“ என் மகன் வரப்போறான் ”

“ என் மகன் வரப்போறான் ”
“பார்த்து, பார்த்து. எல்லா பொருட்களையும் கவனமா இறக்கி, உள்ள கொண்டுபோய் வைங்க.” கமலேஷின் குரல் அது. கமலேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறான். கடமையிலும், ஓழுக்கத்திலும் எப்போதும் சிறந்து விளங்கும் ஒருவன். ஆகையால் அவனுடைய நிறுவனம், தரிசனபுரத்தில் புதிதாக ஆரம்பித்த கிளைக்கு அவனை முகாமையாளராக நியமித்து அங்கே அவன் தங்குவதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தரிசனபுரம், அழகையும், அமையுதியையும் இறைவன் குறைவில்லாது வழங்கிய ஒரு கிராமம். சிறு கிராமம் என்பதால் அங்கு உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தினர்போல்தான் பழகுவார்கள்.

“வீடு ரொம்ப நல்லா இருக்கு. சின்ன வீடா இருந்தாலும் அழகா இருக்கு.” என்று கூறிக்கொண்டே வீட்டை சுற்றிப் பார்க்கிறான் கமலேஷ். “சார், எல்லா பொருட்களையும் உள்ள கொண்டு வந்து வச்சுட்டோம்.” கமலேஷை ஏற்றி வந்த வண்டிக்காரரின் குரல் அது. “சரிப்பா…, அப்போ நீங்க கிளம்புங்க. இந்தாங்க. இத வச்சுக்குங்க.” என்று ஒரு சிறு தொகையை கமலேஷ் வண்டிக்காரருக்கு கொடுக்கிறான். “இல்ல சார். வேண்டாம்…. வேண்டாம்….. நாங்க எல்லோரும் ஒரே கம்பனிலதானே வேல செய்யுறோம். கம்பனியாலதானே எங்கள உங்களோட அனுப்பி வைச்சாங்க. அதனால இதெல்லா வேண்டாம் சார்.” என்று வண்டிக்காரன் கூறிய மறுப்பிற்கு “பரவாயில்ல, இத என்னுடைய சந்தோஷத்துக்காக வாங்கிக்குங்க.” என்று கமலேஷ் அந்த பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தான்.

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு வெளியே வந்தான் கமலேஷ். அக்கம் பக்கம் யாராவது இருக்கின்றார்களா என பார்த்தபோது சற்று தொலைவில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் பெரியவர் ஒருவர் இருப்பதை கண்டான். கிராமத்திற்கு புதியவன் என்பதால் இந்த கிராமத்தை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தோடு அந்த பெரியவரை நோக்கிச் சென்றான். “ஐயா நான் இந்த கிராமத்துக்கு புதுசா வந்திருக்கிறேன். என் பெயர் கமலேஷ்.” என்று தன்னை அந்த பெரியவரிடம் அறிமுகம் செய்து கொண்டான். “அப்படியாப்பா… வாப்பா.. வா, இப்படி வந்து உக்காரு.” என்று அந்த பெரியவர் கமலேஷை வரவேற்றார். “ஐயா, நான் இந்த கிராமத்துல புதுசா ஆரம்பிச்சிருக்குற கம்பனில மனேஜரா இருக்குறேன்.” என்று கூறியவாறே அருகில் இருக்கும் கதிரையில் அமர்கிறான். அதற்கு அந்த பெரியவரும் “ரொம்ப சந்தோஷம். என் மகனும் கம்பியூட்டர் கம்பனி ஒன்னுல மனேஜராதான் இருக்கான். அவங்க ஏதோ சொப்ட்வெயார் செய்ரவங்களாம். ரொம்ப பெரிய கம்பனி. என் மகன அவங்க அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருக்காங்க. அங்க அவங்கட கம்பனி ஒன்னு இருக்கு. அங்கதான் இப்போ மனேஜரா இருக்கான்.” என்று பெருமையாகவும் சந்தோஷமாகவும் கூறினார். “அப்படியா! நல்லது.” என்றான் கமலேஷ்.

“ம்…. என்ட மகன்ட பெயர் திலிபன். எனக்கு ஒரே ஒரு பிள்ளதான்.” என்று தனது மகனை பற்றி கூற ஆரம்பிக்கின்றார் பெரியவர். “சின்ன வயசுல அவன் ரொம்ப குழப்படி. ஏதாவது வேணும்னா எப்படியாவது அத அடைஞ்சே தீருவான். அவனுக்கு பிடிச்ச ஒரு பொருளை அவனிட்ட இருந்து பறிச்சு எடுத்தா கத்துவான் பாருங்க…. அந்த வீச்சுனு கத்துற சத்தம் இப்பவும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கு. அவன் பேச ஆரம்பிச்சபோ அம்மா, அப்பாவ தவிற வேற எதுவும் பேச தெரியாது. பிறகு பிறகு மழலை மொழியால எல்லாத்தையும் பேச ஆரம்பிச்சுட்டான். அவன ஆரம்ப பள்ளில சேர்த்த முதல் நாள், என்ட கைய பிடிச்சுக்கிட்டு “அப்பா….நா போக மாட்டேன்……. போக மாட்டேன்னு” அழுது புரண்டடு ஒரு அட்டகாசமே பண்ணிட்டான். பிறகு எப்படியோ சமாதானப்படுத்திதான் அவன வகுப்புக்குள்ள கொண்டுபோய் சேர்த்தோம். பிறகு பிறகு அவனாவே விருப்பப்பட்டு பள்ளிக்கு போக ஆரம்பிச்சுட்டான். அதுக்கு காரணம் அவனுக்கு படிப்பிச்ச டீச்சரும், அவன்ட பிரண்ட்ஸ்சும்தான்.” என்று அந்த பெரியவர் கூறிக்கொண்டு இருக்கும்போது, “வாங்க” என்று கமலேஷை வரவேற்றுக்கொண்டே அந்தப் பெரியவரின் மனைவி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள். கமலேஷ{ம் “வணக்கத் அம்மா” என்று பணிவுடன் பதிலளித்தான். “என்ன வந்த உடனேயே மகன பத்தி சொல்ல ஆரம்பிச்சுட்டாரா!” என்று கூறியவாறே அந்த பெரியவருக்கு மாத்திரை ஒன்றையும் பெரியவர் குடிப்பதற்காக கொண்டு வந்த தேநீரை கமலேஷிற்கும் கொடுத்தாள். பின் அவள் உள்ளே சென்றதும் மாத்திரையை போட்டுக்கொண்டு தனது மகனை பற்றிய விடயங்களை தொடர்ந்தார் பெரியவர். “என்னுடைய மகன் இருக்கானே, நல்ல கெட்டிக்காரன். என்ன சொன்னாலும் கற்பூரம் மாதிரி டக்கனு புடிச்சுக்குவான். ஆரம்ப பள்ளில நடக்குற போட்டி, பரீட்சை எல்லாத்துலையும் நல்ல மாக்ஸ் எடுப்பான். எங்க கிராமத்துல ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு அப்புறம் படிக்குறதுக்கு ஒரே ஒரு ஸ்கூல்தான் மட்டுந்தான் இருக்கு. அங்கதான் எங்க மகன சேர்த்தோம். ஆனா அவன்ட பிரண்ட்ஸ் எல்லாரு கிராமத்த விட்டு வேற ஸ்கூலுக்கு போய் சேர்ந்துகிட்டாங்க. அவங்கள பிரிஞ்ச கவலைல ஸ்கூலுக்கே போக மாட்டேனு அடம்பிடிச்சான். முதல் இரண்டு வாரம் அழுது அழுது ஸ்கூலுக்கு போனான். அதுக்கு அப்புறம் அங்க புது பிரண்ட்ஸ்மார்கள் கிடைச்ச உடன பழையபடி சந்தோசமா ஸ்கூலுக்கு போனான். அங்கயும் அவன் படிப்புல கெட்டிக்காரனாதான் இருந்தான். ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நம்ம கிராமத்துலதான் படிச்சான். அதுக்குமேல படிக்குறதுக்கு நம்ம ஸ்கூல்ல முடியாது. டவுனுக்குதான் போகனும்.

நான் அப்ப டவுன்லதான் வேல செய்துகிட்டு இருந்தேன். அதனால அவனையும் டவுன் ஸ்கூல்ல சேர்த்துட்டோம். எனக்கு காலைல 9 மணிக்குதான் வேல. ஆனா என்ட மகனுக்காக நான் காலைல 6 மணிக்கே அவனோட போயிடுவேன். ஓன்பதாம் வகுப்பு வரைக்கும் அவனோடதான் நானும் போவேன். அவனோடதான் வீட்டுக்கு வருவேன். அவன் ஸ்கூல் விட்டு ஸ்கூல் வாசல்ல நிப்பான். நான் போய் கூட்டிக்கிட்டு என்ட கடைக்குபோவேன். எனக்கு வேல முடிர வரைக்கும் அவன் என்ட கடையிலதான் இருப்பான். சும்மா இருக்க மாட்டான். ஏதாவது படிச்சுக்கிட்டுதான் இருப்பான். பிறகு இரவு 7 மணிக்குதான் நாங்க ரெண்டுபேரும் வீட்டுக்கு வருவோம். ஓன்பதாம் வகுப்புக்கு அப்புறம் அவன் தனியாவே ஸ்கூலுக்கு போயிடுவான். எனக்கும் வயசாயிடுச்சு இல்லியா, காலைல எழும்புறது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அத உணர்ந்து அவனாவே காலைல எழுந்திருச்சு ஸ்கூலுக்கு போயிடுவான். பதினோரதம் வகுப்புல ஏதோ டெஸ்ட் எழுதுவாங்களாமே!” என்று கேட்டபோது “ஆமா ஐயா ஓ எல் பரீட்சை” என்று கமலேஷ் அந்த பெரியவருக்கு பதிலளித்தான்.

“ஆமா… ஆமா….. அதுதான். அதுல எல்லா பாடத்துலையும் என் மகன் சிறப்பு சித்தி எடுத்தான். அதனால அவங்க ஸ்கூல்ல தொடர்ந்து படிக்குறதுக்கு காசு எதுவும் தேவயில்லனு சொல்லிட்டாங்க. தொடர்ந்து படிச்ச என் மகன் உயர் பரீட்சையிலும் பாஸ் பண்ணிட்டான். அதுக்கப்புறம் கொம்பியூட்டர் கிளாசுக்கு போகபோறேனு சொன்னான். நாங்களும் சரினு சொல்லி படிக்கவிட்டோம். அத படிச்சுக்கிட்டிருக்கும்போதே டவுண்ல இருந்து பெரிய யூனிவர்சிட்டில இருந்து லெட்டர் வந்திச்சு. திலிபன அவங்க யூனிவர்சிட்டில படிக்க கூப்பிட்டிருந்தாங்க. உடனே திலிபனும் அங்க சேர்ந்து படிச்சான். அங்கேயே தங்கி படிச்சதால சனியும் ஞாயிறும் மட்டுந்தான் நம்ம வீட்டுக்கு வருவான். அவன் என்ன படிச்சான்னு தெரியல. கேட்டா ஏதோ கொம்பியூட்டர்ல புரோகிராம் எழுதுர படிப்புனு சொல்லுவான். எங்களுக்கு இந்த கொம்பியூட்டர பத்தியெல்லாம் ஒன்னுமே தெரியாதுப்பா. அதனால நானும் அத பெருசா கவனிக்கல. ஏதோ அவனுக்கு புடிச்ச படிப்பா இருந்தா சரினு விட்டுட்டோம். நாலு வருசதுக்கு அப்புறம் அவனுக்கு பட்டமளிப்பு விழா நடந்திச்சு. என்னையும் அவங்க அம்மாவையும் வரச்சொல்லி கட்டாயப்படுத்தினான். நாங்களும் போனோம். அங்க ஆயிரக்கணக்கான பேர். நுpறைய பசங்க, டீச்சர்மார், வாத்திமார்னு எக்கச்சக்கப்பேர். என் மகனோட படிச்ச பலபேருக்கு பட்டம் கொடுத்தாங்க. அன்னைக்கு என் மகன கூப்பிட்டு பட்டம் கொடுக்கும்போது அவன் அந்த மேடைல இருந்து என்ன பார்த்து சிரிச்சது…….! இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு…

அவனுக்கு பட்டம் கிடைச்ச கொஞ்ச நாள்ல பெரிய கம்பனி ஒன்னுல இருந்து வேலைக்கு கூப்பிட்டிருந்தாங்க. அவனும்போய் பார்த்தான். நல்ல வேல கைநிறைய சம்பளம். அப்படினு வந்து சொன்னான். நானும் உனக்கு புடிச்சிருந்தா அந்த வேலைக்கே போபானு சொன்னேன். ரெண்டு வருஷமா அந்த கம்பனில வேல செய்தான். அவன் உழைச்ச காசுலதான் பழைய வீடா இருந்த இந்த வீட்ட புதுப்பிச்சோம். அவன்ட ரெண்டு வருஷ சர்விஸ்ச பார்த்து அவனோட முதலாளிமார் அவன வெளிநாட்டுல இருக்குற அவங்க கம்பனிக்கு அனுப்ப முடிவு பண்ணாங்க. என் மகனுக்கோ வெளிநாட்டுக்குபோக விருப்பமே இல்ல. ஏன்னா. எங்களுக்கு அவன் ஒரே புள்ள. எங்கள தனியா விட்டுட்டு போக அவனுக்கு விருப்பமில்ல. ஆனா நாங்கதான் அவன்ட எதிர்காலத்த நினைச்சு வெளிநாட்டுக்கு போக சொன்னோம். இப்போ அவன் அவுஸ்திரேலியாவுல இருக்கான்.” என்று தன்னுடைய மகனை பற்றி கூறி முடித்தார் பெரியவர்.

இதையெல்லாம் கேட்டுவிட்டு “உங்க மகன் அங்க இருந்து உங்களோட கதைப்பாரா? லெட்டர் போடுவாரா?” என்று கேட்டான் கமலேஷ். அதற்கு அந்த பெரியவர் “ஆமா கதைப்பான். அடிக்கடி லெட்டரும்போடுவான். அடுத்த வாரம் இங்க வரப்போறான்.” என்று கூறினார். “அப்படியா கட்டாயம் அவர நான் பாக்கனும். சரி ஐயா. நான் புறப்படுறேன். பிறகு வந்து உங்கள பாக்குறேன்.” என்று கூறிவிட்டு தன்னுடைய வீட்டுக்கு சென்றான் கமலேஷ்.

இரண்டு வாரம் கழித்து அந்த பெரியவரின் வீட்டில் நிறையபேர் வந்திருந்தனர். அந்த பெரியவரின் உறவினர்கள், நண்பர்கள், கிராமத்து மக்கள் என பலரும் அந்த பெரியவரின் வீட்டு வாசலில் நிரம்பி இருந்தனர். தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வந்த கமலேஷிற்கு ஒரே அதிர்ச்சி. பெரியவருக்கேதும் நடந்துவிட்டதோ என்று எண்ணி மிக வேகமாக அந்த பெரியவரின் வீட்டுக்கு ஓடினான். அங்கே அந்த பெரியவர் நலமாக தன்னுடைய உறவினர்களுடன் கதைத்துக்கொண்டிருப்பதைக் காண்டான். “ம்…….” என்று பெருமூச்சு விட்டபடியே அந்த பெரியவர் என்ன கதைக்கிறார் என்று சற்று காதுகொடுத்துக் கேட்டான் கமலேஷ். அன்று தன் மகனை பற்றி என்ன சொல்லிக்கொண்டிருந்தாரோ அதைதான் இப்போதும் கூறிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொண்டான். ஒருவேளை அவருடைய மகன் திலபன்தான் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டானோ என்று எண்ணி அந்த பெரியவரின் வீட்டிற்குள் நுழைந்தான். அங்கே வீட்டின் நடுவில் ஒருவரது படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு படையலும் வைக்கப்பட்டிருந்தது. கமலேஷிற்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டினுள்ளே இருந்த ஒரு பெண்ணிடம் “யாரம்மா இது?” என்று கேட்டான். “இதுதான் இவங்க மகன் திலிபன். ஒரே ஒரு புள்ள. போய் சேர்ந்துட்டான்.” என்று அந்த பெண் கூறியபடியே அழ ஆரம்பித்தாள். கமலேஷிற்கு தலையே வெடித்துவிடும்போல இருந்தது. “இரண்டு வாரங்களுக்கு முன்புதானே பெரியவர் தன்னுடைய மகன் அடுத்தவாரம் வரப்போவதாக கூறினார்!” என்று ஆச்சரியத்தோடு அந்த பெண்ணிடம் கேட்டான். அதற்கு அந்த பெண் “திலிபன் இறந்து 3 வருஷமாகுது. அவன் வெளிநாட்டுக்கு வேலைக்கு போறதுக்காக டவுணுக்கு போய்கிட்டு இருக்கும்போது வழியுல நடந்த விபத்துல இறந்துட்டான். இந்த வீட்டுலதான் திலிபன்ட இறுதிக்கிரியைகள் எல்லாம் செஞ்சம்.” என்றாள். “என்னமா சொல்றீங்க! அந்த பெரியவர் திலிபன் வெளிநாட்டுல வேல செய்யுறதா சொன்னாரே?” என்று கேட்க, அந்த பெண்ணும் “ தன்ட மகன் இறந்துட்டானு தெரிஞ்சதும் அவருட மனநிலை பாதிப்படைஞ்சிருச்சு. அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் திலிபன் வெளிநாட்டுலதான் இருக்கானு இவர் நெனைச்சுக்கிட்டு இருக்காரு. யார பார்த்தாலும் தன்னுடைய மகன பத்தியே பேசுவாரு. அடுத்த வாரம் என் மகன் வரப்போறான், அடுத்த வாரம் என் மகன் வரப்போறான்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு.” என்றாள். அப்போது அந்த பெரியவரின் மனைவி கமலேஷை பார்த்து “வாப்பா” என்று கூறியபடி அந்த பெரியவரிடம் சென்று ஒரு மாத்திரையை கொடுத்தார். அப்போதுதான் அன்றும் இதேபோல் பெரியவருக்கு மாத்திரை வழங்கியது கமலேஷிற்கு ஞாபகம் வந்நது. அவருடைய மனநிலை பாதிப்புக்குத்தான் இந்த மாத்திரை என்பதையும் உணர்ந்துகொண்டான்.

மறுநாள் காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த கமலேஷ் அந்த பெரிவரின் வீட்டை பார்த்தான். அந்த பெரியவர் அங்கே இருப்பதை பார்த்து அவரிடம் சென்றான். கமலேஷை பார்த்த அந்த பெரியவர் “ அடுத்தவாரம் என் மகன் வரப்போறான்” என்று சந்தோஷத்துடன் கூறினார். ஆறுதலுக்காக அந்த பெரியவரின் கைகளை பிடித்துக்கொண்டு “உங்க மகன் வந்துட்டான். இனி நான் தான் உங்க மகன்” என்றான் கமலேஷ்.

சித்திரவேல் சுந்தரேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் சுந்தரேஸ்வரன (12-Oct-13, 12:19 am)
பார்வை : 158

மேலே