நினைவலைகள்
75வது பிறந்த நாள் காணும்
என் சிறிய தந்தை செல்வமுத்திற்கு
பொன் முத்து வைர முத்து
விளைந் தெடுத்த நல் முத்து
அனைத்திற்கும் மேலானவர்
என் சிறிய தந்தை செல்வமுத்து
வைத்திலிங்கம் பத்ரகாளி ஈன்றெடுத்த நல் வித்து
கணிதத்திற்கு நீயே பெரும் சொத்து
கடமையும் கண்ணியமும் உன் ஏற்பு
வேகமும் விவேகமும் உன் வார்ப்பு
உண்மை உணர்வுகளை ஊனமாக்கி
அகத்திரையில் உள்ளடக்கி
முகத்திரையில் புன்னகைக்கும்
பாசாங்கு உலகத்தில்
கோபமோ தாபமோ
வெளிப்படையாய் காட்டிடுவாய்
முடிந்தவரை அதைக் காத்திடுவாய்
ஒரு சில நாட்கள் ஆசானாய்
கற்றுத் தந்தாய் கணிதப் பாடம்
தவறாக நான் செய்யின்
'ம்' என்ற உன் அதட்டலிலும்
புரிந்து விரைந்து நான் செய்யின்
பூரித்த உன் பெருமிதப் புன்னகையிலும்
உன் பாசத்தை நான் உணர்ந்தேன்
அந் நினைவலைகள் நெஞ்சில் மோதுகையில்
மனம் உன்னை நினைக்கும்
கண்கள் தானாய் கசிந்துருகும்
சிறுமியாய் சீனி மிட்டாய் வாங்க
உன்னிடம் சில்லறை பெற்றதும்
பள்ளிப் பருவத்தில் கணிதப் பாடம் கற்றதும்
குமரியாய் என் நளபாகத்தை
ஆசையாய் நீ சுவைத்ததும்
திருமதியாய் நின்ற போது
பாசத்தில் நீ வாழ்த்தியதும்
என் நெஞ்சறையில் நீங்காத நினைவலைகள்
ஆண்டுகள் ஓரிரண்டில்
அகவையில் அரை நூற்றாண்டை எட்டிடுவேன்
கடந்து வந்த கால் நூற்றாண்டில்
கனிந்த உன் முகம் நான் காணவில்லை
முக்கால் நூற்றாண்டை எட்டிய
என் சிறிய தந்தையே
நூற்றாண்டு கடந்து நீடூழி நீ வாழ
ஆற்றுப்படை இன்று படைக்கின்றேன்
மறைந்த எந்தையின் திருமுகத்தை
உன் உருவில் காண்கிறேன்
இறைந்து இறைவனிடம் வேண்டுகிறேன்
உடல் நலமும் உள நலமும்
உறவுகளின் உணர் பலமும்
நிறைவு கொண்டு நீ வாழ
கவி மலரை மாலையாக்கி
இறைவனடி சாத்துகின்றேன்.......
அமுதா அம்மு