தண்டிக்கப்பட்ட நியாயங்கள் !

பால் மணம் நுகராது
பாசமது தீண்டாது
பாதைகளில் ஊர்வலமாய்
பாவத்தின் சம்பளங்கள்..!

தொட்டில் சுகம் அறியவில்லை
தொட்டணைக்க அன்னையில்லை -குப்பைத்
தொட்டிக்குள் தம் வாழ்வை
தொலைத்தன இன்னுயிர்கள்..!

அழுக்கடைந்த மேனி
அம்மணமாய் ஆடை
அருவருக்கும் தோற்றம்
அகம் எங்கும் ஏக்கம்..!

பிஞ்சுக் கரங்களிலே
பிச்சைப் பாத்திரங்கள்
பிழையறியா நெஞ்செங்கும்
பிறர் செய்த தாக்கங்கள்..!

சொந்த நாட்டில் அகதிகளாய்
சொந்தமறியா அனாதைகளாய்
சொல்லொண்ணா சோகத்திலிந்த
சொர்க்கத்தின் தூதுவர்கள்..!

தவறுகள் யாரோ செய்ய
தண்டிக்கப்பட்ட நியாயங்களோ
தரணியிலே ஈனமாய்
தவிப்புகளே மீதமாய்..!

இச்சை கொண்ட ஈருயிரின்
இன்பத்தில் கருவாகி
இறந்தே வாழும் இவ்வுயிர்களை
இறைவன் அவன் படைத்ததேனோ ...?

எழுதியவர் : ஹேயேந்தினி.க (13-Sep-13, 5:46 pm)
பார்வை : 138

மேலே