சனனம் புதிதாய் எடுத்து

பந்துரம் சொட்டும் இந்தப்
பிள்ளைக்குப் பவுடியம் இனிமேல்
சேமமே என்று கூறி
சிட்டர் சிரித்திருந்தார்.
புலிக்குட்டிப் பிறந்ததென்று
புவனமே கொண்டாடி அன்று
இந்திரன் சந்திரன் என்று
இமயவன் என்றும் சொல்லி

விந்திய கண்டம் இதிலே
கண்ட நற்கல்வி தந்தார்
உந்திடும் பருவங் கண்டு
உயர்வுடை பணியுஞ் சேர
மேதினி தன்னில் நல்ல
பொற்புடைப் பெண்ணைக் கட்டி
பூதலம் பூமரமென்று
பூரண நெஞ்சினோடு
பெட்டையும் ஆணும் ஒன்று
பெற்றனன் பிணைவின் பயனாய்.

பரிமளம் போலே மக்கள்
பரிவாரம் சூழ சுற்றம்
நெறியிலே நெருக்கம் கொண்டு
நேயத்தில் நைதல் இன்றி
நோய் நொடி ஏதுமிலாமல்
நொவ்வியக் காலம் கரைய

பசைபதம் கொண்ட மக்கள்
திரவியம் தேடிடவென்று
திரைகடல் தாண்டி ஓடி
திருமகன் தன்னை மறக்க,
திருட்டியே பட்டதைப் போல்
திடுமென வீழ்ந்த தருணம்
திருடனாய் மூச்சுக் காற்றும்
திசை தெரியாமல் போக

காந்தார வீணையென்று கோடி
கம்பளம் ஒன்று விரித்து
குணபமாய் அதிலே கிடத்தி
கூட்டமாய் குழுமி ஆங்கு
குரவனே, குலப் பெருமகனே,
கேள்வனே உறங்கிடென்றார்.

எலிச் சொடுக்கு தன்னில்
எளிதாய் மாறிப் போகும்
கணிணித் திரையில் தோன்றும்
கண்கவர் காட்சிகள் போல்
பிலித்திட்ட ஆசைக் கடலில்
பிறங்கிடும் மனத்திரை கொண்டு
கண்களை மூடி அவரும்
கால்மணி படுத்துக் கிடக்க

சவமெனக் கிடக்கும் போதும்
சிரித்துத்தான் நானிருப்பேனெனும்
சபதம் நினைவில் தோன்ற
சம்படம் தூக்கிப் போட்டு
சனனம் புதிதாய் எடுத்து
சன்னத்தன் ஆயினார் வாழ

பந்துரம் சொட்டும் இந்தப்
பெயரனின் பவுடியம் இனிமேல்
சேமமே என்று சொல்லி
சிவநேசர் சிரித்திருந்தார்.

எழுதியவர் : தா.ஜோ. ஜூலியஸ். (26-Nov-13, 2:15 pm)
பார்வை : 135

மேலே