தந்தையின் ஆத்மா பேசுகிறது ...!!

முன் பிறவி வினைப் பயனாய்
என் மகனாய்ப் பிறந்த நல்முத்தே !

மார் மீதும் தோள் மீதும்
பாசமுடன் சுமந்து நான் வளர்த்தேன் !

கல்லூரிப் படிப்பு முடியும் வரை ...
உன்னை நான் பிரிந்த தில்லை
என்னை நீயும் பிரிந்த தில்லை !

வேலை நிமித்தம் வெளியூர் சென்றாய்
தேவைக்கு மேலும் செல்வம் சேர்த்தாய் !

போதுமென்ற பொன்மனம் வரவே யில்லை
இயந்திர கதியாய் காலம் கழித்தாய் !

உன்னைப் பெற்றவளை கூற்றுவன் அழைத்திட
தனிமைச் சிறையில் தவியாய் தவித்தேன் !

தேற்ற ஆளின்றி தோற்றுப் போனேன்
தோன்றிற்றே வாழ்வும் சூனியமாய் எனக்கு !

பிணியில் படுத்து நொந்துமனம் வாடி
இறுதிக் காலத்தை இம்சையாய் கழித்தேன் ...!

ஆயுள் முடிய காலன் கூப்பிட
மூச்சின் ஓட்டம் முழுமையாய் நின்றதே ...!!

துடிக்கும் இதயமும் தன்பணி முடித்ததே !
நாடித் துடிப்பும் நின்றே போனதே ...!!

சுற்றம் கூடி தகவல் சொல்ல
பெற்றவனை வழிஅனுப்பக் கிளம்பி விட்டாயா ?

தொலை தூரத்திலிருந்து வரும்
உன் வருகைக்காக ....
சில்லிடும் குளிரில்
சடல சகாக்களோடு
சவமாய்க் காத்திருக்கிறேன் ....கிடங்கில் !!

சடுதியில் வந்து சடலம் எரித்து
சாம்பலைக் கரைத்து
நான் வளர்த்த தென்னம்பிள்ளைக்கு
உரமாய் ஊற்றிவிடு .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Sep-13, 11:03 pm)
பார்வை : 98

மேலே