அருட்பா திருக்குறட்பா

பேராசிரியர் வெ.அரங்கராசன்
முன்னாள் தமிழ்த்துறை தலைவர்
கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி
கோவிற்பட்டி- 628 502.
கைப்பேசி: 98409 47998.

அருட்பா திருக்குறட்பா

குறும்பா, பெரும்பா, அரும்பா...
அறம்பொருள் இன்பம், தரும்பா...
விரும்பா தவரும், விரும்பும்
நறும்பா, அருட்பா குறட்பா...

எறும்பா உழைத்திட அரிவினைத்
தரும்பா, பெரும்புகழ் பெரும்பா...
இரும்பா இருப்போர் தமையும்,
கரும்பாக் கரைக்கும், குறட்பா...

விருப்பா? வெறுப்பா? இரண்டையும்
அறுப்பா, எனச்சொலும் திருப்பா...
திறப்பா, படித்துப் பறப்பா...
நெறிப்பா, குறிப்பா இருப்பா...

அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும்
உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா...
கோலப்பா, கொண்டு பாரப்பா...
ஞாலப்பா, நாளும் ஓதப்பா...

முன்பா பின்பா ஒப்பா
நன்பா, இன்பா, மின்பா...
அன்பா அறிவிக்கும் மன்பா...
துன்பா? வன்பா? விடும்பா...கனிப்பா, தனிப்பா, குறள்போல்
இனிப்பா எப்பா? புனிதப்பா...
மனிதப்பா, அமுத மொழிப்பா...
மணிப்பா, ஆணிப்பா, பணிப்பா...

"கற்பா இருப்பா" எனும்பா...
பொற்பா, பொங்கும் சொற்பா...
நற்பா, நலப்பா, தலைப்பா...
இற்பா, இயற்பா, இசைப்பா...

தோணிப்பா, ஏற்றும் ஏணிப்பா...
இணைப்பா இல்லாத் துணைப்பா...
வினைப்பா, விரும்பி அணைப்பா...
"முனைப்பா இருப்பா" எனும்பா...

செழும்பா, மொழிந்திட உளந்தனில்
விழும்பா, கதிராய் எழும்பா...
பழம்பா, இன்றும் புதுப்பா...
தழும்பாக் கலைப்பா, விழுப்பா...

களிப்பா, அளிப்பா….நமதிரு
விழிப்பா, அனைவர்க்கும் வழிப்பா...
ஒளிப்பா, தப்பா? கழிப்பா,
பழிப்பா? ஒழிப்பா, எனும்பா...விதைப்பா, மனத்தினில் விதைப்பா
கதைப்பா, குறட்பா தமிழ்ப்பா...
குதிப்பா, புரட்சிச் சிந்தைப்பா...
மதிப்பா இதனை மதிப்பா...

ஞானப்பா, இதுபோல் ஏதப்பா?
மானப்பா, முழுதும் தேனப்பா...
ஒப்பா ஒருபா எப்பா?
அப்பா, நம்திருக் குறட்பா...

நகைப்பா, அகப்பா, புறப்பா...
நயப்பா, வியப்பா இருக்குப்பா...
சுகப்பா, முகப்பா, யுகப்பா...
சிகரப்பா, வரம்தரும் தரப்பா...

ஒண்பா, தண்பா…..குறளெனும்
வெண்பா, நுண்பா, எண்பா...
பண்பா, மண்பா…..ஒளிதரும்
கண்பா, திண்பா, வண்பா...

நம்பா, உலகம் முழுதும்
"எம்பா" எனுமொரு செம்பா...
நோன்பா, பொருளில் வான்பா...
மாண்பா, தாங்கும் தூண்பா...

ஆக்கப்பா, மூச்சாய் ஆக்கப்பா...
ஊக்கப்பா, உளந்தனில் தேக்கப்பா...
நோக்கப்பா, மனித நோக்கப்பா...
தூக்கப்பா, மனத்தால் தூக்கப்பா...

படிப்பா, படிப்பா, குறட்பா...
படிக்கப் படிக்கப் படியும்பா...
உரைக்க உரைக்கப் புரியும்பா...
விரிக்க விரிக்க விரியும்பா...

இப்பா அப்பா எப்பாஎனப்
பாப்பா வாகச் செப்பாது,
முப்பால் முழுதும் படிப்பா...
தப்பா வாழ்வு தப்பாது...

எழுதியவர் : பேராசிரியர் அரங்கராசன் (11-Nov-13, 5:15 pm)
பார்வை : 75

மேலே