போதிமரங்களை கொல்லும் புத்த புதல்வர்கள்

புத்தனோடு பேசியபடி
சிறைக் கம்பிகளின் துருவை சுரண்டிக்கொண்டிருந்தேன்
நூற்றாண்டின் காயங்களை எம்மீது பதித்த
போதிமரத்தின் அமைதியோடு
தன்னைத் தொழுவோரின் புத்தி
துப்பாக்கிகளின் முனையிலிருந்து நகர்வதாயும்
துக்கமய தேசத்தின் காருண்யம் பற்றியும்
ஆயிரம் விமர்சனங்களோடு சினமடைந்தான்
அதி பயங்கரத்தோடும்
அபரிமிதமான விழிப்போடும்
புத்தனின் சூட்சுமம் என்னைக் குழப்பியது
போர்க்குற்றங்களிலிருந்தும்
அவமானங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள
தசைக் குவியலுக்குள்ளிருந்த
மானுடத்தின் தூரிகையால்
சூடாறாத பிணங்களுக்கு
வண்ணமடிக்கும் இறையாண்மையின்
ஓவியர்கள் பெருகிச் செல்கின்றனர்
பாராளுமன்றம் நோக்கி
யாதொரு நாகரீகமுமற்ற
பிக்குகளின் நிழல் வீழ
தனி நாடு பற்றிய ஒவ்வாமையோடு
கடலிலேயே புதை குழி அமைத்த
தெற்காசிய கிட்லர்
புத்தனின் பிள்ளையாய்
விகாரையொன்றில் வணங்கியெழ
இந்து சமுத்திரத்தின் முத்தில்
கடவுள்கள் கொல்லப்படுவது புதிதல்லவென்று
அறிந்திராமல்
போதிமரங்களில் ஞானம் பெற்றவன்
ஒன்பது மில்லி மீட்டர் துப்பாக்கியொன்றால்
சுட்டுக் கொல்லப்படுகிறான்.
சிறகிழந்து வீழும் சிட்டுக்குருவியாய்
புத்தனின் தர்மம்
ஆயுதத்தால் வீழ்ந்து அவமானப்பட
கொடும்பனியில் நடுங்கும் தெரு நாயாய்
வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சிங்களத் தீவின் வஞ்சகமற்ற கொலைகளை.
புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி.

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (18-Oct-13, 11:00 pm)
பார்வை : 86

மேலே