ஆசை
ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம்,வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும்.தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்
ஆசை நிறைவேறுமா,நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள்.
காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது.அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.
நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா?அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம் அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும்.சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும்.
இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள்.சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி
இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன