ஆறும் சாலையும்
வளையும்;நெளியும்; குறுகியும், சுருங்கும்;
அலையும்; ஒளியும்; ஆங்காங்கே விரிந்தும் பரந்து.
நெடிதுயர்ந்த நெட்டை நெடு கட்டிடங்கள்;
அடிசரிந்த அரண்மரங்கள் வழி நெடுகும்.
காய்ந்துபோன பெருமரங்கள் இருமருங்கும்;
மாய்ந்துபோன கட்டிடங்கள் செவியுரைக்கும்;
சாய்ந்துபோன இயற்கையை புவியுணர்த்தும்;
ஆய்ந்துரைத்தும் ஏற்றிடா ஏற்றம்தாம்;
பளபளக்கும் சடசடக்கும் நீரோட்டம்;
கலகலக்கும் தடதடக்கும் காரோட்டம்;
புரட்டி உருட்டி இழுத்து செல்லும் செடிகொடிகள்;
விரட்டி மிரட்டி விரைந்து ஊரும் வாகனங்கள்;
இயற்கைஅன்னை ஆறெமக்கு நலம் பயக்கும்;
செயற்கைவினை சாலைதாம் கட்டமைப்பாம்;
ஆறின் ஆற்றல் அளப்பரியது: மண்ணுணரும்;
சாலைஏற்றம் செயற்கரியது; வளர்ச்சியாகும்;
காக்கப்பெற்ற ஆற்றுவழி என்றும் தேவை;
கட்டுப்பாடான கட்டமைப்பு இன்றைய தேவை.
தேக்கமுற்ற தேசநலன் பேணவேண்டும்
நீக்கமின்றி காத்து சிறக்க இவ்விரண்டும்;