===+++தயவு செய்து யாரும் என்னை நம்பிவிடாதீர்கள்+++===

எனக்கு எல்லாம்
தெரியுமென்று - நான்
எப்பொழுதும் சொல்லிக்கொள்வதுண்டு...

அது
என் சுயநலமோ... சுபாவமோ...
அல்லது
வாழ வேண்டிய சாணக்கியமோ....!

தெரியாததை
தெரியாது என்று
ஒப்புகொள்ளமட்டும்
எனக்கு எப்பொழுதும் தெரியாது...

விட்டுக் கொடுத்தால்
தோற்றுவிடுவேனோ....
ஒப்புகொண்டால்
தாழ்ந்துவிடுவேனோ...
அகத்தில் அரியணையேறும்
ஏதோ ஒரு
அகம்பாவ அரக்கன்...

மனம் முழுவதும்
மலையாய் மலக்குவியல்!
அன்றாடம் தவறாமல்
சலவை செய்த
வெள்ளையுடையில்
உடல்மறைத்து ஊர்வலம் போகிறேன்
மகானாகிவிடும் பேராசையில்...

உச்சி மனதில்
ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும்
சுயநலம்
உணர்வுகளில் அபின் கலந்து
அடிமையாக்கிவிட்டது!
என்னைப்போல் பலரையும்...

போலியான
நியாயம் பேசி
பொழுது கழிப்பதும்
பொழப்பாகிவிட்டது...

நம்புகிற வகையில்
பொய் சொல்லி
நடிப்பையும் உண்மையாக்கி
நாட்களை நகர்த்துவதும்
சாமார்த்தியம்தான் போல...

கெட்டவனுக்குள்
புகுந்து கொண்டு
நல்லவனாய் முகம் காட்டுவது
எத்தனை வேடிக்கை.....

எனக்குள் இருக்கும்
உண்மையானவனை
உறங்கவைக்க - எனக்கு
நானேப் பாடிக்கொள்ளும் தாலாட்டு
இந்த சமுதாயத்திற்கே அடிக்கிற
சாவுமணி அல்லவா...???
ஆமாம்...! ஆமாம்...!
அந்த உண்மையானவன்
கண்விழிக்கும்பொழுது
எனது சாயம்
வெளுத்துத்தான் போகும்;
தயவு செய்து
அதுவரை
யாரும் என்னை நம்பிவிடாதீர்கள்...!!!

------------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (18-Dec-13, 3:07 pm)
பார்வை : 141

மேலே