தொடர்ந்து முயலு தொலையும்வரை முயலு

முட்டு முட்டு முட்டு;
முட்டி முட்டித்தான்
மூண்டெழுகிறது விதை...!
''முடியும் உன்னால் முட்டு''...

தட்டு தட்டு தட்டு;
தட்ட தட்டத்தான்
சப்தம் பிறக்கிறது...!
''பலமாகத்தட்டு முடமல்ல நீ''...

தாங்கு தாங்கு தாங்கு;- அடி
தாங்கத் தாங்கத்தான்
தகதகக்கிறது தங்கம்...!
''சவலயல்ல நீ தாங்கு''...

பேசு பேசு பேசு;
பேச பேசத்தான்
தெளிகிறது சித்தம்...!
''நாக்கிருக்கு உனக்கும் பேசு''...

வீசு வீசு வீசு;- வலை
வீச வீசத்தான்
விழுகிறது மீன்கள்...!
''வீரன் நீ விண்ணோக்கி வீசு''....

ஓடு ஓடு ஓடு;
ஓடி ஓடித்தான்
இலக்கை அடையும் ஆறு...!
''கால்கள் தயாராகத்தானிருக்கிறது ஓயாமல் ஓடு''...

தேடு தேடு தேடு;
தேட தேடத்தான்
தெரிகிறது விடை...!
''ஆற்றலுண்டு உனக்கு ஆழமாய்த் தேடு''...

எழு எழு எழு;
எழுந்ததனால்தான்
உயர்ந்து நிற்கிறது இமயம்...!
''எதுவும் முடியும் எழுச்சிகொண்டெழு''...

தாண்டு தாண்டு தாண்டு;
தடைகளை தாண்டித் தாண்டித்தான்
சமத்துவம் வளர்க்கிறது காற்று...!
''இளைத்தவன் அல்ல நீ தாண்டு''...

முயலு முயலு முயலு;
உனதுப் பாதை நீளமானது...!
தொடர்ந்து முயலு
தொலையும்வரை முயலு...!!!

---------------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (26-Nov-13, 11:44 am)
பார்வை : 390

மேலே