கஞ்சிக் கலயம் கொண்டு

கஞ்சிக் கலயம் கொண்டு
காட்டுவழி போற பொண்ணே!
வஞ்சிக் கொடி இடையே
வளையுதடி முன்னும் பின்னும்
நெஞ்சு பொறுக்கு தில்ல
நெருங்கி வாறேன் புள்ளே!

நெருங்கிவர வேண்டாம் மச்சான்
நேசமெல்லாம் தெரியும் மச்சான்
மண்ணு கரையு துன்னு
மழைக்குஎன்ன கவல மச்சான்.
மஞ்சு கருக்கு பாரேன்
மழைக்கு முன்னே போறேன்.

போறேன்னு சொல் லாதடி.
பொண்ணு சொன்னா பலிக்குமடி.
ஆரேன்னு எனக் கிருக்கா
ஆச பேசி நானிருக்க
போய் வாரேன்னு சொல்லு
பொறுத்துக் கொஞ்சம் நில்லு.

நின்னு பேச நேரமில்ல
கொன்னுருவான் எங்க அப்பன்.
என்னச் சுமந்து தான
இன்னும் அவன் பிழச்சிருக்கான்.
பாவம் பசியும் எடுத்தா
பாத பாத்து இருப்பான்.

இருக்கட்டுமே எங்க மாமன்
எனக்குமட்டும் பொறுப் பில்லயா?
இருக்கேனே இந்த மாமன்
என்னப்பத்தி நினப் பில்லயா?
பொருத்தம் நானும் பாத்தேன்
பொண்ணு கேட்டு வருவேன்.

வரும்போது வாடா மச்சான்.
வழியவிட்டுப் போடா மச்சான்.
துரும்பும் இப்போ அசயாது
தூரம் போடா நேசமச்சான்.
அரும்பு மீசக் காரா!
ஆக்கும் சாமி நேரா.

நேரா எல்லாம் ஆகுமடி.
நெனப் பிருந்தாக் கூடுமடி.
எனக்கு னுதான் பூத்தயடி!
மணக் குதடி மல்லியடி.
உனக்கும் எனக்கும் பொருத்தம்
உறுதி யாச்சி சொருக்கம்.

கொ.பெ.பி.அய்யா.


.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (4-Dec-13, 6:36 pm)
பார்வை : 323

மேலே