புதுக்கவியே புறப்படு---அஹமது அலி----
புதுக்கவியே புறப்படு
அறிவுக் குதிரையில் ஏறி
ஆகாயம் அளக்கப் புறப்படு
நேர காலம் பார்க்காதே!
நொண்டிக் குதிரை ஆயினும்
முண்டியடி!
)))
ஆகாயம்
தூரமென்று எண்ணாதே!
பறந்து பார்
ஆகாயம் அருகில் வரும்!
)))
பூலோகம்
பெரிது என எண்ணாதே!
சுற்றி வா
பூமி சிறிதாய் போகும்!
)))
நீ பறப்பதற்கு
சிறகுகள் தேவையில்லை!
நீ நனைவதற்கு
மழை தேவையில்லை!
நீ நுகர்வதற்கு
பூக்கள் தேவையில்லை!
)))
கற்பனை எல்லாம்
கற்றுத்தரும்!
அறிந்தவைகளில்
ஆராய்ந்து பார்!
)))
சாத்தியப் படாத ஒன்றைக் கூட
சாமர்த்தியமாய் சொல்
சாத்தியப்படும் வாய்ப்பும் வரலாம்!
)))
கனவிலும் கற்பனையிலும்
வாழ பழகிக் கொள்!
நிகழ்காலத்தின் நிழலை விட்டும்
நகர்ந்து விடாதே!
)))
தாய்மொழியின்
வாய் மொழியிலேயே
மொழிந்து பழகு!
)))
அழகானவைகளை மட்டும்
ரசித்தல் கூடாது!
அசிங்கங்களையும்
ரசிக்க ரசனை கொள்!
அவற்றுள்ளும் நன்மையிருப்பின்
நயமாய் நவிழு!
)))
உண்மைகளை தோண்டியெடு
பொய்களை தோண்டிப் புதை!
நேர்மையின் பாதை மறவாதே
கூர்மையாக்கி வார்த்தையை வீசு!
)))
சமுதாயத்திலிருந்து
சற்று விலகியிருப்பதாய் உணர்வாய்
கவலை விடு!
நீ மட்டும் சமுதாயத்திலிருந்து
ஒதுங்கி விடாதே!
)))
தென்றல் சுடும் போதும்
சூரியன் குளிர்கின்ற போதும்
பயணத்தை கைவிடாதே!
)))
உன் பயணத்தின் துணை
உன் எண்ணங்களே!
பயணத்துக்கு எல்லை வைத்து
ஒரு போதும் புறப்படாதே!
)))
சில சமயங்களில்
நீ தொலைந்து போகவும் கூடும்!
உன்னை நீயே
தேடிப் பிடி!
)))
எத்தனை எத்தனையோ
தடைகள் வரும்
எதிலும் உன் பயணம்
தடை படக் கூடாது!
)))
இன்றொன்றையும்
கவனம் கொள்!
ஒரு பயணம் முடிந்து
ஓய்ந்து போகாதே
பயணம் தொடரட்டும்
வாழ்த்துக்கள்!