சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி (அறிமுகம்)

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிக உடையவன். இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வரலாற்று ஆசிரியர்கள் உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் ஒருவனே எனப்படுகிறது.

கரிகால் வளவனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கரிகால் வளவன் இறந்த பிறகு, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான்.

மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. இமயவரம்பனுக்கும் அவனது மற்றொரு மனைவி தேவிக்கும் பிறந்த இரு மகன்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆவார்கள்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு, சேர நாட்டை, அவன் தம்பி பல்யானை செல்குழுக் குட்டுவன் என்பவன் ஆண்டதாகவும், அவனுக்குப் பிறகு, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் சேர நாட்டை ஆண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்குப் பிறகு, கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவன் சேர நாட்டை ஆண்டதாகக் கூறப்படுகிறது. அவனுக்குப் பிறகு, ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் சேர நாட்டை ஆண்டதாகவும் கூறப்படுகிறது.

போர் வன்மையுடைய சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் பெருநற்கிள்ளி என்ற சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் மண்ணாசையின் விளைவாகப் போர் உண்டாயிற்று. கழாத்தலையார் என்ற சான்றோர் சேரலாதன் போர்க்களத்திலிருப்பதை அறிந்து அவனைக் காண்பதற்கு போர்க்களம் சென்றார். அங்கு சென்று காணும்போது இரு வேந்தர்களும் பொருது விழுப்புண் பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்கும் தருவாயிலிருப்பதைக் கண்ட அச்சான்றோர், அவன் புகழ் பாடி வியக்க, அவன் தன் கழுத்திலிருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ் பெற்றான். சிறிது நேரத்தில் அவன் உயிரும் நீங்கிற்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-13, 11:51 am)
பார்வை : 181

மேலே