சரிதாவும், நம்பியாரும்!

பொதுவாக சரிதா விருப்பங்கள் அதிகம் இல்லாதவள். ஆனால் சில சமயங்களில் அவளுக்கு ஏற்படும் விருப்பங்கள் விபரீதமாகி, என் பேங்க் பேலன்ஸுக்கு உலை வைப்பது வழக்கம். அப்படி என்னதான்யா அவள் விருப்பப்பட்டு அடம் பிடித்துவிடப் போகிறாள் என்றுதானே நினைக்கிறீர்கள்..? சென்ற வாரம் நடந்த (சோகக்)கதையைக் கேளுங்கள்... புரிந்துவிடும்!

‘‘ஹப்பா... என்னா வெயில்... என்னா வெயில்...’’ என்று முனகியபடி ஃபேனைச் சுழலவிட்டு அதன் கீழிருந்த ஃசோபாவில் சரிந்தேன். ‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது. நான் பணிந்தால் எகிறுவதும், எகிறினால் பணிவதும் அவள் வழக்கம் என்பதால் ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள்.

‘‘அடராமா... என்னிக்கு நான் சொல்ற விஷயத்தை நீங்க சரியாப் புரிஞ்சுட்டிருக்கீங்க இப்ப புரியறதுக்கு? ஒரே வெக்கையா இருக்கே... ஒரு ஏ.சி. மெஷின் வாங்கிப் போடுங்கன்னுதானே கேட்டுட்டிருக்கேன். நம்ம அக்கம் பக்கத்து வீட்ல எல்லார்ட்டயும் இருக்கு தெரியுமா? நம்ம வாசனுக்குத் (அவள் தம்பி) தெரிஞ்ச கடை ஒண்ணு இருக்காம். டிஸ்கவுண்ட்ல வாங்கித் தர்றேன்... நமக்கு நாலாயிரம் மிச்சமாகும்ங்கறான்...’’

‘‘வாசனா...? அவன் எனக்கு நாலாயிரம் மிச்சம் பண்ணினா, அதுக்குப் பின்னால நாப்பதாயிரத்துக்குச் செலவு வெச்சிருப்பானே...’’ என்றேன். ‘‘ஹும்... அவனானா அக்கா, அத்திம்பேர்னு உசிர விடறான். உங்களுக்கானா அவனைக் கண்டாலே இளக்காரம்தான். எங்க வீட்டு மனுஷாளை எப்ப மதிச்சிருக்கீங்க நீங்க...’’ என்று ஆரம்பித்தாள் கடூரமான குரலில். வேறென்ன... ‘‘சரிம்மா... ஆஃபீஸ்ல என்னை வந்து பாக்கச் சொல்லு. செக் தர்றேன். உடனே ஒண்ணு வாங்கிரலாம்’’ என்று (வழக்கம் போல) நான் சொல்வதில் முடிந்தது அது.


‘‘என்னங்க... நானும் வாசனுமாப் போயி ஏ.ஸி. மெஷின் வாங்கிட்டு வந்துட்டோம். அதை ஃபிட் பண்றதுக்கு ஆளுங்களை அனுப்பறேன்னாங்க. கொஞ்சம் பர்மிஷன் போட்டுட்டு உடனே வாங்களேன்...’’ என்று செல்போனில் பேசிய சரிதாவின் குரலில்தான் எத்தனை இனிமை! உடனே கிளம்பி வந்த எனக்கு, என் வீட்டில்தான் நுழைகிறேனா என்று சந்தேகமே வந்துவிட்டது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் வரவழைத்து தான் ஏ.ஸி. மெஷின் வாங்கிவிட்ட பிரபாவத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். ஏதோ பெண் பார்க்க வந்தவர்கள் மாதிரி அவர்களுக்கு பக்கோடா, (நெய் மணக்க) கேசரி என்று உபசாரம் வேறு. சரிதான்... இந்த யானையை வாங்கியதால் இன்னும் எத்தனை அங்குசங்களுக்குச் செலவு பண்ணப் போகிறேனோ என்று (அவற்றைச் சாப்பிடாமலேயே) எனக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏ.ஸி. மெஷின் பொருத்தித் தருவதற்காக இரண்டு மெக்கானிக்குகள் வந்தனர். ஹாலில் எங்கே மாட்ட வேண்டுமென்று சரிதா சொல்ல, வேலை செய்து கொண்டிருந்த அவர்களிடம் ஏ.ஸி. மெஷின் என்ன லெவல் கூலிங்கில் வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருந்த சமயம் பார்த்துத்தானா சரிதா அக்கம்பக்கத்தினரை அனுப்பிவிட்டு உள்நுழைய வேண்டும்? ‘‘டேய் வாசா... இவங்க கிட்ட ஏ.ஸி. மெஷின் பத்தின எல்லா விஷயத்தையும் நல்லாக் கேட்டுக்கோடா... உங்கத்திம்பேருக்கு அவ்வளவு சமத்து(?) பத்தாது’’ என்று உரக்க அவள் சொல்ல, அந்த ஏ.ஸி. மெக்கானிக் என்னை காக்காய் கொண்டு வந்து போட்ட வஸ்துவைப் போலப் பார்த்தான். அவ்வ்வ்வ்வ்! என்று புலம்பியபடி இடத்தைக் காலி செய்தேன்.

சற்று நேரத்தில் அவர்கள் சென்றதும், என்னமோ காஃன்பரன்ஸில் நலத்திட்டங்களை திறக்கும் முதல்வர் போல வாசன் பெருமையாய் ரிமோட்டைக் கையில் ஏந்தி ஏ.ஸி.யை ஆன் செய்ய, சரிதா கைதட்டினாள். அப்போது வாசனின் செல்ஃபோன் ‘‘ஊதா கலரு ரிப்பன்’’ என்று உரக்க அலறியது. ‘‘டேய், அவருக்கு இப்படி கண்ட பாட்டையும் ரிங்டோனா கத்தவிடறது பிடிக்காதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். வீட்ல வந்தா செல்லை ‘மன்மோகன்’ மோடில போட்டுத் தொலையேண்டா’’ என்று சரிதா (அவனையும்) திட்ட, அவன் தன் அப்பா அம்மாவிடம் ஏ.ஸி. வந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான். அப்புறமென்ன...

வேறொரு வேலையாக வெளியில் சென்ற நான் இரவு வீடு திரும்பியபோது ஏ.ஸி. மெஷினிலிருந்து இரண்டு ரம்பங்கள் உரசிக் கொள்கிற தினுசில் ‘கொர்’ என்று பெருத்த சப்தம் வந்து கொண்டிருக்க... மிஷினுக்குக் கீழே வெள்ளையாய் ஒரு மூட்டை தெரிந்தது. ‘‘சரிதாம்­மா... ஏ.ஸி. மெஷினுக்கு என்னமோ ஆய்டுச்சு. வினோதமா சத்தம் போடுது பாரு’’ என்று பயந்து சத்தமிட்டபடி அருகில் சென்று பார்த்தால்... அடக்கடவுளே... மரவட்டை போல உடலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்த சரிதாவின் அப்பாவின் வெள்ளை பனியன், வேஷ்டிதான் எனக்கு மூட்டை மாதிரி தெரிந்திருக்கிறது. அந்த ரம்ப சத்தம் அவரிடமிருந்தல்லவா வந்து கொண்டிருக்கிறது! இலவச இணைப்பாக என் மாமியாரின் குரலும் சமையலறையிலிருந்து என்னை வரவேற்றது!

அன்னிக்கு ஆரம்பிச்சதுங்க... அடு¢த்து வந்த வாரம் முழுக்க தான் ஏ.ஸி. வாங்கி விட்ட பெருமை(!)யை விதவிதமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சரிதா. உதாரணத்துக்கு... செல்லில் வந்த காலை அட்டெண்ட் பண்ணினால், ‘‘அதுவாடி... புதுசா ஏ.ஸி. போட்ருக்கோம்ல. அதனால ரிங் அடிச்ச சத்தமே காதுல விழல...’’ என்று ஆரம்பிப்பதும், இவளாகவே கால் செய்து ‘‘இப்பல்லாம் ஏ.ஸி.யிலயே புழங்கிட்டு, நான் ஏ.ஸி.யில சினிமா பாக்கக் கூட முடிய மாட்டேங்கறது’’ என்று செல் பேச்சை முடிப்பதும் ஆக, சரிதா டமாரம் பலமாக இரைய ஆரம்பித்தது-... ‘இவளுக்கு ஏன்டா செல்ஃபோன் வாங்கித் தந்தோம்’ என்று நான் சலித்துக் கொள்ளுமளவுக்கு. (செல்போன் வாங்கிப் பட்ட அவஸ்தை தனிக்கதை).

‘‘ஏங்க... ஏ.ஸி. ரூம்ல இவ்ளோ பெரிய பீரோ இருந்தா இடைஞ்சலா இருக்கு. ரூம் நல்லாக் கூல் ஆக மாட்டேங்கறது. இதை நகத்தி முன் ரூம்ல போடுங்க...’’ என்று ஆரம்பித்து அடுத்த ஒரு வாரம் என்னை முதுகு அடிமைப்பெண் எம்.ஜி.ஆர். போல வளைந்து போகுமளவுக்கு வீட்டை ரீஅரேன்ஜ் பண்ணுகிறேன் பேர்வழியென்று ‘ட்ரில்’ வாங்கினாள். அவளுக்கு ஏ.ஸி. மெஷின் கூலாக இருக்க, எனக்குள்ளே எழுந்த உஷ்ணத்தில் அது ‘எம்.என்.நம்பியார்’ மாதிரி தெரிய ஆரம்பித்தது எனக்கு.

அந்த மாதக் கடைசியில் கணக்கு வழக்குப் பார்த்தபோது கன்ஃபர்ம்டாகத் தெரிந்து போனது அது நம்பியார்தானென்று! சரிதா செல்போனில் அனைவரிடமும் தன் ஏ.ஸி. பெருமை(!) பேசியதில் செல்ஃபோன் பில் இரண்டு மடங்காகி விட்டிருந்தது. ஏ.ஸி.யை தரிசிக்க(?) வந்த அவள் தோழிகள், உறவினர்கள், அக்கம்பக்கத்தவர்கள் எல்லாருக்கும் தாராளமாக டிபன், ஸ்வீட் செய்து வழங்கியதில் மளிகை பில் இரண்டு மடங்காகி, என்னை விழி பிதுங்க விட்டிருந்தது. அவள் குடும்பம் இடத்தை அடைத்துக் கொண்டதே என்று ஏ.ஸி. ஹாலை அவர்களுக்கு வழங்கிவிட்டு, நான் முன் ரூமில் ஃபேனில் படுத்துக் கொண்டது தப்பாயிற்று. ÔÔஏ.ஸி. ரூம்ல இருக்கறச்ச யாராவது கதவு தட்டினாலும் கேக்கறதில்ல. காலம்பற பால்காரன் பால் போடறதுகூடத் தெரிய மாட்டேங்கறது. நீங்க முன் ரூம்லயே இருந்தா இதெல்லாம் கரெக்டாப் பாத்துக்கறீங்க... இதையே மெயின்டைன் பண்ணுங்களேன்ÕÕ என்று கூலாக அவள் உத்தரவிட... அவ்வ்வ்வ்வ! ஏ.ஸி. எனக்கு எட்டாக்கனி ஐயா...!

இப்போது புரிகிறதா உங்களுக்கு... சரிதா புதிதாய் எதன் மேலாவது ஆசை வைத்தால் நான் ஏன் அலறுகிறேன் என்பது...! அதுசரி... உங்கள் வீட்டில் ‘நம்பியார்’ உண்டா?

எழுதியவர் : (28-Sep-13, 12:14 pm)
பார்வை : 75

சிறந்த நகைச்சுவைகள்

மேலே