கண்டிப்பு

ஒரு சிறுவன் தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படிக்கும் நண்பர்களில் ஒருவனுடைய பாடப் புத்தகத்தைத் திருடிவிட்டான். அதை வீட்டிற்குக் கொண்டு
வந்து தன் அம்மாவிடம் கொடுத்தான். அவனுடைய திருட்டுச் செயலை தாயும் கண்டிக்கவில்லை.அதற்கு மாறாக மேலும் உற்சாகமூட்டினாள். கண்டிக்கப்படாத சிறுவன் மறுமுறை ஒரு கடிகாரத்தை திருடிக்கொண்டு வந்து தன் அம்மாவிடம்
கொடுத்தபோதும் அவள் தன் மகனைக் கண்டிக்காமல் தொடர்ந்து உற்சாக மூட்டினாள். அதன் பின்பு அச்சிறுவன் பெரிய அளவில் திருடத்தொடங்கினான்.
வீடுகளில் தைரியமாகப் புகுந்து கொள்ளையடிக்கவும் ஆரம்பித்தான். ஒருநாள் அவன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அரசனால் தண்டிக்கப்பட்டு கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டான்.

அந்த இடத்தில் கூடியிருந்த பொது மக்களில் அவனுடைய தாயும் இருந்தாள். மகனின் தண்டனையைக் குறித்துத் துயரம் தாங்காமல் அடித்துக் கொண்டு புலம்பினாள். அப்போது மகன் "என் அம்மாவிடம் நான் காதோடு காதாக ஒரு விஷயம் பேச வேண்டும்" என்று காவல்காரர்களிடம் கேட்டுக் கொண்டான். தாயாரும் தன் மகனின் அருகில் நெருங்கினாள். அப்போது மகன் "அம்மா அன்றொரு நாள் முதன்முதலாக நான் பள்ளியில் இருந்து பாடப்புத்தகத்தை திருடிக்கொண்டு வந்து உன்னிடம் கொடுத்த போது அப்போதே நீ என்னை அடித்துக் கண்டித்திருந்தால் நான் இவ்வளவு மோசமான நிலைமைக்கு ஆளாயிருக்க மாட்டேன். இம்மாதிரி ஒரு திருடனாக சாகும் நிலையும் ஏற்பட்டிருக்காது" என்று கண்ணீருடன் கூறினான். தாயும் காலம் கடந்து உணர்ந்தாள்.

எழுதியவர் : படித்தது (26-Oct-13, 10:18 pm)
பார்வை : 693

மேலே