!!!===(((இருண்ட ஈழத்திற்கு உரிமையொளி அவசியம் -2)))===!!!
நாளை மறுநாள் ஈழத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது, இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான முகாந்திரங்களும் நிறையவே இருப்பதாகத் தோன்றுகிறது.
நம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள், ஏனென்றால் வேறு வழி இல்லை, நாங்கள் தமிழர்கள் என்று நிருபவிப்பதற்காக அவர்கள் தமிழ் தேசிய கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள், ஆனால் தமிழ் தேசிய கூட்டணி வெற்றிபெற்றால் நமது உரிமைகளையும் சுயாட்சியையும் மீட்டெடுத்து எம்மை சுதந்திர ஈழத்தில் வாழ வைப்பார்கள் என்று அவர்கள் முடிவு கட்டி வாக்களித்ததாக ஒரு போதும் கருத முடியாது.
ஏனென்றால், மக்களுக்குத் தெரியும் நமது அரசியல்வாதிகளின் சூழ்ச்சி, இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சிங்கள வெகுஜன இனவெறி அரசுக்கு அடிவருடிகளாகிவிடுவார்கள் என்று, ஆனாலும் தமிழன் என்ற ரீதியில் தமிழர் கட்சிகளில் பெரிய கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கு நாம் வாக்களிக்களித்து தமிழன் தமிழன்தான் என்பதை காட்டவேண்டிய சூழலில் இருக்கிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதில்லை சமஷ்டி ஆட்சியையே விரும்புகிறோம் என்று கூறி இருக்கிறார், இந்த கூற்றில் வலுவான அழுத்தமோ அல்லது திடமான உண்மையோ சிறிதும் இல்லை.
இப்படி கூறுவது சிங்கள அரசிடம் எமக்கான பதவிகளையோ உரிமைகளையோ நீங்களே பார்த்து கொடுத்தால் சரி என்பதைபோல்தான் இருக்கிறது, 60 ஆண்டுகாலமாக போராடியும் பல தியாகங்களை செய்தும் மனமிறங்காத சிங்கள அதிகார வர்க்க அரசு, ''சமஷ்டி ஆட்சியை எப்படி வழங்கும்,'' அப்படியே வழங்கினாலும் அது வலுவற்றதாகவும் நமது அரசியல்வாதிகள் கொலு பொம்மைகளாகவும்தான் இருக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால், 1987 லேயே கைசாத்து இடப்பட்ட 13வது சட்ட அனுகு ஒப்பந்தத்தை 26 ஆண்டுகள் கழித்து இன்று வலுவிழக்க செய்ய மூர்க்கத்தனமாக முகானித்து இறங்கி இருக்கும் இலங்கை அரசிற்கு, ''சமஸ்டி ஆட்சி முறையை வலுவிழக்கச் செய்யவதற்கும்,'' ''நமது அரசியல்வாதிகளை வளைத்து வலையில் போட்டுகொள்ள்வதற்கும்,'' யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை.
'''30 ஆண்டுகால அகிம்சை போர் தோல்வியையும் ஏமாற்றத்தையும் அளித்தபொழுதே நாம் சமஸ்டி என்ற இலக்கில் இருந்து ஈழம் என்ற இலக்கை நோக்கி வெகுதூரம் பயனித்துவிட்டோம்,''' ''அதனால் ஈடுசெய்யவே முடியாத பல பாரிய இழப்புகளை சந்தித்துவிட்டோம்,'' '''திரு சம்பந்தன் அவர்களின் கூற்றானது மீண்டும் நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று சமஸ்டி என்ற தத்துவத்தின் பேரில் சிங்கள அதிகார தொழுவத்தில் மூக்கணாங் கயிருட்டு கட்ட முனைவதைபோல் இருக்கிறது.'''
'''திரு சம்பந்தன் அவர்கள் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து எமது மக்களுக்கான உரிமையை மீட்போம் என்று சூளுரைத்து இருந்தால் அது வரவேற்க தக்கதாக இருந்திருக்கும்,''' மாறாக சமஷ்டி ஆட்சியை நிறுவுவோம் என்று கூறுவது வரவேற்கதக்கதாக இருந்தாலும் வருந்ததக்கதாகவும் இருக்கிறது, இது வலுவான சூளுரையா என்ற சந்தேகமும் எழுகிறது.
1950 களில் இருந்து 1965 கள் வரை அதாவது தந்தை செல்வாவின் 30 ஆண்டுகால அகிம்சை போராட்டத்தில் இந்த இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில் மூன்றுமுறை சமஸ்டி ஆட்சிக்கான ஒப்பந்தம் தந்தை செல்வாத் தலைமையில் இலங்கை அரசோடு கைசாத்திடப்பட்டது, பின்னர் அது கிழித்து எறியப்பட்டு ஏமார்ந்து போனோம், அதன் பிறகே தந்தை செல்வா அவர்கள் வட்டுகோட்டை தீர்மானத்தை முன் மொழிந்தார், தமிழீழம் ஒன்றே எம் மக்களுக்கான முழு தீர்வென்றார், இதை தந்தை செல்வா பெயரைச் சொல்லி அரசியல் நடத்திக்கொண்டு இருக்கும் திரு சம்பந்தன் அவர்கள் மனதில் நிறுத்த வேண்டும்.
ஏமாற்றுவது என்பது சிங்கள குள்ள நரிகளுக்கு கைவந்த கலை, இல்லையென்றால் உலகறிய போர் குற்றம் புரிந்து, இன அழிப்பை செய்து, மனித உரிமைகளை மீறி தம்மை புத்தர்களாக காட்டிக்கொண்டு இருக்க முடியுமா? மனித மாமிசங்களைத் தின்று, குருதியை குடங் குடமாய் குடித்து, பசியாரிவிட்டது என்று, இன்று நெஞ்சை நிமிர்த்தி வாய் பிளந்து ஏளனமாக ஏப்பம் விடமுடியுமா?
எமது நான்காம்கட்ட ஆயுதப்போர் முடிவடைந்து மௌனிக்கப்பட்டுவிட்டது, யார் இனி ஆயுதமெடுத்தாலும் இந்த பன்னாட்டுச் சமுதாயம் தீவிரவாதி என்றும் வன்முறையாளன் என்றும்தான் முத்திரை குத்தும், நமது ஆயுத போருக்குத் துணை நிற்காது, போர் மரபுகளை மீறி தடை செய்யப்பட ரசாயன ஆயுதங்களை கொண்டு எம் இனத்தையே கொன்று சுடுகாடாக ஆக்கின கொடுமையை சிங்கள இனவெறிஅரசுதான் செய்தது, எதிரிகளிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளத்தான் நாம் ஆயுதமெடுத்தொம், ''நாம் வன்முறை செய்யவில்லை'' நமக்கான மண்ணுரிமையை கேட்டோம், பல்லாதிக்க பன்னாட்டு சமுதாயங்களால் ஒடுக்கப்பட்டோம், எமது ஆயுதபோராட்டம் குற்றமல்ல ஆயுதமில்லாத அரசு இங்கே எதுவுமில்லை,
தமிழர்களுக்காக பாடுபட்ட தியாக உள்ளம் கொண்டவர்கள் பலர் இருக்கையில், திரு விக்னேஸ்வரன் அவர்களை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது என்பதை எம்மால் திட்டவட்டமாக புரிந்துகொள்ள இயலவில்லை, எது எப்படியோ.... தமிழனை ஆட்சியில் அமர்த்துவதை தமிழனின் கடமையாக கொள்வோம், அதே வேளையில் எம் இனத்தை காட்டிகொடுத்த நம்பிக்கைத் துரோகிகளை களைந்தெறிவோம்.
ஈழத்தின் விடுதலைப் போர் இப்பொழுது உலகமெங்கும் வாழுகிற 12 கோடி தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது, குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் கைகளில்தான் அது நிலைகொண்டு இருக்கிறது, தமிழன் ஆட்சிக்கு வரட்டும் நல்லது செய்தால் ஏற்போம், தீயதை செய்தால் யோசிக்காமல் அகற்றுவோம்.
நாம் நமது விடுதலைக்காக வேண்டி இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது, எந்த விடுதலை போராட்டத்திற்கும் காலத்தை நிர்ணயித்துவிட இயலாது, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், ஈழ விடுதலை என்பது நமது விடுதலை அது ஒரு தமிழ் தேசியத்தின் விடுதலை, பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 4 மில்லியன் மக்களும் அகதிகளாக பல நாடுகளில் இருந்து போராடி தமக்கான சுதந்திர நாட்டை அடைந்தார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், நம்மால் முடியும் நமது விடுதலையை வென்றெடுக்க என்ற நம்பிக்கையை மனதில் ஆழ பதிவு செய்ய வேண்டும்.
நமது ஐந்தாம்கட்ட போர் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும், ஒவ்வொருத் தமிழனும் ஈழ விடுதலை என்றே முழங்க வேண்டும், அகிம்சை வழியில் ஜனநாயக ரீதியாக நாம் முன்னெடுக்கும் இந்த போராட்டம் உலகில் எங்கும் நடந்திடாத ஒரு மாபெரும் நீதிபோராட்டமாக இருத்தல் வேண்டும், உலகில் உள்ள அனைத்து தமிழ் சமூகத்தையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக அகிம்சை வழியில் ஐ நாவை முற்றுக்கையிடும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை, அதற்காக ஒவ்வொரு தமிழனும் தயாராவோம், இலங்கை இனவெறி அரசுக்கு பாடம் புகட்டவேண்டியது நமது கடமை.
குவிக்கப்பட்டுள்ள இலங்கை அரசின் ராணுவ சிப்பாய்களுக்கு இடையில், சிங்கள பேரினவாத கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து எம் மக்கள் எப்படி சுதந்திரமாக வாக்களிக்க முடியும்? அவர்களுக்கான பாதுகாப்பை எந்த வகையில் நாம் உறுதி செய்வது? ஆளும் அதிகார அரசின் நரிபோக்குத் தனம் நிச்சயமாக இந்த தேர்தலை ஜனநாயக ரீதியாக நியமாக நடத்தும் என்ற நம்பிக்கை எமக்கு சிறிதுமில்லை, பொறுத்திருந்து பார்ப்போம், இன்றைய சூழலில் உலக நாடுகளின் உச்சக்கட்ட பாதுகாப்பு நம் மக்களுக்கு மிக அவசியம்.
நம் மக்கள் அளிக்கும் வாக்குகளை வெறும் வாக்காக மட்டும் பார்க்காமல் அது அவர்களின் உணர்வாக கருதி, தேர்தலின் வெற்றியை மக்களின் ஆணையாகக் கருதி, மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் முயற்ச்சிகளை செம்மையாகவும் உண்மையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்து, தனது அரசியலுக்கு ஆழமான அஸ்திவாரத்தை அமைத்துகொண்டால் அது வரவேற்க தக்கதே ஆகும், அந்த வெற்றி நம் அடுத்தகட்ட நகர்வுக்கான வழிகளை உருவாக்க ஏதுவாக ஏதாவது இருக்கும் என்றே நம்புகிறோம்.
-----------------------------நிலாசூரியன்.

