[519] கழனிசால் உழவ! கேள்!
கருமலை ஒத்த பெருநெற் குதிர்களும்,
எருமைகள் பலவும் இருக்கும் தொழுவமும்,
கரிய வரால்களின் பெரிய துண்டுகள்
நிரம்பிய குழம்புடன் திரள்சோற் றுண்டையும்
கண்டு வாழ்ந்த கழனிசால் உழவ!
வற்றிய குதிர்களும், வைக்கோலு மின்றி
இருண்ட தொழுவத்து இரண்டோர் எருமையும்
கண்களில் பசும்புல் காணா தவையாய்
எலும்பும் தோலுமாய் இங்கங்கு அலைய,
கலங்கும் விழிகளைக் காட்டிட மறைத்து,
வான்மழை யதனின் வரவுபார்த் திருப்பதும்
வறண்டகா விரியால் வந்ததோ? இல்லை;
வறண்ட மனங்களும் சுரண்டல் கொள்கையும்
இருண்ட பிரிவினை எண்ணமும்
திரண்டுனை இழுத்துத் தெருவினில் இட்டதே!
காந்திபோல் தன்னலம் களைந்தவன் ஒருவனும்
வல்லபாய் பட்டேல் வகையினில் நாட்டினைச்
செல்வழி காட்டிச் செலுத்திடும் தலைவனும்
இல்லையென் ரானதால் இந்நிலை! பரசுராம்
இல்லையோ நீயுமே! எடுத்துவா கலப்பையே!