புதுப்புறம் நானூறு2

2.பஞ்ச பூதங்கள் போன்றவன்

மண் நிரம்பிய பூமியும்
மாரி பொழிந்திடும் வானமும்
மாடத்தில் வீசுகின்ற காற்றும்
மடைதிறந்து பாய்ந்தோடும் நீரும்
மங்காத் தீயும் ஐவகை பூதங்களாம்!

பஞ்ச பூதங்களை ஒத்த
பஞ்சவனே ! நீ
பகைவனை பொறுப்பதுவும்
பலபிழைகள் தடுப்பதுவும்
பகையரசன் வணங்கிவிட்டால்
பாவங்கள் துடைப்பதுவும் செய்பவனாய்
பாரதத்தில் திகழுகிறாய் !

உனது பொன்னாட்டில்
உதயமாகும் சூரியன்! கிழக்குக் கடலேறி
உச்சிவானின் மேல்நின்று!தெற்கில்
உறங்கிடுவான் !பாரதப் போர்தனிலே

குதிரைப் படைகொண்டு போரிட்ட
குருசேத்திர மன்னர்களுக்குக்
குவியலாய் பெருஞ்சோறு அளித்தவன் நீ !

பால் சுவை குன்றி புளித்தாலும்
பகல் சூரியன் இருள் அளித்தாலும்
பண்பாட்டு மறைநெறிகள் குறைந்தாலும்
பாவலர்கள் அமைந்த அரசவையில்
பளிச்சிடும் முத்தாய் வாழ்பவன் நீ !

மலை அதுமேலே சிறு கண்கள் கொண்ட
மான்கூட்டம்,அந்தணரின்
மங்கள வேள்விச் சுடர்ரோளியில்
மகிழ்ந்து உலவிடும் காடுடைய
மரகத மண்ணின் மன்னன் நீ !

பொற்சிகரம் கொண்ட இமய மலை
பொதியமலையும் வாழுதல்போல்
பொற்காலம் பலஆக்கிக் கொற்றவனே
பொன்னாடு செழிக்க வாழியவே !

திணை : பாடான் திணை
துறை : வாழ்த்தியல்
பாடப்பட்டவர் : சேரமான் பெருஞ்சோற்று
உதயன் சேரலாதன்
பாடியவர் : முரஞ்சியூர் முடிநாகராயர்

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (24-Dec-13, 7:45 pm)
பார்வை : 94

மேலே