ஆசனத்தில் அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க, இளைய அமைச்சர் மார்‌த்தாண்டன், உடன் ஒரு நபருடன் அருகில் வருகிறார்.

மார்த் : அரசே! தங்களைக் காண இந்தத் தூதுவன் வந்துள்ளான். அவசரமாகக் காண வேண்டும் என்று அடம்பிடிக்கிறான்.

மணி : தூதுவனா? எந்த நாட்டுத் தூதுவன் இவன்? யார் அனுப்பியது இவனை?

மார்த் : வில்லவ நாட்டு அரசன் போதை திருமன் அனுப்பியிருக்கிறார் மன்னா...

மணி : என்னா? தன் பிறந்தநாள் விருந்துக்கு வரும்படி என்னை அழைத்திருப்பான். இப்போது எம்மால் இயலாது, செரிமானம் சரியில்லாததால் யாம் விருந்துகளில் கலந்து கொள்வதி்ல்லை என்று ஓலை எழுதி அனுப்பி விடும்.

மார்த் : ஓலையில் அப்படி எழுதியிருந்தால் பரவாயில்லையே மன்னா... ‌வில்லவ நாட்டு மன்னன் படையுடன் வருவதாக எழுதியிருக்கிறான்.

மணி : சரி... நம் அரண்மனை வைத்தியரைத் தயாராக இருக்கச் சொல்லும். அவன் படைக்கு உடனே வைத்தியம் பார்க்கட்டும்.

மார்த் : (தலையில் அடித்துக் கொண்டு) அரசே... உடலில் படையுடன் அல்ல... போர் தொடுப்பதற்குப் பெரும்படை திரட்டி வருகிறானாம். அடுத்த பெளர்ணமி இரவில் தாக்கப் போவதாக எழுதியிருக்கிறான்.

மணி : போதை திருமனல்ல அவன்... பேதை திருமன்! ஓலைதாங்கியே... உன் மன்னனிடம் சொல். அவன் எந்நாளும் எம்மை வெற்றி கொள்ள இயலாது. பெளர்ணமியன்று படையுடன் வரும் அவனுக்கு சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி இங்கே காத்திருக்கும் என்பதை போய்ச் சொல், போ... மார்‌த்தாண்டரே, நீரும் கிளம்பும். அதோ, அமைச்சர் அறிவுடைய நம்பி வருகிறார். அவருடன் சற்றுப் பேச வேண்டியிருக்கிறது.


மார்த்தாண்டனும், தூதுவனும் செல்ல, அறிவுடைய நம்பி அருகில் வருகிறான். நாலரை அடி உயரமுள்ள மணி கோபமாகி வாளை உருவிக் கொண்டு ஆசனத்திலிருந்து குதிக்கிறான். ஆறரை அடி உயர அ.நம்பி அவனைக் குனிந்து வியப்புடன் பார்க்கிறான்.

அ.நம்பி : கத்தரிக்காய் கையில் காம்புடன் குதிப்பது போல ஏன் குதிக்கிறீர்கள் மன்னா? உங்களுக்கு நல்லதுதானே செய்திருக்கிறேன்...?

மணி : எதடா நல்லது? என்ன சொல்லி பொன்னும் பொருளும் சம்பாதித்ததாகச் சொன்- னாய்?

அ.நம்பி : அதுவா... அண்டை நாட்டரசனிடம் சென்று தாங்கள் இளவரசியை அவனுக்கு மணம் செய்விக்க முடிவு செய்திருப்பதாகச் சொன்னேன். இளவரசிக்கு கேட்கும் திறன் மிகக் குறைவென்ற செய்தியை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இளவரசியுடன் எப்படிப் பேச வேண்டியிருக்கும் என்பதை பேசிக் காட்டினேன். இந்த விபரீதத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிடு என்று என்னிடம் கெஞ்சினார்கள். திருமணத்திற்கு விருப்பமில்லையென்று சொன்னால் ஒரு யானை நிறைய பொன்னும் பொருளும் தர வேண்டும் என்றேன். கணமும் யோசிக்காமல் கதறிக் கொண்டு கொடுத்தார்கள். ஹா... ஹா...

மணி : பாதகா! பொருள் கிடைத்து என்ன பயன்? இனி இளவரசிக்கு எப்படித் திருமணமாகும்? உனக்குத் தகுந்த தண்டனை அளித்திடத் தான் வேண்டும்!

அ.நம்பி : மாமன்னரே... தங்களை மாமனார் ஆக மாற்றிடத்தான் நான் விரும்புகிறேன். (உர்ர்ரக்க) வல்லி, இங்கே வா... (என்றழைக்க, மரத்தின் பின்னாலிருந்து இளவரசி சுந்தரவல்லி வருகிறாள்.)

சு.வல்லி : அப்பா... பெயருக்கேற்றாற் போல் அறிவு படைத்த இவரையே நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.

மணி : (மனதிற்குள்...) மதியூகியாக இருக்கிறான். இவன் உடனிருப்பது நல்லதுதான். (உரக்க) நல்லது நம்பி...! உனக்கான தண்டனையை நீயே தேர்ந்தெடு்த்துக் கொண்டு விட்டாய். கல்யாணத்தைவிடப் பெரும் தண்டனை ஏது? வரும் பெளர்ணமியன்று நம் மீது போர் தொடுக்கப் போவதாக வில்லவ நாட்டு மன்னன் போதை திருமன் ஓலை அனுப்பியிருக்கிறான். அந்தப் போரைத் தவிர்க்கும் யோசனையை நீ வழங்கினால் இளவரசியை உடன் உனக்கே திருமணம் செய்து வைக்கிறேன்.

அ.நம்பி : (சிறிது நேரம் யோசித்து) ஆ... யோசனை!‘ மன்னா... அருகில் வாருங்கள் ரகசியமாகச் சொல்கிறேன். (மணியை நோக்கிக் குனிகிறான்.)

மணி : (விலகி நின்று) அடேய்... சுந்தரவல்லியை வைத்துக் கொண்டு எதற்கடா நீ காதில் ரகசியம் சொல்ல வேண்டும்? சாதாரணமாகச் சொன்னால் மட்டும் கேட்டுவிடவா போகிறது?

அ.நம்பி : ஹி... ஹி... அதுவும் சரிதான். அரசே, நாம் என்ன செய்ய வேண்டுமென்றால்...

அடக்கடவுளே...! இந்த நேரம் பார்த்துத்தானா பூஜை வேளை என்பதால் அருகிலுள்ள ஆலயத்தின் மணி கம்பீரமாக முழங்கிட வேண்டும்? நம்பி ஏதோ சொல்கிறான். நமக்கு ஒன்றும் கேட்க மறுக்கிறதே... அப்பாடா... ஒரு வழியாக சப்தம் ஓய்கிறது.

மணி : (பிரகாசமாக) அருமையான யோசனை! எவருக்கும் தோன்றியிராத யோசனை! நன்று சொன்னீர் மாப்ளே...! (அ.நம்பியை அணைத்துக் கொள்ள, எதுவும் புரியாமல் அவன் உதட்டசைவை கவனித்துக் கொண்டிருந்த சு.வல்லி புன்னகைக்கிறாள்).

காட்சி - 9

அந்தப்புரத்தில் மணி ஏதோ யோசனையில் மூழ்கியபடி அமர்ந்திருக்க சொல்லழகு சுந்தரவர்மன் ஓடி வருகிறான்.

சொ.சு.வர்மன் : அப்பா... தேர், ச்சே... போர் வருகிறதாமே... பீர்ததாண்டர்... ச்சே, மார்‌த்தாண்டர் சொன்னார். நான் சில காலம் களியூர்... ச்சே, வெளியூர் சுற்றுப்பயணம் சென்று வரட்டுமா?

மணி : (கோபமாகி) அடேய்... வெட்கமாயில்லை உனக்கு இப்படிச் சொல்ல? இம்முறை படைக்கு நீதான் தலைமை தாங்கிச் செல்லப் போகிறாய். யாரங்கே, தளபதியை வரச் சொல்...!

சற்று நேரத்தில் தளபதி படுகளங்கொண்ட கோப்பெருஞ்சிங்கன் வர, அவரிடம்...

மணி : இவனுக்கு குதிரை சவாரியும், வாள் சண்டையும் கற்றுக் கொடுங்கள். எமது ஆணையாக இன்னும் ஒரு மாதத்திற்கு உம்முடனேயே இவன் இருக்கட்டும். அந்தப்புரம் பக்கமே வரக் கூடாது. உடனே சென்று ஆணைப்படி நடவுங்கள்.

ப.கோ.சிங்கன் : ஆனையா? குதிரை சவாரி என்றல்லவா சொன்னீர்கள்?

மணி : மூடனே! உடலும் வீரமும் வளர்ந்த அளவுக்கு மூளை வளரவில்லையே உனக்கு...! நான் சொன்னது உத்தரவு என்ற பொருளில். போ உடனே... நான் சொன்னபடி செய்!

-என்று காட்டுக் கத்தலாகக் கத்த, தளபதியும், சொ.சு.வர்மனும் ஓடிப் போகிறார்கள்.

-தொடரலாம்...

எழுதியவர் : (10-Sep-13, 10:53 am)
சேர்த்தது : nilamagal
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே