மூன்றாவது தடவை கொலை செய்யும் ஜெனெரல்

துயரெழுதி தூர்வாரிப் போனது காற்று
வெள்ளைப் புரவி பூட்டிய வில்லு வண்டி
சில் உடைத்து சாலையில் சிதறுண்டது
கண்களற்றவனுக்கு வெள்ளைப் பிரம்பும்
நாடற்றவனுக்கு நல்ல துவக்கும் முக்கியம்
இல்லையென்றானபோது
நிர்வாணப்படுத்தி கொலை செய்யப்பட்டிருந்தேன்
என் சமகாலத்தவனோடு
ஆசனவாயிலில் கம்பிகள் துளைத்து
என்னைக் கொலை செய்யும் முன்
வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்
அவர்களால் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை
அவை பொய்யாக இருப்பதால் கூர்மையாக
பிரபஞ்சத்தின் தீவிரமான இரவை
என் குருதியில் வடியவிட்டிருந்தனர் சிப்பாய்கள்
வாயில் தன் சிறு நீரைக் கழித்து
என்னைக் கொல்வதற்கு
ஆச்சரியத்தோடும் அவாவோடும்
மேஜர் ஜெனெரல்
நிச்சலனமான அந்த அறையில்
தலைகீழாக தொங்கவிடப்பட்ட நான்
விடுதலை செய்யப்பட்டிருந்தேன்
சவக்குழி ஒன்றில் .

அக்டோபர்
தீராநதி

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (7-Oct-13, 9:44 am)
பார்வை : 78

மேலே