கள்ளுங் காமமும்.

சொல்லுவ தெல்லாம்
சொல்லி முடித்தும்
கள்ளுங் காமமும்
கலந்திடத் துணிந்தேன்.

காமம் மிகுந்தால்
நாணம் மறக்கும்.
கள்ளும் மிகுந்தால்
எல்லாம் மறக்கும்.

நினைந்திடக் காமம்
நெஞ்சை மயக்கும்.
நனைந்திடக் கள்ளும்
நினைவை மயக்கும்.

ஊடலைக் காமம்
ஒளித்தே மறைக்கும்
கூடலைக் கள்ளும்
குழிக்குள் புதைக்கும்.

பிரிவினிற் காமம்
பெருகி உருக்கும்.
உறவினிற் கள்ளும்
உருக்கி யழிக்கும்.

காமம் துணிந்தால்
ஏமம் உடைக்கும்.
கள்ளும் முனைந்தால்
கோமணம் இழக்கும்.

சுற்றமும் மறக்கும்
முற்றியும் காமம்.
பெற்றவள் வெறுக்கவும்
பற்றிடுங் கள்ளும்.

அலரிய காமம்
களம் அறியாது.
உளற்செய் கள்ளும்
ஒழுக் கறியாது.

மிஞ்சிய காமம்
நெஞ் சடங்காது.
விஞ்சிடக் கள்ளும்
வெறி ஒடுங்காது.

பொருந்தாக் காமம்
புலம்பித் திரியும்.
அருந்தாக் கள்ளும்
அவனைச் சொரியும்.

காமம் தொலைந்திட
கலங்கிடும் சித்தம்.
கள்ளும் நிறைந்திட
விலங்கிடும் பித்தம்.

காமம் மறந்தும்
கள்ளும் உண்டும்
சாமம் செத்தும்
சண்டாளன் ஏனோ!

வாழ்வைத் தொலைத்தும்
வசையினைச் சுமந்தும்
நாளினை இழந்தும்
நடை பிணம் ஏனோ!

உழைப்பினை விற்று
உயிரினைத் தோற்று
அழையாச் சாவை
அழைப்பதும் ஏனோ!


கொ.பெ.பி.அய்யா.

பி.கு;-கள் எனும் சொல் பொதுவாக மதுவகைக்
குறிப்பாகச் சுட்டப்பட்டுள்ளது.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (4-Oct-13, 3:04 am)
பார்வை : 173

மேலே