உங்களால் முடியும்

உங்களால் முடியும்

அன்னை திரேசா சிறுவர் பள்ளி. சின்னஞ்சிறு குழந்தைகளின் ஆரவாரமும், குதூகலமும் பள்ளிக்கூடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. இயற்கை வளங்கள் அதிகமாக உள்ளபோதும் ஒரு நாள் வருமாணத்திற்கே அலைந்து திரியும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட் இந்த கிராமத்தில் சிறுவர்கள் கற்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன் ஒரு புண்ணியவான் கட்டிவிட்டுச்சென்ற பள்ளிக்கூடம்தான் அன்னை திரேசா சிறுவர் பள்ளி. இந்த கிராமத்தில் உள்ள ஒரே ஒரு பள்ளிக்கூடம் என்பதால் இங்குள்ள அனைத்து சிறுவர்களும் இங்குதான் சேர்க்கப்படுகிறார்கள். அதுவும் பாலர் வகுப்பு வரை மட்டுந்தான்.

பாடசாலை ஆரம்பமணி ஒலிக்கிறது. மாணவர்கள் தங்களுடைய வகுப்பறையை நோக்கிச் செல்கிறார்கள். பின்னாடியே ஆசிரியரும் செல்கிறார். "வணக்கம் சார்." மாணவர்களின் வரவேற்பு ஒலி. "வணக்கம், வணக்கம்" என ஆசிரியர்களுக்கே உரித்தான பாணியில் ஆசிரியர் கூறி, சைகை மூலம் அனைவரையும் உட்காரச் செய்கிறார். பாடம் ஆரம்பிக்கிறது. "பிள்ளைகளே, இவ்வளவு காலமும் நாங்க எங்களுக்கு தேவையான ஆரம்ப கல்விய படிச்சிட்டோம். அடுத்த மாதம் உங்களுக்கு பரீட்சை நடக்கும். அதுல பாஸ் பண்ணுனா நீங்க மேல் வகுப்பு படிக்கலாம்." என ஆசிரியர் கூறி முடிக்க, ஒரு பிள்ளை எழுந்து "சார் எங்க பள்ளிக் கூடத்துலதான் மேல் வகுப்பு இல்லையே! நாங்க எங்கபோய் சார் படிக்குறது?" எனக் கேட்க, ஆசிரியரும் "நம்ம கிராமத்துல மேல் வகுப்புக்குனு ஒரு பாடசாலைய கட்டித்தாங்கனு எத்தனையோ அரசியல்வாதிங்ககிட்ட கேட்டுப்பார்த்துட்டோம். ஒவ்வொரு தேர்தல்லையும் இந்தா கட்டித்தாரோம் அந்தா கட்டித்தாரோம்னுதான் சொல்றாங்களே தவிர யாரும் கட்டித்தந்தபாடில்ல. சரி அத விடுங்க. நீங்க மேல் வகுப்பு படிக்குறதுக்கு நம்ம கிராமத்துக்கு பக்கத்துல இருக்குற டவுனுக்குதான் போகனும். அங்கதான் நிறைய ஸ்கூல் இருக்கு. அங்க நீங்க யுனிவர்சிட்டி போறவரைக்கும் படிக்கலாம். ஆனா! நீங்க அங்க சேரனும்னா நிறைய பணம் கட்டணும்." என பதிலளித்தார்.

கிராமத்தில் உள்ள ஒரேயொரு பள்ளிக்கூடம் என்பதால் அந்த கிராமத்து தலைவரின் மகனும், கிராமத்திலே உள்ள பெரிய மாந்தோப்பு உரிமையாளரின் மகனும், டவுன் வியாபாரிகளுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் வட்டிக்காரரின் மகனும் அந்த பள்ளியிலதான் படிக்கின்றார்கள். இங்கோதான் குமரனும் படிக்கின்றான். குமரன் வீட்டுக்கு ஒரே பிள்ளை. முறுக்கு சுட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பப்பிள்ளை. அம்மா தினந்தோரும் சுடும் முறுக்குகளை, அப்பா டவுனுக்கு சென்று விற்பார். அம்மா கிராமத்திலே விற்பார்.

பள்ளி முடியும் மணி ஒலிக்கிறது. பல நாட்கள் அடைத்து வைத்த புள்ளி மான்களை திறந்துவிட்டால் எப்படி ஓடிவருமோ அதேபோல் சிறுவர்களும் வகுப்பிலிருந்து துள்ளி ஓடிவருகிறார்கள். கிராமத்து தலைவரின் மகன், மாந்தோப்புக்காரரின் மகன், வட்டிக்காரரின் மகன், குமரன் இவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். எப்பவும் ஒன்றாகத்தான் வருவார்கள், போவார்கள். பள்ளியை விட்டு வெளியே வந்ததும் ஒவ்வாருவரும் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினார்கள். தலைவரின் மகன் "டேய், நான் டவுன் ஸ்கூல்ல சேர்ந்து நல்லா படிச்சு ஒரு டாக்டரா வரப்போறேன்டா." எனக்கூறி தனது டாக்கடர் உத்தியோகத்தை நினைத்து பார்க்கிறான். அதை குழப்பும் விதமாக மாந்தோப்புக்காரரின் மகன் "என்னடா பெரிய டாக்டரு.... எப்ப பார்த்தாலும் ஊசியும் மருந்துமாத்தான் இருக்கும். நான் ஒரு அக்கவுண்டனா வரப்போறேன்டா."

எனக்கூறி அவனும் தனது எதிர்காலத்தை நினைக்க ஆரம்பிக்கின்றான். உடனே வட்டிக்காரரின் மகன் "உங்களுக்கு கம்யூட்டர் தெரியுமாடா? எங்க வீட்டுல மட்டுந்தான் இருக்கு. நான் அதுல பெரிய சொப்ட்வேயர் எழுதுற ஆளா வறப்போறேன்." எனக் கூறினான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வந்த குமரன் ஒன்றுமே பேசவில்லை. "டேய், நீயேன்டா ஒன்னுமே பேசாம வாற?" என நண்பன் ஒருவன் கேட்க, "ஆ..... இல்லடா... நீங்க எல்லா பணக்கார வீட்டு புள்ளைங்க. நெனைச்சத படிப்பீங்க. என்னால முடியும?" என சோகத்தோட கேட்டான். "கவலபடாதடா எங்க அப்பாகிட்ட சொல்லி உனக்கும் சேர்த்து உதவி செய்ய சொல்றேன்" என குமரனின் நண்பர்கள் கூறினார்கள். சின்னஞ்சிறு வயது, விளையாட்டுத்தனமான ஆறுதல்களை கூறிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் வீடு திரும்பினர்.

குமரன் வீடு வந்ததும் "அம்மா.....அம்மா...." என அழைத்தான். வழக்கம்போலவே "மேசைல சாப்பாடு இருக்கு. சாப்பிடு" என அம்மாவும் கூறினார். ஆனால் குமரனோ "அம்மா.... அடுத்த மாதம் எனக்கு பள்ளிக்கூடம் முடியுது. பிறகு படிக்கனும்னா டவுன்வ இருக்குற ஸ்கூல்லதான் சேறனுமாம். எங்க சார் சொன்னாரும்மா." என கூறினான். அம்மாவும்" அப்படியா" என கேட்டார். பாவம் அவளுக்கு தெரியும் தன் குடும்பம் படும் கஷ்டம். அவள் என்ன செய்வாள். குமரனும் வேறெதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு விளையாடச் சென்றுவிட்டான். மாலை நேரம். அப்பாவும் வீடு திரும்பினார். சிறிது நேரத்தின் பின் மூவரும் இரவுச் சாப்பாட்டிற்காக அமர்ந்தனர். "அப்பா அடுத்த மாதம் எனக்கு பள்ளிக்கூடம் முடியுதாம்பா" என குமரன் கூற "தெரியும்பா... அம்மா சொன்னாங்க." என்று அப்பா கூறி முடித்தார். அதற்கு "அப்பா என்னையும் டவுன் ஸ்கூல்ல சேர்த்துவிடுவீங்களா?" என குமரன் கேட்டபோது, ஒரு நாளைக்கு டவுன்ல முறுக்கு விற்றால் ரூபா 500 தொடக்கம் 800 வரைதான் கிடைக்கும். இந்த வருமாணத்த வைச்சுக்கொண்டு எப்படி ஸ்கூல்ல சேர்றது என்ற எண்ணம்தான் அப்பா மனசுல தோன்றிற்று. குமரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார். பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தாலும் பணம் நிறைய வேண்டுமே. "என்னப்பா யோசிக்கிறீங்க? எனைய ஸ்கூல்ல சேர்க்க மாட்டீங்களா? என மீண்டும் குமரன் கேட்டான். "குமரா, ஸ்கூல்ல சேர்க்கலாம். ஆனா அதுக்கு நிறைய பணம் செலவாகுமே. நாங்க எங்கபோய் அவ்வளவு பணத்த எடுக்குறது!" என அப்பா தங்களுடைய குடும்ப நிலவரத்தை கூறினார். உடனே குமரன் "அப்பா என்னுடைய நண்பர்கள் அவங்க அப்பாகிட்ட சொல்லி பணத்துக்கு ஏற்பாடு செய்றோம்னு சொல்லியிருக்காங்க. நீங்க அவங்ககிட்ட கேட்டுப்பாருங்க." என்றான். சிறுவர்கள் கூறியதை அப்படியே அப்பாவிடம் கூறினான் குமரன். சிறுபிள்ளைகள் விளையாட்டுத்தனமாக கூறியிருக்கிறார்கள் என்று அப்பாவிற்கு தெரியும். அதற்குமேல் எதுவும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு நித்திரைக்கு சென்றுவிட்டார்.

காலை விடிந்தது. வழக்கம்போல குமரன் பள்ளிக்கு சென்றுவிட்டான். வீட்டில் அப்பா ஒரே யோசனையாக இருந்தார். "என்னங்க யோசிக்கிறீங்க?" என அம்மா கேட்க, "இல்லஈ நம்ம புள்ளைய படிக்க வைக்கனும் ஆசைதான்....!" என இழுத்தார். அதற்கு அம்மா "ஏங்க குமரன் சொன்ன மாதிரி அவன்ட நண்பர்கள்ட அப்பாகிட்ட உதவி ஏதாவது கேட்டுபார்த்தா?" என்று ஒரு வினாவை எழுப்பினாள். "அதபத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்." என்று கூறிய அப்பாவிடம் "நம்ப பையன் படிக்குற வரைக்கும் உதவி செய்ய சொல்லுவம். அவன் நல்லா படிச்சு நல்ல பெரியாளா வந்த பிறகு, அவங்க செலவு பண்ணுன பணத்தை வட்டியும் முதலுமா திருப்பி கொடுத்திடுவம்." என்று அம்மா கூறினார். "சரி. நான்போய் தலைவர்ட முதல்ல கேட்டு பாக்குறேன்." எனக்கூறி வெளியே சென்றார் அப்பா.

தலைவரின் வீடு. கிராமத்திலேயே சொர்க்க வீடு என்றாவ் அது இதுதான். ஆடம்பரமாக எதுவும் இல்லை என்றாலும் தேவையான வசதிகளுடன் கிராமத்தில் இருக்கும் பெரிய வீடு இதுதான். வாசலிலே குமரனின் அப்பா நிற்கிறார். தலைவரின் வீட்டு வேலைக்காரன் அவர் வாசிலிலே நிற்பதை பார்த்து "என்ன? என்ன வேணும்?" எனக் கேட்டான். "கொஞ்சம் தலைவர பாக்கனும்." என்றார் அப்பா. "கொஞ்சம் இருங்க" என்று கூறி உள்ளே சென்ற வேலைக்காரன் சிறிது நேரத்தின் பின் வந்து "உங்கள தலைவர் வரட்டுமாம். வாங்க." என்று அழைத்தான். உள்ளே சென்றதும் "வணக்கம் தலைவரே" என்று அப்பா கும்பிட்டார். "யாரு... நம்ம குமரன்ட அப்பாவா?" என தலைவர் கேட்டார். குமரனும் தலைவரின் மகனும் அடிக்கடி தலைவரின் வீட்டில் ஒன்றாக விளையாடுவார்கள். அதனால் குமரனை தலைவருக்கு நன்றாகத் தெரியும். "ஆமாம் தலைவரே" என பதிலளித்தார் குமரனின் அப்பாவிடம் "சொல்லுங்க என்ன செய்யனும்?" என்று தலைவர் கேட்டார். "தலைவரே நம்ம பசங்களுக்கு அடுத்த மாதம் பள்ளிக்கூடம் முடியுது. மேல படிக்க டவுன் ஸ்கூல்ல சேர்க்கனும். ஆனா அந்த அளவுக்கு எங்ககிட்ட பணம் இல்ல. நீங்க பார்த்து ஏதாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும். என் மகன் படிச்சு முடிச்சு பெரியாளா வந்த பிறகு நீங்க செலவு பண்ணுன பணத்தை வட்டியோட சேர்த்து திருப்பி தந்திடுவேன். எப்படியாவது உதவி செய்க ஐயா." என்று கேட்டார். அதற்கு தலைவர் கொஞ்சம் யோசித்தப்படி "இங்க பாருப்பா... நம்ம கிராமத்து பசங்க நல்லா படிச்சு பெரியவங்களா வரணும்கிறது என்னோட ஆசையும்தான். அதுக்கு என்னால என்ன செய்ய முடியுமோ அத நான் செஞ்சுக்கிட்டுதான் இருக்கேன். போன வாரம் கூட எங்க மினிஸ்டர பார்த்து உதவி கேட்டிருக்கேன். அது மட்டுமில்ல அடுத்த வருஷம் இலக்ஷனும் வருது. நம்ம மினிஸ்டர் என்னதான் நிக்கனும்னுவேற சொல்லியிருக்காரு. ரொம்ப செலவுகளும் இருக்கு. என்ன பண்றது! ஸ்கூல்ல சேக்குறதுனா சும்மாவா. என்னட இருக்குற பணம் என் மகனுக்கே போதுமானு நான் யோசிக்கிறேன்! எனக்கும் என்ன பண்றதுனு தெரியல." என்று கூறினார். தலைவரிடம் பணம் உள்ளபோதும் மனம் இல்லை என்பதை உணர்ந்த அப்பா "சரிங்க பரவாயில்ல" என்று கூறியபடி வெளியே வந்தார்.

இந்த கிராமத்தில் உள்ள பணக்காரரான மாந்தோப்பு உரிமையாளரிடம் கேட்டுப்பார்ப்போம் என்று அவரிடம் சென்றார் அப்பா. அவரும் " என் மகன் பள்ளிகூடம் முடிச்சதும் நான் என் மாந்தோப்ப வித்துட்டு டவுனுக்கே போயிடுவேன். அங்க எனக்கு ரெண்டு வீடு இருக்கு. அங்கபோய் செடுலாயிடுவேன். உங்களுக்கே தெரியும் டவுன்ல தொட்டதுக்கெல்லாம் காசு கேப்பாங்க. எனக்கு நிறைய செலவுகள் இருக்கும். அதனால குமரன்ட படிப்புக்கு ஒன்னுமே செய்ய முடியாது. வேணும்னா என்ட மாந்தோப்ப வாங்கப்போறவர்ட்ட சொல்லி அந்த தோப்புலயே குமரனுக்கு ஒரு வேலய ஏற்பாடு செஞ்சுதாறேன். நல்ல சம்பளமும் குடுக்கசொல்றேன். என்ன சொல்றீங்க?" எனக்கேட்டார். "இல்லைங்க பாருவாயில்லை. ரொம்ப நன்றி" எனக் கூறிவிட்டு அப்பாவும் வந்துவிட்டார்.

கடைசியாக வட்டிக்காரரிடம் சென்றார். அவரும் "டவுன்ல ஏகப்பட்டபேரு என்னட கடன வாங்கி வட்டியும் கட்டாம ஏமாத்திடாங்க. பெரிய பெரிய பிஸ்ணஸ் பார்ட்டிகளே வட்டி கட்ட முடியாம தடுமாறிக்கிட்டு இருக்காங்க. நீங்க முறுக்கு சுட்டு விக்குறவங்க. உங்களால எப்படிங்க முடியும். அப்படியே உங்க மகன் படிச்சு முடிச்சு பெரியாளா வந்தாலும் அதற்கு பிறகு அவன் உழைக்குற பணம் முழுக்க வட்டிக்கே சரியாபோயிடும். அப்படியிருக்க என் முதலுக்கு என்ன செய்வீங்க. என்னால முடியாது." என முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்.

வேறு வழியின்றி குமரனின் அப்பா வீடு திரும்பினார். அங்கே அம்மா "ஏதாவது கிடைத்ததா?" என கேட்டாள். அழாத குறையாக கையை விரித்துக்காட்டியபடி கதிரையில் அமர்ந்தார் அப்பா. பள்ளிவிட்டு வந்த குமரனும் ஸ்கூல் விடயத்தை கேட்க அவனிடமும் ஏதோ சாக்குபோக்கு கூறி சமாளித்துவிட்டார் அப்பா.

மாதமும் முடிவடைந்தது. பரீட்சையும் நடைபெற்றது. இன்று பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம். சிறுவர்கள் அறிவித்தல் பலகையை பார்த்த வண்ணம். சிறிது நேரத்தின் பின் குமரன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தான். காரணம் பள்ளிக்கூடத்திலேயே அதிக புள்ளிகளை பெற்ற மாணவன் அவன்தான். ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. குமரனைவிட குறைந்த புள்ளிகளை பெற்ற பிள்ளைகள் புத்தகப்பையுடன் டவுன் நோக்கி ஸ்கூலுக்குச் சென்றனர். ஆனால் குமரனோ முறுக்கு பையுடன் டவுன் நோக்கி வியாபாரத்திற்கு சென்றான் அப்பாவுடன்.

ஸ்கூல் வாசலிலே முறுக்கு விற்றுக்கொண்டிருந்த குமரனை நண்பர்கள் பார்த்துவிட்டு குமரனிடம் வந்து ஆறுதல் கூறி அவனிடம் சில முறுக்குகளை வாங்கி பணத்தையும் கொடுத்தனர்.

வீடு திரும்பிய குமரனும் அப்பாவும் அன்றைய வருமானத்தை அம்மாவிடம் கொடுத்தனர். சிறிது நேரத்தின் பின் குமரன் "அம்மா..... நான் கொடுத்த பணத்தில் பத்து ரூபாய தரமுடியுமா?" என்று கேட்டான். அம்மாவும் பணத்தை கொடுத்தபடியே "ஏன் ஏதாவது வாங்கப்போறியா?" எனக் கேட்டாள். பதில் எதுவும் சொல்லாத குமரன் வாங்கிய பணத்தை தனது உண்டியலிலே போட்டான். ஆச்சரியத்தோடு பார்த்த அப்பா "என்ன உனக்காக இப்பவே சேமிக்க ஆரம்பிச்சிட்டீயோ?" என சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு குமரன் "இல்லப்பா.... என்னமாதிரியே எத்தனையோபேர் படிக்க வசதி இல்லாம இருப்பாங்க. அவங்களுக்கு உதவுரத்துக்கு என்னால முடிஞ்ச சிறு உதவி. தினமும் கொஞ்ச பணத்த சேமிச்சா பிறகு அது பெரிய தொகையா வரும். அத அவங்களுக்கு குடுக்காலாம்." என்று கூறினான்.

அந்த சிறுவனின் உள்ளத்தில் எழுந்த அந்த நல்ல எண்ணம் கிராமத்து தலைவரிடமே, பண்காரரிடமோ, வட்டிக்காரரிடமோ வந்திருந்தால் இன்று குமரனும் ஒரு பட்டதாரி ஆகியிருப்பான்.

நாம் ஏன் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எண்ணவேண்டும். எம் சகோதரர்களின் கல்விக்கு எங்களால் முடிந்தை இன்று முதல் செய்வோம். நாம் ஒவ்வொருவரும் இதை செய்தால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம். உங்களால் முடியும்.

எழுதியவர் : சித்திரவேல் சுந்தரேஸ்வரன (20-Sep-13, 10:40 pm)
பார்வை : 351

மேலே