பனிவீழும் தேசத்தின் பிரதம மந்திரிக்கு

பனிவீழும் தேசத்தின் பிரதம மந்திரியே
உயிர் வீழும் தேசத்திற்கு வருக வருக
காலனித்துவத்தில் உங்கள் ,பூட்டனும்,பாட்டனும்
பரிசளித்த பாவிகள் ஆளும் பூமிக்கு வருக வருக
நீங்கள் கொடுத்துச் சென்ற சுதந்திரத்தில்
குருதி தெளித்து பூசையிடும் பவுத்தன் உள்ள நாடு
தேயிலைச் செடிகளின் அட்டைகளில்
உங்கள் உறிஞ்சுதல் இன்னுமிருக்கிறது
வெள்ளைக் கால்கள் பூமி தொடாமல்
பல்லக்கு சுமந்த உங்கள் சாரதிகளின்
சொந்தங்கள் இருக்கிறார்கள்
சுகம் விசாரித்து சுகமில்லை என்று கேட்பதை
பார்க்கிலும் கரம் கொடுத்து கை குலுக்கி கொள்ளுங்கள்
"கேக்" வெட்டி பிறந்த நாள் கொண்டாடும்
இளவரசப் பெரியவருக்கு
கண்ணீரால் பூச்செண்டும்
கூக்குரலால் வாழ்த்துக்களும்
சொன்னதாய் சொல்லுங்கள்
மானுடத்தை அழித்த மகாபெரும் துன்மார்க்கரோடு
பிறந்தநாளை கொண்டாடியது பெருமையெனில்
பூவுலகத்தையே அழைத்து கொழும்பில் இன்னுமொரு
புது கேக் வெட்டச் சொல்லுங்கள்
பொதுநலவாய மாநாட்டில் பொழுது போகவேண்டுமென்றால்
தமிழர் பிரச்சனை பற்றி சற்று பேசுங்கள்
சிவப்பு துண்டை கழுத்தில் போர்த்திய
சூக்குமம் பற்றி வினவுங்கள்
ஏசி அறையில்
வீசும் காற்றில் பிணவாடை வரலாம்
ஈஸியாக கண்டுபிடியுங்கள்
வெள்ளைக் கொடியோடு விடுதலைக்காய்
நகர்ந்தவர்களின் உயிர் மூச்சென
இல்லாது போனால் "வெள்ளை வான்' ஏற்றிச்
சென்ற தமிழ்க் குருத்துகளின் உயிர் போனதுவாய்
தார்ச் சாலைகளில் கண்ணீர் பாய
உன்னைக் காண தவமிருக்கும்
காணமல்போன தமிழர்களின் தாய் மாரை பார்
வெள்ளைப் புறாவிற்கு "பொல்டோன்" கொடுத்தவர்கள்
வீதியில் நிற்பார் ஆயுதத்தோடு
நீங்கள் வழங்கிய "பவள்" கவசம் வீதியுலா வருமே
கண்டு மகிழுங்கள் .
கமரோனே!
நீ நேற்று ஏறி கை அசைத்த நூலகம்
தீக்கிரையான தமிழர்களின் முகவரி
விடுதலைக்காய்
என் பரம்பரை சிந்திய குருதியின் ஆழத்தை
எதை வைத்து அளக்கப்போகிறாய்
விடுதலை என்பதை பேசிப்பெறும் எண்ணமில்லை
போராடிப் பெறுவதென்பதே முடிவு
செவிடர்களோடு பேசுவதைப் பார்க்கிலும்
காதில் அறைவது தகும்
நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்களே
ஆவி பிரியும் அடுத்த கணத்திலும்
தமிழனின் கனவு எதுவென்பதை
கொழும்புவுக்கு சொல்லிவிட்டு செல்லுங்கள்
வடக்கும் கிழக்கும் தமிழரின் தாயகம் என்று
இலங்கையின் பிரதேசமென்று உறுதி இருந்தால்
எரிக்கச் சொல்லுங்கள்
இறுதியில் இதனையும் சொல்லுங்கள்
தமிழன் என்பவன் தேசிய விழிப்பில்
தலைநிமிரத் தெரிந்தவன்
நன்றி
Thank you
very much .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (16-Nov-13, 11:44 am)
பார்வை : 74

மேலே