உயிர் சரிந்து விழுந்தது

அடை மழைக் காலம்..

நெடுஞ்சாலை ஓரம்..

பெருமழை பொழியும்
மழைத்துளிகள்.. இலை விழ..
சிருமழையாகி தெறித்து விழும் மண்மேல்..

நடுக்கம் கொண்டு அமர்ந்திருந்தது ஒரு நாய்..

இதம் தரும்
அந்த அன்னையின் இதயச் சூட்டினில்..
இருவிழி மூடி..
உறங்கிக் கிடந்தன..
உலகத்தை இதுவரை ஒருமுறைகூட
பார்த்திடாத.. அன்று பிறந்த நான்கு நாய்க் குட்டிகள்..

முதல் பசி தீர்த்த நிம்மதி இல்லை..
தன் மடியினில் கணம் இல்லை..
இறை தேட வழி இல்லை..

குட்டிகளின் உயிர் பசி சுமந்து
குடைபோல் உடல் விரித்து
விழிக் கம்பிகளின் வழியே..
சோகமழையின் கண்ணீர் வழிந்திட
அடைமழை மறந்து அமர்ந்திருந்தது..

கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்திடும் வாகனங்கள்..
சாலை மூடிய தண்ணீர் சேலையை கிழித்துச் சென்றிட..

காலமும் அந்த வாகனங்களைப் போல் வேகமாக ஓடியது..
கண்விழிக்கும் குட்டிகளின் பசி தீர்த்திட வழிதேடி
இமை மூட மறந்து பார்த்திருந்தது அந்த நாய்..

தூரத்தில் ஒரு வாகனம்.. இயல்புக்கு மாறாக..
வேகம் குறைத்து வந்திடவே..

செவி நிமிர்த்தி.. எதோ எதிர் பார்த்து.. தலை திருப்பி கவனிக்க..

மெல்ல அந்த வாகனத்தின் கண்ணாடி திறந்திட..
மானிடக் கை வழியே.. ஒரு காகிதப் பை விழுந்தது..

உணவின் மெல்லிய வாசம்..

மழைத் துளிகளின் இடைவெளியில் நுழைந்து வர..

சற்றும் யோசிக்காமல்.. உணவெடுக்க பதறி ஓடியது..
இன்பம் நிறைந்த மனதுடன்.. அது கவ்வி எடுத்தது..

எடுத்துத் திரும்பிய மறுகணம்..
எதோ இடி போல் தாக்க.. உயிர் சரிந்து விழுந்தது..

உயிர் விடும் நேரம்.. விழிகளின் வழி.. அந்தத் தாய் கண்ட கடைசி காட்சி..

தன் குட்டிகள்..
முதல்முறை விழித்து..
தன்னை நோக்கி அதிர்ந்து வருவது..
அதுவும் அந்த ஆபத்து நிறைந்த சாலை விளிம்பைக் கடந்து..!!!

எழுதியவர் : வெ கண்ணன் (20-Dec-13, 7:52 pm)
பார்வை : 81

மேலே