கவிதையென்றொரு புரட்சி காணாமலாகி விடுமோ !

கால விருட்சம் சபித்த நிழல்களில்
முகம் தெரியாமல் அலைந்தபடியிருக்கிறேன்
குழந்தைகளின் சவ நெருக்கடியில் அட்டையென
போகுமிடமெல்லாம் துயர் வரைந்து ஊர்கிறேன்
அகாலத்தில் கொலையுண்ட எதிர்கால எச்சங்கள்
உயிர்த்தெழுந்து சொற்கள் கடவுளாக
யுத்த வீதிகளின் விபத்துக்கள் நினைவினில் அசைகின்றன
கொலைகளைப் பாடும் கவிதையெனவும்
அரசியல் பேசும் கவிஞன் எனவும்
வெந்து தணிந்த நிலத்திலிருந்து
விதைகள் பீறிட்டு எழுப்பும் குரல்கள்
குப்பைகளாக்கப்படுகிறது
மழைகள் பற்றி
வண்ணத்துப்பூச்சி பற்றி
பூஞ்சோலைகள் பற்றி
குற்றவுணர்வற்று திரியும் ஜாலச் சொற்கூடுகள்
மனச்சுமையற்று கவிதைகளாக்கப்படுகிறது
மூடிக் கொள்ளும் கதவினுள்ளே
தேடிப் போவது பொருத்தமற்றது
முடிவற்ற தூரங்களில் ஒளியொழுகும் புள்ளிகள்
விடுதலை தரக் கூடும் சிறுமைப்படும் குரல்களுக்கு
கிழட்டு இரவொன்றில் தப்பிக்கும் சத்தமாய்
இங்கிருந்து மெல்லப் பறந்து செல்லல்
கவிதைக்கும் எனக்குமான
விடியலுக்கான திறவுகோல்.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (18-Oct-13, 10:42 am)
பார்வை : 213

மேலே