!!!===(((கதிரேசன், காமாட்சி, வள்ளி,)))===!!!

இடி முழங்கும் வேட்டுச் சத்தம் அசரீரியாய் மரண ஓலம்,

ஓயாத அலைகளாய் காதை கிழிக்கும் கண்ணீர் கதறல்கள்,

வீதிகளும் விளைநிலங்களும் நார் நாராய் கிழிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் சிதைந்துபோய் கிடந்தன,

புகை மூட்டங்களுக்குள் ரத்தமும் சதைகளுமாய் சிதறிக்கிடக்கும் பிணங்கள்,

அச்சமும் அழுகுரளுமாய் பிணக்குவியல்களுக்கிடையில் பிழைத்துக்கொள்ள முயற்ச்சித்து குற்றுயிரும் குலையுயிருமாய் அரை பிணங்களாய் மரணத்தின் விளிம்பில் பலர்,

எறிந்த மரங்கள் எலும்பு கூடுகளாய்,
இடிந்த வீடுகள் உடைந்த தடையங்களாய் - ஒரு பூர்வீக வரலாறு சிதைந்துகொண்டு இருந்தது.

அன்டவும் ஒன்டவும் இடமின்றி, பதுங்கு குழிகளில் பல்லாயிரம் மக்கள் உயிரோடு உயிரை விட்டுக்கொண்டு இருந்தனர்.

ஆடு மாடுகளும், கோழி கொக்குகளும் வெறிபிடித்த மனித மிருகங்களின் எறிகணை வீச்சுகளில் கரிகட்டைகளாகி கிடந்தன,

வானூர்தி கொத்துக் குண்டுகளிடமிருந்து தப்பிக்க நினைத்து பலர் பதுங்கு குழிகளுக்குள்ளேயே பலியாகிப் போயினர்,

தாயைத் தேடி குழந்தையும், குழந்தையைத் தேடி தாயும், கணவனைத்தேடி மனைவியும், மனைவியைத் தேடி கணவனும், மகளைத் தேடி தந்தையும், தந்தையைத் தேடி மகளும், உறவுகளைத் தேடி உறவுகளும் - இப்படி பிண பிரதேசத்தில் தொடரும் தேடல்களுக்கிடையில் தொடர் மரணங்கள்.

எப்பொழுது குண்டுமழை பொழியுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் வானை வெறித்தே நகர்ந்துகொண்டு இருந்தது பலரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்.

தனது நாட்டு மக்களையே கொன்று ஒழித்துக் கொண்டிருந்த ராணுவ தாக்குதலுக்கிடையில், தனது உறவுகளையும், தனது வீட்டையும், தனது விளைநிலங்களையும் இழந்துபோன கதிரேசன், உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது மனைவியையும், ஒரு 14 வயது பெண் பிள்ளையையும் கையில் பிடித்துக் கொண்டு உயிரைக்காப்பாற்றிகொள்ள ஏதோ ஒரு திசையில் நடந்துகொண்டு இருந்தார்.

அவர்கள் எதை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியவில்லை, அவர்களைப்போல் பலரும் மூட்டை முடிச்சுகளை சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு நடந்துகொண்டு இருந்தனர்.

கரடு முரடும், குண்டும் குழியுமாகவும் கிடந்த பாதையில் நீண்ட தூரம் நடந்ததனால் கதிரேசனும் அவரது மனைவி காமாட்சியும் சோர்ந்துப் போனார்கள், எப்பொழுது குண்டுமழைப் பொழியுமோ என்ற அச்சம் வேறு அவர்களின் அடிமனதை மனதை துளைத்துக் கொண்டே இருந்தது,

ஒவ்வொருவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மறைவிடங்கள்த் தேடி ஓடிக்கொண்டு இருந்தனர், இதில் யார் யாரை காப்பாற்றுவது? ஒவ்வொருவரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே இயலாத காரியமாக இருந்தது அந்த சூழல்.

கதிரேசனும், அவரது மனைவி காமாட்சியும், அந்த பெண் பிள்ளையும் நடக்க சக்தியற்று நடந்துகொண்டு இருந்தனர், அவர்கள் சாப்பிட்டு எத்தனை நாள் ஆனதென்று அவர்களுக்கேத் தெரியவில்லை, வயிறு ஒட்டி உள்ளேப்போய் கிடந்தது.

அப்படியே அசைந்து அசைந்து நகர்ந்துகொண்டு இருந்தார்கள்,

என்னங்க.... என்னால முடியலிங்க, ஒரே தாகமா இருக்கு என்றால் காமாட்சி.

அவள் பசியைத்தான் தாகம் என்று சொன்னாள், பசிக்கிறது என்று அந்த சூழலில் அவளால் சொல்ல இயலவில்லை.

இன்னும் கொஞ்ச தூரம் பொருத்துகம்மா... அதோ அங்க மரம் தெரியுதே... அங்கே எதாச்சும் குட்டை குளம் இருக்கும், அங்க போய் தண்ணி குடிக்கலாம் என்றார் கதிரேசன்.

அதிலிருந்து ஒரு ஐம்பது மீட்டர் தூரம் நடந்து இருப்பார்கள், அப்பொழுது கதிரேசனின் மனைவி காமாட்சி தொப்பென்று கீழே விழுந்தாள்.... இதை கண்ட கதிரேசன் பதறிபோய் அவளை தூக்கி மடியில் கிடத்தி காமாட்சி.... காமாட்சி.... என்று அவள் தலையை கோதிவிட்டவாறே அழைத்தார்....

கண்களை லேசாக திறந்த காமாட்சி தனது வரண்டுபோன வாயைத் திறந்து ஏதோ பேச முற்பட்டாள் ஆனால் முடியவில்லை.... திரும்பவும் கண்களை மூடிக்கொண்டாள்.

உடனே கதிரேசன் அவளைத் தூக்கிக்கொண்டு அந்த பெண் பிள்ளையை அழைத்துக்கொண்டு அவசரமாக நடந்தார், அவரால் அவளை சுமக்க இயலவில்லை, ஆனாலும் தனது மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்ற எண்ணத்தில் அவளை சுமந்துகொண்டு கால் நடு நடுங்க கஷ்டப்பட்டு நடந்துகொண்டு இருந்தார்,

அந்த வழியே அவர்களை கடந்து சென்றவர்கள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால்... ஒவ்வொருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் அவசரத்தில் சென்றுகொண்டு இருந்தார்கள்,

யாரும் யாருக்காகவும் அழ இயலவில்லை, ஏனென்றால்... எல்லோருமே அழுதுகொண்டு இருந்தார்கள்,

யாரும் யாருக்கும் உதவ இயலவில்லை, ஏனென்றால்... எல்லோருக்குமே உதவி தேவைப்பட்டது.

கஷ்டப்பட்டு ஒரு மரத்து நிழலுக்கு வந்த கதிரேசன், அங்கே காமாட்சியை கிடத்திவிட்டு இங்கேயே இருங்கள் நான் தண்ணீர் கொண்டு வருகிறேன் என்று, 14 வயது பெண் பிள்ளையிடம் கூறிவிட்டு பாலீத்தீன் பையில் இருந்து ஒரு சிறு ஈயக் குண்டானை எடுத்துக்கொண்டு ஒரு திசையை நோக்கி நடந்தார்.

பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்ட நிலையில் குண்டானில் தண்ணீருடன் கதிரேசன் அந்த மரத்தடிக்கு வந்து சேர்ந்தார், அங்கே காமாட்சி மட்டும் அப்படியே கிடந்தாள், 14 வயது பெண் பிள்ளையை காணவில்லை, எங்கே போயிருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தார் அந்த சிறுமியை காணவில்லை, கலவரம் கலந்த மனதோடு முதலில் மனைவிக்கு தண்ணீர் கொடுப்போம் பிறகு அவளைத் தேடலாமென்று, கீழே படுத்திருந்த மனைவியை எழுப்பினார்.

காமாட்சி... காமாட்சி... எழுந்து தண்ணி குடிமா... தண்ணி கொண்டு வந்துட்டேன் என்றார்.

ஆனால் காமாட்சியிடமிருந்து எந்த அசைவுமில்லை, குனிந்து கன்னத்தில் மென்மையாக தட்டி எழுப்பினார் அப்பொழுதும் அவள் கண் திறக்கவே இல்லை, கதிரேசனுக்கு திடுக்கென்று தூக்கிவாரி போட்டது, வாயில் தண்ணீர் ஊத்தலாமென்று வாயை திறக்க முயன்று பார்த்தார், மேக்கடை பற்களும், கீழ்கடை பற்களும் ஒன்றோடொன்று திறக்கவே முடியாமல் வலுவாக ஒட்டிக்கொண்டு விட்டது, எப்படியாவது வாயை பிளந்து தண்ணீரை ஊற்றினார் கதிரேசன், ஊற்றிய தண்ணீரெல்லாம் இரண்டு கடைவாய் வழியிலும் வெளியேறிக்கொண்டு இருந்தது.

ஐயோ... காமாட்சி என்னை தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டியேடி... என்னையும் உன் கூடவே கூப்டுகிட்டு போயிருக்கக்கூடாதா.... நீ இல்லாம இனிமே நான் எப்படிடி வாழப்போறேன்.... 60 வருசமா என் கூட இருந்துட்டு இப்ப என்னை மட்டும் விட்டுட்டு போயிட்டியே என்று வாய்விட்டு கதறி அழுதார் கதிரேசன்....

அப்பொழுது பக்கத்தில் இருந்த புதரில் யாரோ முனகுற சத்தம் கேட்டது... அப்பொழுது கதிரேசனுக்கு தனது பெயர்த்தி வள்ளி நியாபகம் வந்துவிட... உடனே அந்த முனகல் சத்தம் வந்த திசையை நோக்கி எழுந்து நடந்தார்....

அங்கே புதரின் மறைவில் வள்ளியை ஒரு ராணுவ சிப்பாய் கொடுமையாக புணர்ந்துகொண்டு இருந்தான், அவள் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் அவளால் கத்தகூட இயலவில்லை.... இதை கண்டு நிலை குலைந்துபோன கதிரேசன்... அய்யா என் பேத்தியை விட்டுடுங்க அய்யா... அவ சின்ன பிள்ள அய்யா... பச்ச மண்ணு அவளுக்கு ஒன்னும் தெரியாது அவள விட்டுடுங்க... என்று கூறி அந்த ராணுவ சிப்பாயின் கையை பிடித்து இழுத்தார்....

காம வெறியில் இருந்த அந்த காமுகன் பக்கத்தில் கிடந்த துப்பாக்கியை எடுத்து கதிரேசனின் நடு மண்டையில் ஓங்கி ஒரே போடு போட்டான், ரத்தம் பீரிட்டு ஒழுகியது கதிரேசன் அப்படியே மயங்கி மண்ணில் சரிந்தார்....

மீண்டும் அந்த காமுகன் வள்ளியை புணரத் தொடங்கினான், அவள் துடி துடித்தாள்... கதறினாள்... திமிறினாள்... ஆனாலும் அவனின் பிடியில் இருந்து அவளால் விடுபட இயலவில்லை... பருந்திடம் மாட்டிகொண்ட கோழி குஞ்சியாய் அப்படியே அவளும் தன் சுய நினைவு இழந்து மயக்கமாகிவிட்டாள்...

வெறி அடங்கிப்போன களைப்பில் எழுந்த அந்த காம மிருகம்... தனது துப்பாக்கியால் அவளது நடு நெற்றியில் ஈவு இரக்கமின்றி ஒரு தோட்டாவை பாய்ச்சி அவளை கொன்று ஒழித்தது.

தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்டதும் மயங்கிகிடந்த கதிரேசன் விழித்துப் பார்த்தார், அங்கே தனது பெயர்த்தி வள்ளி பிணமாகிக் கிடந்தாள்....

எங்கிருந்து அப்படி ஒரு கோபம் கதிரேசனுக்கு வந்ததோத் தெரியவில்லை... பட்டெனெ எழுந்த கதிரேசன்....

சண்டாளப் பாவி... பச்சப்பிள்ளைய இப்படி நாசம்பன்னி கொன்னுட்டியேடா.... உன்ன கொல்லாம விடமாட்டேண்டா.... என்று வெறியோடு ஓடிச்சென்று அந்த காமவெறிபிடிச்ச ராணுவ சிப்பாயை இறுக்கமாக கட்டி பிடித்தார் கதிரேசன்....

அவன் திமிறி விடுபட முயன்றான் முடியவில்லை... அவன் கத்தினான் கதறினான் ஆனாலும் சத்தமே வரவில்லை... அவன்மீது பாய்ந்த வேகத்தில் அவனது குரல்வளையை கவ்வி அவனது ரத்தத்தை உறிஞ்சி தனது தாகத்தை தீர்த்துகொண்டு இருந்தார் அந்த 84 வயதுக் கிழவன் கதிரேசன்....

அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு ராணுவச் சிப்பாய்கள் இதை கண்டுவிட... அவர்களின் கையிலிருந்த துப்பாக்கி தோட்டாக்கள் சரமாரியாக வெடித்து கதிரேசனை சல்லடையாக துளைத்தது.... குடித்த ரத்தம் கடைவாய் வழியாக ஒழுக, அப்படியே பிணமாக கீழே விழுந்தார் கதிரேசன்.

இப்படித்தான் கதிரேசன், காமாட்சி, வள்ளி போன்றோர்களின் லட்சக்கணக்கான ஆத்மாக்கள் எமக்குள் தீ ஜூவாலைகளாய் இன்றும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருக்கின்றன.


--------------------- நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (1-Oct-13, 4:32 pm)
பார்வை : 100

மேலே