துப்பாக்கிகள் பலியெழுதிடும் காலம்

செல்கள் கூவி வெடித்த
கனவொன்றிலிருந்து சிதறுகிற
நாடற்ற கவிஞனொருவனின் நாள்
எங்கேயும் பதியப்படாமல்
பிரபஞ்சமெங்கு உபரியாய்
தலையற்று
கை கால்களற்று
உயிருமற்று வீழ்கிறது
எரியும் கங்குலின் மீது
கவிதைகளால் காண்டீபம் தரித்தவன்
பதுங்குகுழியின் நிழல் சூழ அச்சமுறுகிறான்
மேலும் மேலும்
மிரள்கிற மண்ணில்
அவன் கவிதைகளின் மேல்
'பயங்கரவாத" குற்றச்சாட்டு
படர்ந்து கொண்டிருக்க
பொறுமைச் சீருடையணிந்து தோற்றுக்கொண்டிருக்கிறான்
அவன் மீது இயலாமை மொழியின்
வருத்தம் கவிய
பகலின் முகங்களில் வாதை ரோந்து செய்கிறது
அவனது மரணத்தை நினைவுறுத்தும்
ஒரு கவிதையை துப்பாக்கியெழுதியிருந்தது
வதை முகாம் ஒன்றில் .

***எனது மூத்தோன் கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு***

அக்டோபர்
தீராநதி

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (6-Oct-13, 5:22 pm)
பார்வை : 76

மேலே