அகத்துக்கு ஏது மரணம்

துரோகியின் தோள்களில் சாய்ந்து
==தோழமை வைக்கலாம் நன்று.
விரோதியாய் இல்லாத அன்பில்
==வெண்மனம் கொண்டநல் நட்பு
சரோருகம் மேலொரு நீராய்
==சல்லியம் செய்திடும் போது
புரோகம் காட்டிடும் நன்றி
==பூமியில் மேலேனத் தோன்றும்.

மனசது வெறுத்திடும் போது
==மரணமே மேலேனத் தோன்றும்
இனசன மெல்லாம் வாழ்வின்
==இரவல் பொருளெனப் போக
வனமதில் வாழ்ந்திடும் மிருகம்
==வாழ்வது உயர்வென கொள்ள
தினமொரு துயர்நிலை நடுவே
==திரிந்திடும் உயர்திணை மனிதா..

ஆழியில் வீழ்ந்திடும் பந்து
==அமிழ்ந்திட மறுப்பதைப் போன்று
ஊழியில் செய்திடும் பாவம்
==உனையேச் சுற்றிடும் காலம்
நாழிகை நிமிடம் என்று
==நகர்ந்திட மறுப்பதை உணர்ந்தால்
பாழியில் சேவைகள் புரியும்
==பாவனைத் தோன்றிடும் உன்னில்

தென்றல் வந்திடும் தெருவில்
==தேடி வந்திடும் சேதி
ஒன்றில் உனக்கொரு நீதி
==உலகில் சமைத்தவன் இருக்க
என்றும் மரணம் மறந்து
==எதிலும் கலக்கம் அடைந்து
இன்றில் துடிக்கும் மனிதா
==இயற்கை யைவெல்வ தெளிதா?

வளிதனை தவிர்த்திடும் சயனம்
==வாழ்வினை முடித்திடுந் தருணம்
தெளிவுக ளோடொரு பயணம்
==தேடி அடைந்திடும் மயானம்
நெளிவுகள் சுளிவுகள் அகற்றி
==நிம்மதி யாயொரு தியானம்
அளிப்பதை தினசரி உணரும்
==அகத்தினில் ஏதொரு மரணம்?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (22-Nov-13, 1:47 pm)
பார்வை : 80

மேலே