என்னை மன்னிக்காத ஆவிகள்

ஆவியை நம்பாதவரும் வாரும்
என் தடுமாற்றங்களைப் பாரும்
பிறகு எனக்கொரு வார்த்தை கூறும் !

கேளுங்கள் நியாயவாதிகளே
மனங்களை திறந்துவைத்துக் கேளும் !!

அவர்களைப்பற்றித்தான்
கூற வருகிறேன்
ஆவிகளைப்பற்றியல்ல !

இனிக் கேளும்.

அவர்கள்
நாடகக் கலையில்
வல்லுனர் என்பதை நிரூபிக்குங்கால்
ஆவிகள் என்னைத் தேடிக் கொண்டிருந்தன

அவர்கள் மேடைகளைத் தயார் செய்கையில்
ஆவிகள் என்னிடம்
நம்பிக்கையுடன் சில வார்த்தைகள் பேசின

அவர்கள் ஒப்பனையில் மூழ்கியபோது
ஆவிகள் என்னைப் பற்றி
விசாரிக்க ஆரம்பித்தன

அவர்கள் விளம்பரம் தேட
மேடைகளில் நடித்துக்காட்டிய நாட்களில்
ஆவிகளின் கதைகளை
நான் உயிரில் நிரப்பிக் கொண்டிருந்தேன்

இப்போது
இன்னும் புதிய ஆவிகளும்
என்னைச் சூழ ஆரம்பித்தன

அவர்கள் நேசக்கரம் நீட்டியபோதும்
தோள் கொடுப்பதாய் சபதம் செய்தபோதும்
மேடையை அதிரச் செய்தபோதும்
ஆவிகளின் கேள்விகளுக்குப் பதில்
தேடும் நிலையில் தவித்துக் கொண்டிருந்தேன்

அவர்கள்
உயிருக்குப் போராடுபவர்களைப் பார்த்து
உடன்பிறப்பென்றும் ஓர்குடி இனத்தான் என்றும்
நாடகத்தைத் தொடர்ந்தபடி
நம்பிக்கையை வளர்த்துங்கால்
நான் ஆவிகளின் கோபத்திற்கு
ஆளாக நேர்ந்து கொண்டிருந்தது

அவர்கள் நாடகத்தை ஒத்திவைத்த
சூனியக் காலங்களில்
ஆவிகளின் பார்வையில்
குற்றவாளியாய் நின்றிருந்தேன்

அவர்கள் நடிப்பதே தமது
சுயரூபம் என்பதை நிரூபித்தபோது
ஆவிகள் என்னை
விரோதி என்று அறிவித்தன

இப்போது
இன்னும் புதிய ஆவிகளும்
என்னைச் சூழ ஆரம்பித்தன

என் மௌனமும்
அவர்கள் நடத்திய நாடகத்திற்கு
காட்சிகளாய் அமைந்ததையும்
காலம் கடந்த என் வருத்தத்தையும்
ஆவிகள் ஏற்க மறுக்கின்றன

ஆவிகள் வாய் திறக்கின்றன.,

“நம்பிக்கையும் உறுதிமொழியும் மட்டும்
யாரையும் வாழவைக்காது
இனியாவது செயல்படுங்கள்
அல்லது...
விலகுங்கள்! "

இப்போது
ஆவிகளின் கேள்விக்கணைகள்
இலங்கை ராணுவத்தின்
அட்டூழியம் போல
என்னைத் தாக்க ஆரம்பிக்க...
நான் அப்பாவி மீனவன் போல
நிலைகுலைந்து நிற்கிறேன்...

குட்டி மணி முதல்
இசைப்பிரியா வரை
நாங்கள் என்ன
நாடகமா நடத்தினோம் ?

உங்கள் வேடிக்கையும்
உங்கள் விமர்சனமும்
உங்கள் போராட்டமும்
உங்கள் பரிதாபமும்
உங்கள் அரசியலும்
உங்கள் முகமூடியும்
எங்களுக்கு வேண்டாம்...

இவைதான்...
உங்களின் இத்தனையும்தான்
எங்களை
நிர்கதியாக்கியது

உங்களின் அலட்சியம்தான்
எங்களை
நாடு கடத்தியது

உங்களின் பாராமுகம்தான்
எங்களை...
எங்களை ஆவிகளாக்கியது

ஆம் !
உங்களை
நம்பிக் கொண்டிருந்த
வேளைகளில் தான்...
உங்களது ஆதரவை
எதிர்பார்த்துக் கொண்டிருந்த
வேளைகளில்தான்
நாங்கள்
ஆவிகள் ஆக்கப்பட்டோம்

நீங்கள்
ஒரு முடிவிற்கு வரும்போது
ஈழத்தில் தமிழன் எவனாது
உயிருடன் இருப்பானா
என்பதற்கு என்ன நம்பிக்கை

உங்களைத்
துரோகி என்றால்
என்ன தவறு ?

...என்ற ஆவிகள்
என்னைத் தூக்கி எரிந்துவிட்டு
மறைகின்றன.

ஆவியை நம்பாதவரும் வாரும்
என் தடுமாற்றங்களைப் பாரும்
பிறகு எனக்கொரு வார்த்தை கூறும் !

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (7-Nov-13, 11:34 am)
பார்வை : 226

மேலே