இந்தத் தீபாவளி உங்களுடன்

நட்பின் விளக்கு
எங்கும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது

அன்பின் மலர்கள்
எங்கும் மலர்ந்து மணம் வீசுகின்றது

நேசத்தின் கானம்
எங்கும் ஒலித்து வசீகரிக்கின்றது

என் எண்ணங்கள் - உங்கள்
வாசலில் சங்குச்சக்கரமாய் சுழல்கின்றது

என் ஆசைகள் - வானவெடியாய்
உங்கள் மனவானில் ஆவலுடன் பாய்கின்றது

என் விரல்கள் - மத்தாப்புப் பூக்களைத்
தெளிக்க வைத்து நடனமாடுகின்றது

நீங்கள் ரசிக்க உங்கள் முன்னால் - அது
அதிசய ஒளிக்கோலங்களை வரைகின்றது

மகிழ்வலைகளில் மிதந்து வந்த கனவு
உங்கள் இதயக் கரையைத் தொடுகின்றது

காலம் தந்த உறவைக்கண்ட
மனம் கோயில் ஒன்றைக் கட்டுகின்றது

அதைக் கண்டும் உணர்ந்த சிந்தை
கண் கலங்க ஆனந்தத்தில் வணங்குகின்றது

பாசத்தின் நெருப்பால் - என்னைப்
பற்ற வைத்து விட்டது எனக்குப் புரிகின்றது

உங்களைப் பற்றி உங்களில் பற்றி
எரிகின்றது... அது கொளுந்து விட்டு எரிகின்றது

அங்கு பேதமையும் சஞ்சலமும் -பொசுங்கிப்
புனிதம் கூடுவது கண்கூடாய் தெரிகின்றது

வெடித்துச் சிதறும் நெருப்பின் யாகத்தில்
இன்பம் பொங்கிப் பெருகி எனக்குள் கலக்கின்றது

அங்கு... நான் உங்களின் இணைபிரியாச்
சொந்தமென்ற எண்ணம் உயிரில் நிறைகின்றது !

இந்த பந்தம் இந்த இன்பம் -நிலைத்திடக்
காலம் நல் வாழ்த்தினைப் பொழிகின்றது !!

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (1-Nov-13, 12:16 pm)
பார்வை : 102

மேலே