எனது கிராமம்-----அஹமது அலி------

தாமரைப் பூச்செண்டு
புளியங்காய் தோரணங்கள்
பனை மரக் கம்பங்கள்
கருவேலப் பந்தல்கள்
*)))
மெல்லிய தென்றல் காற்று
சிறுக அசையும் தென்னங்கீற்று
கொஞ்சம் உவர்ப்பாய் உப்புக் காற்று
உரசிச் செல்லும் வங்கக் கடல் காற்று
*)))
சுத்தாமான சுவாசம் இலவசம்
தேனாய் ஊறும் தண்ணீரில் பரவசம்
அமைதி மேவும் சாந்தத்தின் புகலிடம்
இப்படியே தரும் பல சுகம்!
*)))
சின்னஞ் சிறு கிராமம்
சில நூறு மனிதத் தலைகளே வாழும்
உறவுப் பினைப்பிற்குள்ளே ஊர்
உடலும், விரிசலும் உள்ளபடியே...
*)))
பேருந்துகள் நிற்காமல்
செல்வதற்கென ஒரு பேருந்து நிறுத்தம்
பல பஞ்சாயத்துகளை
உருவாக்க, நிர்வகிக்க
ஒரு பஞ்சாயத்து அலுவலகம்
*)))
அறிவைப் பெருக்க நூலகம்
ஆயினும் வாசிப்பாளர்களை
தேடி வாடும் நூல்களும்....
*)))
பாவமாய் பலகீனமாய்
அசுத்தமாய் ஒரு சமுதாயக் கூடம்
எப்போதாவது சுப நிகழ்ச்சியில்
ஊரே அங்கு கூடும்!
*)))
எல்லையில் வரவேற்கும்
தேநீர் கடைகள்
"குடி"மகன்கள்
சுற்றம் சூழ......
*)))
வெட்டிக் கதை மேடைகள்
முட்டிக் கொள்ளும் வார்த்தைகளில்
எவர் வீட்டின் ரகசியமும்
அம்பலமாகும்....
*)))
இரை தேடும் பறவைகளாய்
வேலை தேடி வெளிநாடு சென்று விட
வெறிச்சோடிய வீதிகளும்
பூட்டிய வீடுகளும்
தன் சோகங்களைச் சொல்ல
ஆள் தேடும்!
*)))
சில்லுப் பெயர்ந்து
மேடு பள்ளமான
மண்ணோடு கலந்த சாலைகள்
தம் தரத்தினை எடுத்துச் சொல்லும்!
*)))
நட்டு வைத்த
தொலைத் தொடர்பு கோபுரங்கள்
புதிய அடையாளங்களாய்
தன்னை அறிமுகம் செய்யும்!
*)))
கட்டுப்பாடுகளில்
கட்டப் பட்டிருந்த பெருமைகள்
காலப் போக்கில் தளர்ந்து
பழம் பெருமைகளை மட்டும்
பேசிய படி எங்களோடு இன்று!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (24-Nov-13, 7:53 am)
பார்வை : 199

மேலே