தவிப்பு [சிறுகதை]

சந்தியாவின் முகத்தில் ஒரு இறுக்கத்தைக் கண்டேன். அவள் என்னைச் சந்திக்க வேண்டும் என்று பல நாளாக கேட்டுக் கொண்டிருந்தாள். அதற்காக இன்று வரச்சொல்லி அனுமதி தந்தேன். முகத்தில் ஒரு கவலையும் ஒரு குழப்பமும் அப்பி இருந்ததை தெளிவாய் அறிய முடிந்தது. எப்போதும் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் புன்னகையுடன் வணக்கம் சொல்பவள் முகத்தில் அவ்வளவு கலை இல்லை. எதோ ஒன்றை எதிர்பார்த்து வந்திருக்கிறாள் என்பதை அனுமானிக்க முடிந்தது. அவளின் மனம் படபடத்துக் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.

எனக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தது. அழைப்புகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவள் இருப்புக் கோள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தள். விரைவில் நான் ஓய்வாக வேண்டும் என்பதை அவள் மனம் பிராத்தனை செய்து கொண்டிருந்தது. அதற்கு இடையில் சில வாடிக்கையாளர்களும் எனக்கு முன்னால் வந்து அமர்ந்தனர். அவர்களுடன் நான் நிறைய பேசவெண்டும் என்பது அவளுக்குத் தெரிந்த விசயம். தனியாகப் பேசவேண்டிய சூழ்நிலையில் இவர்களின் வருகையும் சந்தியாவை பொறுமையிழக்கச் செய்துவிட்டது.

வந்ததுமே விசயத்தைச் சொல்லி இருக்கலாமே என்று அவள் நினைத்துக் கொண்டாள். இந்த வாடிக்கையாளர்கள் அவளுக்கும் பரிச்சயமானவர்கள்தான். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் கிளம்ப மாட்டார்கள் என்பது தெரிந்ததால் இப்போது கிளம்பலாமா என்று ஒரு நிமிடம் முடிவெடுத்தவள் பிறகு முடிவை மாற்றிக் கொண்டாள். நேரில் பேச வேண்டும் என்றே வந்தாகி விட்டது. இனியும் சற்று நேரம் பொறுத்திருப்போம் என்று அமைதியானாள். கைப்பேசியில் தொடர்பு கொண்டால் நான் என்ன மன நிலையில் இருப்பேனோ என்று தெரியாமல் தன் அழைப்பைத் தட்டிக் கழிக்க வாய்ப்பு உள்ளது என்று எண்ணித்தானே நேரில் வந்தோம். இருந்து பார்த்து வந்த விசயத்தைச் சொல்லிவிட்டே பொய்விடலாம் என்று படித்த நாளிதழை மீண்டும் புரட்டிக் கொண்டிருந்தாள்.

எனது அலுவலகத்தில் முன்பு வேலை பார்த்தவள் சந்தியா. ஆண்களைப்போல நேரத்தை வீணடிக்காமல் தனக்கு ஒதுக்கிய வேலைகளை விரைவில் முடித்து விட்டு தானே முன்வந்து மற்ற வேலைகளையும் எடுத்துச் செய்வாள். வாடிகையாளர்களுக்கு முன் கூட்டியே அனைத்து விபரங்களையும் தெளிவாக எடுத்துச் சொல்லி விடுவாள். அதனால் எனது தொழிற்சாலையின்மீதும் அதன் பணிகளின்மீதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை உருவாகி இருந்தது. பணியாளர்களை சாமர்த்தியமாக வேலை வாங்குபவள் சந்தியா.

மூன்று ஆண்டுகள் இந்த அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறாள். திருமணம் நிச்சயிக்கப்பட்ட்டதும் பணியிலிருந்து விலகி விட்டாள். இப்போது இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது. சந்தியாவின் திருமணம் காதல் திருமணம் என்பது அவளது திருமணத்தின்போதுதான் தெரிந்தது. இங்கு பணி புரிந்தபோது அதைப்பற்றிய எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிறகுதான் இந்தப் பூனையும் பால் குடிக்கும் என்பது தெரியவந்தது. அவள் வீட்டிலும் பிரச்சனை. பையன் வீட்டிலும் பிரச்சனை. அவர்களின் உறவினர்களின் பேச்சுவார்த்தையின் உடன்பாட்டின்பேரில் ஏனோதானோ என்றே திருமணம் நடந்தது. ஜாதிப் பிரச்சனை. பையன் தாழ்ந்த ஜாதி. இவள் உயர்ந்த ஜாதி.

பையன் வாட்ட சாட்டமாக இருந்திருக்கிறான். வண்டியில் போகும்போதும் வரும்போதும் சந்தியாவை கவர்ந்து விட்டான். எதோ ஒரு பைக் ஒர்க்ஷாப்பில் வேலைக்கு இருந்திருக்கிறான். வண்டி ஓட்டும் ஸ்டைலை வைத்தே அவளைக் கவிழ்த்து விட்டிருக்கிறான். இந்த ஈர்ப்புத்தான் அவளை காதலில் விழ வைத்திருக்கிறது. அதைத் தவிர வேறென்ன தகுதிகள் அவனிடம் இருந்தது என்பதை அவள் அறிந்திருக்க நியாயம் இல்லை. கைப்பேசியும் குறுஞ்செய்தியும் காதலை வளர்த்து விட்டது போலும். உயிரைக் கொடுக்கவும் துணிந்துவிட்ட காதலர் ஆகிவிட்டதால் வேறு வழியில்லாமல் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார்கள். எனக்கு ஆரம்பத்தில் இதில் உடன்பாடு இல்லை. அவன் தாழ்ந்த ஜாதி என்ற காரணத்தால் அல்ல. காதல் கூடாது என்பதாலும் அல்ல. இவர்களின் இரண்டு குடும்பங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி நாளை வாழ்க்கையை அமைக்கப் போகிறார்கள் என்ற சிந்தனையில்தான் அப்படி தோன்றியது.

காதலுக்கும் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை காதல் பருவத்தில் யாரும் உணர்வதில்லை. வாழ்க்கையில் நுழையும்போதுதான் எல்லாமே விளங்க ஆரம்பிக்கும் என்பதையும் காதலர்கள் உணர்வதில்லை. அவனுடைய வருமானமும் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக எழுந்தது எனக்கு. என்னைபோலவே சந்தியாவின் வீட்டிலும் நினைத்து வருந்தினார்கள். ஆனாலும் தீவிரமான காதல் இதையெல்லாம் ஒதுக்கிவிட்டு துணிந்து நின்றதால் அவர்களை இணைத்து வைக்கவேண்டியாகி விட்டது.

திருமணத்திற்குப் பிறகு நானும் அவர்களைப்பற்றி லட்சியம் செய்யவில்லை. ஒரு நாள் சந்தியாவின் தாயை ஒரு பல்பொருள் விற்பனை அங்காடியில் சந்தித்தென். நலம் விசாரித்தேன். சந்தியாவைப் பற்றிக் கேட்டபோது பொசுக்கென்று அந்த அம்மாவிடமிருந்து ஒரு விசும்பல் வந்தது கண்டு நான் திடுக்கிட்டேன்.

என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்றார்கள். எதாவது பணம் தேவைப்படுமோ. வந்த இடத்தில் பணத்தை தொலைத்து விட்டார்களோ. அல்லது பணம் போதவில்லையோ என்று எண்ணியவாறே அந்த அம்மாளை அழைத்துக் கொண்டு தேனீர் விடுதிப்பக்கம் அழைத்துச் சென்றேன். சிறு மௌனத்திற்குப் பிறகு பேச ஆர்மபித்தார். தனக்கு மருமகனாக வந்தவன் சந்தியாவை சரியாக கவனிப்பதில்லை. குடும்பம் நடத்தும் அளவிற்கு வருமானம் இல்லை. எங்கள் உறவினர்கள் யாரும் அங்கு செல்வதில்லை. சந்தியாவின் புகுந்த வீட்டில் இருப்பவர்களுடன் அவளால் இணங்கிப் போகமுடியவில்லை. கருத்து வேற்பாடு என்று பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறாள். எங்கள் வீட்டிற்கும் வர மறுக்கிறாள் என்று அந்தத் தாய் சொன்னது கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு மிகுந்த கவலையாகி விட்டது.

இப்போது என்ன செய்கிறாள் சந்தியா என்று கேட்டேன். எதோ ஒரு பக்கம் வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறாள். உங்கள் கம்பெனிக்கே போகச் சென்னேன். மறுத்துவிட்டாள். குழைந்தையை வைத்துக் கொண்டு திண்டாடுகிறாள். மருமகன் இன்னும் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த ஜாதி அப்படி.. உழைச்சு சம்பாதிக்கனும் என்ற அக்கரை இல்லாதவன் என்று கொட்டி விட்டு கண்களை துடைத்துக் கொண்டார் அந்த அம்மா. காப்பியைக் குடிக்கட்டும் என்று சிறிது நேரம் விட்டுவிட்டேன். அந்தப்பையனை என்னிடம் வேண்டுமானால் வரச்சொல்லுங்கள். நான் பேசிப்பார்க்கிறேன். முடிந்தால் அவனுக்கு எதாவது செய்கிறேன். தைரியமாக இருங்கள். சந்தியா சாதாரணப் பெண் இல்லை. சாதிப்பாள் என்று நல்ல விதமாக சொல்லி அனுப்பினேன்.

அதன்பிறகு இரண்டு மாதம் கழித்து என்னை தொடர்பு கொண்டாள் சந்தியா. இன்று அழைத்ததன்பேரில் வந்திருக்கிறாள். எதாவது உதவி கேட்க வந்திருப்பாள். அல்லது மறுபடியும் இங்கு வேலைக்குச் சேர கேட்க வந்திருக்கலாம் என்று எனண்ணிக் கொண்டிருந்தேன். அவளிடம் வந்த காரணத்தைக் கேட்கலாம் என்றபோதுதான் கம்பெனி வாடிக்கையாளர்கள் வந்து விட்டனர். அவர்களை அனுப்பி வைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. அதற்குள்ளாக தொழிற்சாலைக்குள் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்திருக்கிறாள். தொழிலாளர்களிடமும் உரையாடிவிட்டு வந்து மீண்டும் வரவேற்பறையில் அமர்ந்திருக்கிறாள். அவளை உள்ளே அழைத்து எதிரே இருக்கையில் அமரச் சென்னேன். அமர மறுத்து விட்டாள். முன்பிருந்த அதே மரியாதை. நின்று கொண்டே இருந்தவளிடம் நானே கேட்டேன் வந்த காரணத்தை.

"சார். என் கடந்த காலத்தைப் பற்றியும் காதல் வாழ்க்கையைப் பற்றியும் உங்களிடம் பேச வரவில்லை. என் பெற்றோர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள். மற்றவர்களும் என் வாழ்க்கையைப் பற்றி நிறையச் சொல்லி இருப்பார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். முடிந்தால் செய்யுங்கள். வரும் புதன் கிழமை காலை சரியாக பத்து மணிக்கு காந்தி நகர் பஸ் ஸ்டாப் வந்திடுங்க. நான் அங்கே காத்திருப்பேன்" என்று ஒரே மூச்சில் பேசி முடித்தாள்.

நான் தொலைபேசியில் யாருடனாவது பெசவேண்டி வந்திடலாம். அல்லது வேறு வாடிக்கையாளர்கள் வந்துவிடலாம். அல்லது பணி நிமித்தமாக பணியாளர்கள் யாரேனும் இடையில் வந்துவிடலாம் என்ற அவசரத்தில் சொல்லி முடித்துவிட்டாள். அவள் கண்களின் ஓரத்தில் கரு வளையம் உருவாகி இருந்தது. முகத்தில் வயதான தோற்றம். உடலில் இந்த வயதிலும் ஒரு தளர்வு. பார்வையில் எதோ ஒரு மிரட்சி. எதையாவது சாதிக்கவேண்டும் என்ற வெறி. குடும்பத்தை குழந்தையைக் கவனிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விடுபட்டிருந்தாள். தனது வாழ்க்கைக்கு ஒரு வழி தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை அனுமானிக்க முடிந்தது.

இங்கு வேலை கேட்க வந்திருக்கலாம். அவளது கணவனுக்கு எதாவது வேலை கேட்க வந்திருக்கலாம். அல்லது தொழில் தொடங்க எதாவது யோசனை கேட்க வந்திருக்கலாம். சந்தியாவின் அம்மா இவளை இங்கு அனுப்பி இருக்கலாம் என்று எண்ணியவனை அவள் பேச்சு சற்று சிந்திக்க வைத்துவிட்டது. என் தொழில் சார்ந்த இடத்திற்கு அழைக்கிறாளோ. எனக்கு புதிய ஆர்டர் எதாவது பெற்றுத்தர அழைக்கிறாளோ. தான் எதாவது தொழிலை ஏற்படுத்தி நடத்தி வருவதை பார்க்க அழைக்கிறாளா என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

என்ன விசயம் என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை அதற்கு. நீங்கள் வரவேண்டும். உங்களுக்குப் பிடிக்கும். எதிர்பார்ப்பேன். அங்கு வந்து இந்த எண்ணிற்கு அழையுங்கள் நான் அங்குதான் இருப்பேன் என்று சொன்னவளுக்கு தொண்டை அடைத்துவிட்டது. தண்ணீர் குடித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு என் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்து விட்டுக் கிளம்பத் தயாரானாள். “ குழந்தையை கணவனின் அம்மாவிடம் விட்டு வந்திருக்கிறேன். நான் கிளம்புகிறேன், எதிர்பார்ப்பேன் சார் ” என்று வேகமாகக் கிளம்பினாள். கணவனின் அம்மா என்றாளே அப்படியெனில் சந்தியாவிற்கு மாமியார் இல்லையா. மாமியாராக ஏற்க மனமில்லையா. கேள்விகளை நானே கேட்டுக் கொண்டேன். அதற்கு விளக்கம் நான் அறிந்து கொள்வேன் என்று அப்படி சொல்லாமல் சொல்லி இருக்கிறாள். அந்த அளவிற்குத்தான் அங்கு ஒட்டியிருக்கிறாள் என்பது புரிந்து வருந்தினேன்.

அந்த நாள் அந்த மணிக்கு அங்கு இருந்தேன். நான் சொன்னால் மாறமாட்டேன் என்பது அவளுக்குத் தெரியும். கால நேரத்தை சரியாக கடைபிடிப்பேன் என்பதையும் நன்கு அறிந்தவள். நான் வந்ததைக் கவனித்தவள் என்னை எதிர்கொண்டு வரவேற்றாள். கொஞ்சம் முகத்தில் மலர்ச்சி. காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகிலேயே இருந்த ஒரு கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள். கோட், சூட், டை என்று நிறைய வாலிபர்கள் பரபரப்பாக அங்குமிங்கும் கோப்புகளை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தனர். என்னைபோன்றே நிறையப் பேர்கள் அங்கு வந்திருந்தனர். சந்தியாவும் சிலரை அழைத்திருக்கிறாள். அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்தினாள். அவர்களில் ஒரு சிலர் எனக்கு முன்பே தெரிந்தவர்கள். சிலர் தொழில் அதிபர்கள். என்னை அந்த பெரிய அறையின் மூலையில் இருந்த மேலாளர் அறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கிருந்த மேலாளர் என்ற ஒருவனிடம் என்னை அறிமுகப்படுத்தினாள். அந்த மேலாளர் என்னை வரவேற்கும் நிலையில் இல்லை. அவ்வளவு அவசரமான வேலை அவனுக்கு. நிகச்சிக்கு நேரம் ஆகிவிட்டது அங்கு சந்திக்கலாம் வாருங்கள் என்று அவனும் எழுந்து விட்டான்.

சந்தியாவின் பின்னால் சில மாடர்ன் வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் முகத்தில் ஒரு நம்பிக்கை. அது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. இப்பொழுதும் கேட்டேன். இது என்ன இடம். இவர்கள் எல்லாம் யார். என்ன நிகச்சி என்று. அதற்கு சந்தியா பதில் சொல்வதற்குள் அந்த இளைஞர்களில் ஒருவன் முந்திக் கொண்டு சொன்னான். "சார் மீட்டிங் ஆரம்பிச்சுட்டாங்க. அங்கு புரியும் உங்களுக்கு" என்றான். எனக்கு சற்றுக் கோபம் வந்தாலும் சந்தியாவிற்காக அடக்கிக் கொண்டேன். சந்தியாவுடன் ஒட்டியும் ஒட்டாமலும் பதுங்கிக் கொண்டு நின்ற அவள் கணவனைப் பார்த்து வேடிக்கையாகக் கேட்டேன். "இவரை அறிமுகப்படுத்தவில்லையே" என்று . நான் கேட்டதற்கு அவன் கஷ்டப்பட்டு சிரித்தான்.அவளும் வேண்டா வெறுப்பாகச் சிரித்து வைத்தாள். "அவருக்கென்ன சார் ஜென்டில் மென்" என்று அவனைப் பார்த்தபடியே சொன்னது எனக்கு சங்கடாமாக இருந்தது.
அவன் எனக்கு வணக்கம் சொன்னான். வாயில் இருந்து மது வாடை அடித்தது. நேற்றுக் குடித்ததாக இருக்கலாம். அதனால்தான் என் முன்னால் வராமல் பதுங்கிக் கொண்டு இருந்திருக்கிறான். இவனையும் என்னைப்போலவே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறாளோ என்னவோ.

என்னுடன் வந்திருந்தவர்களும் இன்னதென்று அறியமுடியாமல் அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
குளிரூட்டப்பட்ட அரங்கில் கண்களை சுழலவிட்டேன். மேடையின் பின்புறம் இருந்த திரையில் ஏகப்பட்ட ஆங்கில வாசகங்கள். தத்துவங்கள். அங்கிருந்த வாசகங்களைக் கொண்டு இது எதோ வியாபார நிறுவனத்தின் கூட்டம் என்பது புரிந்தது. சில வாசகங்களை வைத்து அது ஒரு நேரடி விற்பனைக்கு ஆள் பிடிக்கும் கூட்டம் என்பது விளங்கியது. ஒருவர் மூன்று பேரைப் பிடிப்பது. அவர்கள் இன்னொரு மூன்று மூன்று பேரைப் பிடித்து விற்பனை செய்ய வைப்பது என்பதை விளங்கிக் கொண்டேன். இது நமக்கு உடன்பாடு இல்லாத தொழில். இங்கு வந்து இருக்க வேண்டியதே இல்லை. சந்தியாவின் அழைப்பையும் அவள் விருப்பத்தையும் ஒதுக்கிவிடக்கூடாது என்பதற்காக வந்தோம் என்றாலும் கூட எவ்வளவு நேரம் இங்கிருப்பது என்ற எண்ணம் எழுந்தது.

சந்தியாவைப் பார்த்தேன். என் நிலையைப் புரிந்து கொண்டாள். அவள் பார்வை என்னை பொறுமை காக்கவேண்டும் என்று கெஞ்சியது. அமர்ந்திருந்தேன். நிகழ்ச்சி தொடர்ந்தது. பேச ஆரம்பித்தார்கள். மூச்சு விடாத பேச்சு. நம்மை வேறு எந்த சிந்தனைக்கும் போகவிடாத பேச்சு. சொற்பொழிவு என்று சொல்ல முடியுமா வியாபாரத் தந்திரத்தை. மாடர்ன் இளைஞர்களை மேடைக்கு அழைத்துப் பேசச் சொன்னார்கள். ஒலிபெருக்கி வெடித்துவிடும்போல. சந்தியா என்னையே பார்ப்பது போல ஒரு பிரம்மை. நான் எழுந்து சென்றுவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருப்பாளோ என்னவோ. இப்போது… மாதம் எழுபதாயிரம் வருமானம் ஈட்டும் நமது விற்பனைப் பிரதி நிதி கடைசியாக உங்களிடம் உரையாற்றுவார் என்றது ஒலிபெருக்கி..

சந்தியாவும் இந்த நிலைக்கு உயர்வோம் என்ற நம்பிக்கையுடன் அமர்ந்திருப்பாளோ?

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (4-Oct-13, 5:38 pm)
Tanglish : thavippu
பார்வை : 285

மேலே