சில "உ"ண்மைக் குரல்கள்...

{ அருமைத் தமிழின் ஓர் எழுத்தில்
இங்கு பறிக்கப்பட்டவைகளை
நான் கவி மொழிகிறேன் }



புகைப் படத்தில் பூரித்துக்,
கண் பார்த்து நாவூரிக்,
கைக்கெட்டும் தூரத்தில்,
காய்ந்த ரொட்டி மட்டுமே - எம்
....."உ"ணவுகள்.....

காகிதத்தில் மையெழுதி,
பீரங்கிப் பிரச்சாரமாய் உருவெடுத்து,
ஆட்சிக்கு முன் அரைகூவி,
வார்த்தைகளில் மட்டுமே வடிகிறது - எம்
....."உ"ரிமைகள்.....

அங்கொன்றும், இங்கொன்றுமாய்,
எல்லைப் பிரிப்பின் பெயரால்,
அலைபேசியில் மட்டுமே,
அருகிருக்கிறது - எம்
....."உ"றவுகள்.....

மிதிவெடிகளின் கருணையால்,
பீரங்கிகளின் குருந்தொலைவால்,
தப்பிப்பிழைத்துத்,
தாண்டவமாடுகிறது - எம்
....."உ"யிர்கள்.....

இருக்கின்றதா?? இல்லையா??
என்று கூடத் தெரியாமல்,
ஏதோ ஓர் மூலையில்,
முடங்கிக் கிடக்கிறது - எம்
....."உ"ணர்வுகள்.....

விளி நீரும் தீர்ந்து விட,
அழுகைக்கும் அழைப்பு வர,
உடலெங்கும் கண்ணீராய் - எம்
....."உ"திரங்கள்.....

அருந்தமிழின் ஓர் எழுத்தில்,
எத்தனையோ பறிமுதல்கள்!!!

கடல் தாண்டித் தெரிகிறது,
அத்தனைக்கும் "உ"வமைகள்

{ ஏனென்று தெரியாமல் அநியாயமாய்
உயிர் இழக்கும் குழந்தைகளுக்கு
சமர்ப்பணம் }

எழுதியவர் : ஹனாப் (5-Oct-13, 10:48 am)
பார்வை : 80

மேலே