முட்களில் ஈரம்
ஊர் முனையில்
உற்சாக உருவத்துடன்
அமர்ந்திருக்கிறார் ஐயனார் !
அதற்கடுத்து,
தாளுண்ட நீரைத்
தேனாகத் தருகின்ற
தென்னை மரத் தோப்பு !
சற்று நகர்ந்தால்,
பச்சைப் பசேலென்று
உயிருக்கு உணவுதரும்
வயல்கள் !
கயல் விளையாடும்
மடைகள் !
கூவும் குயில்கள் நிறைந்த
மாந்தோப்பு !
சுற்றும் காற்றாகப்
பாவாடை வீசத் திரியும்
மாமன் வீட்டு மரகதங்கள் !
புல் மேயும் கன்றுக்குட்டி !
புழுதியில் ஆடும் நாய்க்குட்டி !
என்று
எல்லோரும் ஒருவித
அமைதியில் லயித்திருக்க,
அந்த மூலைவிட்டு
முனியம்மாள் பாட்டியின்
கண்களில் மட்டும்,
நாட்டின் எல்லையில்
வீரரிட்ட வேலியில் பூத்த
முட்களில் இருக்கும்
நேற்று பெய்த மழையின்
இன்னும் காயாத
அதே ஈரம் !
-விவேக்பாரதி