ஊமை உதடுகள்

ஓலை வீடு குடிசை வீடாக மாறியிருந்தது. திண்ணையில் முன்பு போன்று பொருட்கள் அதிகம் இல்லை. ஒரே ஒரு நாற்காலி மட்டும் ஓரமாக அமர்ந்திருந்தது. மற்ற படி காலியாக இருந்தது. கலை இழந்த கோவிலை போல் காட்சி அளித்தது. கதவு சற்றே திறந்திருந்தது.
ஊர் மக்கள் சிலர் அவனை சுற்றி வட்டம் இட்டு நின்று கொண்டிருந்தனர். சாலையில் செல்பவர்களில் சிலரின் கவனம் அவன் மேல் இருந்தது.
இரண்டு நிமிடம் மட்டும் வெளியே நின்று, அதிகமாய் வர தொடங்கும் அவன் கண்ணீரை கட்டு படுத்திகொண்டு, வீட்டுக்குள் நுழைந்தான் அமுதரசன்.
கதவை தள்ளினான். அதே சத்தம். “கீச்” என்று. கிழவி ஒன்று காய்கறி நறுக்கி கொண்டிருப்பதை பார்த்து,
“அம்மாஆ....”
கிழவி தன் கண்ணை சுருக்கி கொண்டு வாசல் பக்கம் திரும்பினாள்.
பன்னிரண்டு வருடம் கழித்து தான் பெற்ற மகனை பார்க்கிறாள். அவன் உடல் இளைத்து கறுத்து இருந்ததை பார்த்த அவள் நறுக்கிகொண்டிருந்த காய்கறிகளை அப்படியே போட்டுவிட்டு, சுவற்றில் கை வைத்து எழுந்தாள்.
கிழிவதற்கு காத்திருந்த அந்த சட்டையுடன் அவன் நின்றதை பார்த்த தாய் ஓடி சென்று அவனை கட்டி அணைத்து,
“சாமே........ நாங்க என்ன பாவோ டா பண்ணோ, நல்லாக்குரியா பா.. உம் பொஞ்சாதி எங்கடா வரலியா???” கன்னம் தடவிய அவள் கைகள் நன்று நடுங்கியது.
“இல்லே மா.. நா மட்டுந்தா.......”
“இப்பிடி இரு ராசா.. மோர் தரவா??”
“தா மா”
அடுப்பறைக்குள் சென்று மோர் கொண்டு வந்தாள்.
“இந்தா.. பன்னெண்டு வருஷோ ஆச்சி.. எல்லா இந்த பாழா போன மனுஷனால வந்தது. வேற ஜாதி பொண்ணா இருந்தா என்னவாம். பாக்க நல்லா லட்சணமா இருந்த பொண்ண போய் அது இது னு வீட்டுக்குள்ள சேக்காமலே அணுபிச்சிடோம். நீயாவது வூட காட வர கூடாது ??? நீயும் அந்த மனுஷன மாறியே ............” என்று அவள் முடிப்பதற்குள் அவன் தந்தை வீட்டிற்குள் நுழைந்தார்.
அமுதரசனை எதிர்பார்க்காத அவர் முகம் சட்டென்று சுறுங்கியது. வீட்டிற்குள் அமர்ந்திருந்த இருவரும் எழுந்து நின்றனர். அமுதரசன் பல பேச்சுகளை எதிர்பார்த்திருந்தான். அவர் மௌனமாய் வந்து அமர்ந்தார்.
சில நொடிகளுக்கு பிறகு,
“சாப்டானா டி ?”
“இல்லங்க.. இப்பதா வந்துச்சி. இதோ பண்ணிடுறேன்.”
“உம் பொண்டாட்டி எப்டி இருக்கா?” குரல் அவனை நோக்கி, தலை தரை நோக்கி.
“இருக்குது யா” என்றான் அடக்கத்துடன்.
“என்ன டா சொரத்தையே இல்லாம பேசுற ?” என்று அவனிடம் திரும்பியது அவர் கவனம்.
“ஒண்ணுல யா.. நல்லாருக்குது..” என்று முடிக்காமல் முடித்தவன்,
“சிறுசு தான் அப்டியே உன்ன மாறி யா..”
தந்தையின் மனம் புகைந்தது. அனால் கண்ணீர் மட்டும் கொஞ்சம் வெளியே வந்தது. மெதுவாக எழுந்து தரையையே பார்த்து பேசி கொண்டிருந்த அமுதரசனிடம் சென்று அருகில் அமர்ந்தார். அவன் தலையை மெல்ல தடவி தந்து,
“டேய்.. என்னடா பேரு வெச்சிருக்க?” என்றார் சின்ன சிரிப்புடன்.
“சிவ பிரகாஷ். அவ தாத்தா பேர்ல ஆரம்பிக்கணும் நு வெச்சிருக்கா” சற்றே தயக்கத்துடன்.
“ச்சே.. பேர் ல என்ன த இருக்கு..
..
..
என்ன மாறியே இருக்கான்னு சொன்னேல?”
“ஆமா யா அப்டியே, உங்க இடது பழக்கம் கூட அப்டியே.. நா அவ கிட்ட சொல்லல உனக்கும் இடது பழக்கம்னு”
“கோவமா தான் இருப்பா.. நா ஒன்னும் சாதாரண விஷயத்த பண்ணலையே...” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.
“அமுது உம் பொஞ்சாதி புள்ளைய கூட்டிட்டு வா டா.. இன்னிக்கே கூட்டிட்டு வந்துருக்கலாம்.. சரி விடு.. இன்னொரு நாள் கண்டிப்பா வரணும்” என்று அவன் தாய் கண்ணீருடன் சொன்னதும் மூவரும் அமைதியானார்கள்.
பன்னிரண்டு வருடம் கழித்து தாய் சமைத்த உணவை உண்டாலும் அவன் கண் கலங்கவில்லை, ஏதோ யோசித்து கொண்டே உணவை விழுங்கினான்.
“சரி மா .. நா கெளம்புறேன்” என்றான் சிறிது நேரம் கழித்து.
“இந்தாங்க.. அவன் இப்போவே கெளம்புறேன்ங்கறான்..”
“என்னடா வந்ததும் வராததுமா..?”
“இல்லே பா.. நா போறபடுறே.. நேரமாச்சி..”
“சரி சாமே.. உம் பொஞ்சாதிய நல்லா வெச்சிருக்கல? அது போதும் டா “ என்று வெளியே வரும் கண்ணீரை சேலையினால் துடைத்தாள் அன்னை.
இருவரிடமும் ஆசி பெற்று வீதி சென்று நடக்க ஆரம்பித்தான்.
இரண்டு தெரு கடந்த பின் ஒரு பதற்றம்...
தன் இரு பக்க பைகளிலும் தேடுகிறான் ...
***** வீட்டில் அவன் கைபேசி கத்துகிறது *****
“ஏங்க இது அமுது போன் ங்க.. இங்க மறந்து விட்டுட்டு போயிருச்சி.. எவ்ளோ தூரம் போயிருக்கும்னு தெரிலய.. பொய் குடுத்துர முடியுமா ?” என்று புருவம் உயர்த்தி பதற்றத்துடன் கூறினால் அவன் அன்னை.
“அந்த சட்டைய எடு.. இங்கன தான் போயிருப்பான். புடிச்சிரலாம்..”
“ஏங்க.. செல்வி தான் கூப்டுதுங்க.. “ என்றவுடன் இருவரின் முகத்தில் வந்த பூரிப்புக்கு விலை இல்லை...
வெளியே செல்ல தயாராயிருந்த அவர் ஒரு கணம் நின்றார்.
“பேசு டி.. அவன் இதோ வரான்னு சொல்லுடி”
சரி என்று தலையசைத்து கைபேசியின் பச்சையை அழுத்தினாள்.
கைபேசியில் ..........
“ஏங்க இங்க செட்டியார் கைய விரிச்சிட்டார்ங்க.. உங்களுக்கு யாரவது ஏதாது குடுத்தாங்களா?”

எழுதியவர் : ஹரி அருண் (3-Dec-13, 12:16 am)
Tanglish : uumai udadugal
பார்வை : 161

மேலே