மொட்டை மாடி

ஆகாயத்தின் அதிசயத்தை
அழகாய் காட்டுமிடம்
இடையூறின்றி அதிசயத்தை
இன்பமாய் களிக்குமிடம்
இந்த மொட்டை மாடி!!!

நிலவும் தாரகையும்
நீந்தும் அழகினையே
நிம்மதியாய் காணுமிடம்
நிகரில்லா மொட்டை மாடி!!!

மேகக் கூட்டங்களும்
எழில்மிகு வானவில்லும்
பார்வைக்கு பட்டவர்த்தனம்
ஆகுமிடம் மொட்டைமாடி!!!

கவிஞர்களுக்கு கவிதை வழங்கி
காவியமும் வடித்து வைக்க
அமைதி பூங்காவாய்
அமைந்ததுதான் மொட்டை மாடி!!!

காதலர்க்கோ என்ன சொல்ல
காதல் வளர்ப்பதற்கும்
காதலர் சமிஞ்கை பரிமாற்றத்திற்கும்
போக்குவரத்து இந்த மொட்டை மாடி!!!

வீட்டினிலே பிரச்சினையோ
காதலிலே தோல்வி என்றோ
வந்துவிட்டால் போதுமடா
ஊயிர் துறக்க உற்றதுணை
இந்த மொட்டை மாடி!!!

சிறுபிள்ளை விளையாட
வசிப்பிடத்தில் மேல்தளத்தில்
வசதியாய் அமைந்த ஒரு
விளையாட்டு மைதானம்தான்
இந்த மொட்டை மாடி!!!

அன்றாடம் துவைத்த துணியை
அழகழகாய் உலர்த்திடவே
குடும்பத் தலைவிக்கு
வண்ணான் துறையாய்
இந்த மொட்டை மாடி!!!

மின்சாரம் கைவிட்டதென்றால்
புழுக்கம் தவிர்த்திடவே
குடும்பத்தார் அனைவருமே
காற்றாட வரும் சோலை
இந்த மொட்டை மாடி!!!

விருந்தினர் வருகையென்றால்
அனைவர் கூடி கதை பேசி
நிலவொளியில் உறங்கிடவே
படுக்கையறை இந்த மொட்டை மாடி!!!

வண்ணத் தோட்டமிட
இடம் தேடி அலையாமல்
வாசமலர் செடி நடவே
வாட்டமான தோட்டமிந்த மொட்டை மாடி!!!

பெரியோரும் சிறியோருமாய்
கட்டுக் கோப்பாய் உடல் பேண
ஓசியிலே அமைந்ததுதான்
உடற் பயிற்சிக் கூடமென
இந்த மொட்டை மாடி!!!

வீட்டினிலே வைபோகமென்றால்
விருந்தோம்பல் நடந்திடவே
உற்றார் உறவினர்க்கும்
உணவு பந்தியாகுமிடம்
இந்த மொட்டை மாடி!!!

மனைவிக்கு தெரியாது கணவனுமே
பெற்றோர் கண்ணை மறைத்து பிள்ளையுமே
மது அருந்தும் பார்லருமாய்
மறைவிடமானதிந்த மொட்டை மாடி!!!

சிறு சிறு பாத்தி கட்டி
வகை வகையாய் காய்கறிகள்
உயிர் சத்து கீரை வகை
யாவையுமே பயிர் செய்ய
வசதியான மொட்டை மாடி!!!

தீபாவளித் திருநாளில்
ஓசியிலே வான வேடிக்கையை
கண்டு ரசித்திடவே
கச்சிதமாய் இருக்குமிடம்
இந்த மொட்டை மாடி!!!

கருத்தரங்கு கூட்டத்திற்கும்
கவிஞர்கள் கவி பாடுதற்கும்
புத்தக வெளியீட்டிற்குமாய்
அமைந்த நல் அரங்குதான்
இந்த மொட்டை மாடி!!!

எத்தனையோ சிறப்பு மிக்க
சீர்மிகு மொட்டை மாடி
அத்தனை சிறப்பினையும்
கவியில் சொல்லி - நாம்
மகிழ்ந்திடுவோம் பாடிப்... பாடி...

எழுதியவர் : சொ. சாந்தி (25-Oct-13, 5:17 pm)
பார்வை : 942

மேலே