கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1

அத்தியாயம்--1

பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்,பள்ளி முடிந்து வந்தததும் அவளும் நானும்தான் விளையாடுவோம்.எங்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டே அப்பா அம்மா விளையாட்டுத்தான்.அப்போதே அதன் அர்த்தங்கள் புரிந்துதான் இருந்தது.ஆனாலும் அதை விளையாட்டாகத்தான் விளையாடினோம்.ஓடிப்பிடிப்போம் கட்டித்தழுவுவோம்.ஆனாலும் அப்போது ஆணென்ன பெண்ணென்ன பால் வேற்றுமை புரியவில்லை.
வேறு யாரையும் விளையாட்டுக்குச் சேர்ப்பது இல்லை.வேறு யாரும் எங்களையும் சேர்ப்பது இல்லை.ஏனெனில் எனக்காக அவளும் அவளுக்காக நானும் எவரிடமும் விட்டுக் கொடுப்பது இல்லை.

பக்கத்துப் பக்கத்து வீடு.நானும் என் அம்மாவும்தான்.என் அம்மா விடிந்து வேலைக்குப் போனால் அடைந்துதான் வீடு திரும்புவாள்.தினமும் கம்மஞ் சோறுதான்.பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு கஞ்சியாய்க் கரைத்துக் குடித்தால் அவ்வளவு ருசியாக இருக்கும். என் ஏழ்மை புரிந்து கொண்ட அவள் எனக்காக தேங்காய் துவையல் அரைத்து எடுத்துக் கொண்டு வந்து தருவாள்.

“ஏன் கரைத்துக் குடிக்கிறாய் துவையல் தொட்டுச்சாப்பிட வேண்டியதுதானே”
எனச்செல்லமாகக் கூறி நான் சாப்பிடுவதை பரிதாபமாக் பார்த்துக் கொண்டே இருப்பாள் .அவள் ஓரளவுக்கு வசதியானவள்தான். அவள் வீட்டில் தினமும் நெல்லுச்சோறு காலை மாலை இட்லி தோசைதான்.என் வீட்டில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் தோசை,இட்லி.நெல்லுச்சோறு எல்லாம்..அதனால் நான் சாப்பிடும் இந்தக் கம்மஞ் சோறு அவளுக்கு ஆசையாக இருக்கும்போலும்.
“டேய் எனக்கும் கொஞ்சம் தாயேண்டா”
எனக் கேட்பாள்.நானும் மறுக்காமல்
“இந்தா நீயும் கொஞ்சம் குடி”
என்று ஒரு அலுமினியத் தம்ளரில் ஊற்றிக் கொடுப்பேன்.அப்போது அவள் ரசித்துக் குடிப்பதை பார்த்து நான் ஆனந்தம் அடைவேன்.

அவள் வீட்டில் என்ன பலகாரம் செய்தாலும் எனக்குக் கொடுக்காமல் அவள் சாப்பிட மாட்டாள்.அவளுடைய அம்மா நல்லவர்தான்.அவளுடைய ஆச்சிதான் சிடுமூஞ்சி.என்னோடு அவள் சேர்ந்து விளையாடுவதைக் கண்டாலே அவளுடைய ஆச்சி முனுமுனுப்பாள்`பள்ளிக்குப் போனாலும் வந்தாலும் சேர்ந்தே போவோம் சேர்ந்தே வருவோம்.அதைக்கண்டு எங்கள்வயதிலுள்ளவர்கள்.எங்களைப் பார்த்து புருஷன் பொண்டாட்டி எனவும்
கேலி பேசுவார்கள் அதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்வதும் இல்லை.சில நேரங்களில் கேலி கிண்டல் அதிகமாகும் போதுஅவள் அழுவாள் .அப்போது சக மாணவர்களோடு நான் சண்டை கட்டுவதும் உண்டு.அடிபடுவதும் உண்டு.ஆனால் அந்த அடியும் வலியும் அவள் தடவிக்கொடுக்கும்பொழுது காணாமல் போய்விடும்.ஒரு நாள் ஆசிரியர் நான் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று என்னை அடித்து விட்டார்.அந்த வலியை நான் தாங்கிக் கொண்டேன் .ஆனால் அவளால் என்வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.அப்படியொரு இனம் புரியாத பாசம்.

தினமும் இரவுப் பாடம் படிக்க அவளுடைய வீட்டுக்குத்தான் பையை தோளில் போட்டுக்கொண்டு போவேன்.என் பாடங்களை எல்லாம் அவள்தான் எழுதிக்கொடுப்பாள்.அந்த நாளில் மின்சாரம் என்றால் நகரங்களில்தான் காணமுடியும்.கிராமங்களில் மண்ணெண்ணை விளக்குத்தான்.ஒரு விளக்கைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அதைச்சுற்றி வட்டமாக உட்கார்ந்துகொண்டு படிப்போம்.போதாத வெளிச்சம்தான்.குனிந்துகொண்டு மிகவும் உற்றுக்கவனிதுதான் பாடங்களைப் படிக்கவேண்டும்.தெருவிளக்குகள் நிலாக் காலம் மட்டும்தான்.மற்ற நாட்களில் வான் நட்சத்திரங்கள் மட்டுமே மங்கலான ஓரளவுக்கு உருவம் புரியும் அளவுக்கு மெல்லிய இருளாக இருக்கும்.எனக்கு இருள் என்றால் அப்போதே பயம்.அதனால் அவள்தான் என்னை வீடுவரை துணைக்கு வந்து உதவுவாள்.

வழக்கம்போல் பள்ளிக்குப் புறப்பட்டு தோளில் புத்தகப்பையை தூக்கிப் போட்டுக்கொண்டு அவள் எனக்காகக் காத்திருப்பாள் என அவசர அவசரமாக வீட்டைவிட்டு வந்தேன்.எனக்குப் பள்ளிக்குச்செல்ல வேண்டுமே என்ற அக்கறையைவிட அவளோடு சேர்ந்து போவதில்தான் என்னையும் அறியாமல் எனக்குள் இருந்த துடிப்பு.இது எனக்கு அப்போது புரியவில்லை.இப்போது அதை எண்ணிப்பார்க்கும்போது அது பாலியல் ஈர்ப்புதான் எனப்புரிகிறது.எனக்கு ஆண் மாணவ நண்பர்களே இல்லை.அதை நான் விரும்பவும் இல்லை .
எனக்கு எல்லாமே அவள்தான் எனும் ஒரு பற்று.அவளைக்காணாமல் என்னால் தனியே பொழுதைத் தள்ள இயலாது எனும் நிலை.அவள் ஒரு நாள் ஊரில் இல்லை என்றால்கூட அவள் வீட்டின் முன்ப்பாக உள்ள அந்த முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டு அவளோடு அதைச்சுற்றிச்சுற்றி அவளோடு விளையாடுவதுபோல் விளையாடிக்கொண்டு அவள் வீட்டு வாசலிலேயே கிடப்பேன்..இப்படியொரு பந்தம் எப்படி என நான் சிந்திக்கவும் பக்குவப்படவில்லை.அப்படியொரு முயற்சி எனக்குள் தோன்றவும் இல்லை.அது எல்லாமே அனிச்ச செயலாகத்தான் இருந்துள்ளது.

பள்ளிக்குச்செல்வதற்காக வேகமாக அவளைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குள் அவள் பெயரைச்சொல்லி அழைத்துக்கொண்டு நுழைய முயன்றேன்.அவளுடைய ஆச்சி வாசலில் நின்றுகொண்டு
“டேய் எங்கடா போற “என அவசரமாகத் தடுத்து---
“அவள் இனிமேல் உன்னோடு வரமாட்டாள்”நீ போடா”என என்னை விரட்டுவதுபோல் அதட்டினாள்.
நானும் புரியாதவனாய்
“ஏன் ஆச்சி அவளுக்கு காய்ச்சலா”என் வினவினேன்.
அதற்கு ஆச்சி –
“ஆமாம் அப்படித்தான்.....நீ போடா!”என என்னை விரட்டிவிடுவதிலேயே குறியாக இருந்தாள்`
அதற்குள் என் அம்மா பின்னாலயே வேகமாக வந்து
“டேய் ராசா அவள் வரமாட்டாள்.இன்னுமே நீ மட்டுந்தான் தனியா பள்ளிக்கூடம் போகணும்.”
எனக்கூறி என் கையைப் பிடித்து இழுத்து அழைத்துப்போனாள் .
நானும் விடவில்லை மாறி மாறி என் அம்மாவிடம் கேட்டேன்
“ஏம்மா......ஏம்மா வரமாட்டாள் ,அவளுக்கு என்னம்மா,.....சொல்லும்மா .....சொல்லும்மா “
புரிந்து கொள்ளாத வயதில் அம்மா என்ன சொல்லுவாள்.!
“டேய் ,,நீ..சின்னப் பையன் ,உனக்கு இதெல்லாம் புரியாது. சொன்னாக் கேளு !
அம்மா சொல்ரேன்ல்ல.நீ மட்டும் போ ராசா” என என்னைச்சமாதானபடுத்தி அனுப்பிவைத்தாள்`
அப்புறம் அவள் என்னைப் பார்ப்பதும் இல்லை பேசுவதும் இல்லை.எப்படி என்னை மறந்தாளோ
நினைந்தாளோ தெரியவில்லை.

கொ.பெ.பி.அய்யா.

(தொடரும்.)

எழுதியவர் : கொ.பெ .பி.அய்யா. (30-Dec-13, 3:37 am)
பார்வை : 274

மேலே