பெண் குழந்தை தொழிலாளி
எங்க ஊருக்கு
கைரேகை பார்க்கிறவர்
ஒருவர் வந்தார்
எங்க பாப்பா உன்
கையை நீட்டு உன்
எதிர் காலம்
எப்புடினு பாப்போம் என்று
கேட்டபடியே என் கையை
வாங்கி பார்த்த அவர் அதிர்ச்சியில்
என்ன பாப்பா
கையில் ரேகையின்
தடத்தையே காணோம் என்றார் - அதுவா
என் நிகழ் காலமே
என் எதிர் காலத்தையும்
முடித்தது என்பதால்
என் ரேகைகள் இனி
என் தேகத்தில் என்ன வேலை
என்று நினைத்து
வெளிநடப்பு செய்திருக்கும் என்றேன்
என்ன பாப்பா செய்ற நீ என்றார்
நானா
வெடி குண்டு தொழிற்சாலையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
முடிந்து கொண்டிருக்கிறேன் என்றேன்
பாப்பா என்று குரலில் தளர்ந்தார்
தப்பா பிறந்த பாப்பா நான் என்றேன்
வழக்கம் போல் கண்ணீரை தந்தார்
கொஞ்சத்தில் காற்று
வாங்கி கொண்டது அதை
என் கதறல் போல்
விடியல் இல்லா
நிலப்பரப்பு நான்
இருட்டில் இறைவன்
என்னை உருவாக்கினானோ - அதனாலோ
இருட்டில் வந்த ஒருவன்
என்னை கருவாக்கி
கடந்து சென்றான் ...... !

