வைரமுத்து பற்றி சில வரிகள்
உலகத்தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் வைரமுத்து
3000 ஆண்டு இலக்கண இலக்கிய வளம் கொண்ட செம்மொழித் தமிழின் ஈரங்களையும், சாரங்களையும் உள்வாங்கி இன்று உலகப்பார்வையோடு பரந்து விரிந்திருக்கும் படைப்பாளி.
இந்திய அரசின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதினைத் தமது இலக்கியத்திற்காகவும், சாகித்ய அகாடமி விருதினைத் தமது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காகவும், இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை 5முறை திரைப்பாடல்களுக்காகவும் பெற்று ஒரு மகாகவியின் அடையாளங்களோடு அறியப்படுபவர்.
வேர்கள்
இவரது மொழியின் வேர்களைப் போலவே வாழ்க்கையின் வேர்களும் ஆழமானவை. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் பழைய மதுரை மாவட்டத்தில் இன்றைய தேனி மாவட்டத்தில் ஒர் எளிய விவசாயக் குடும்பத்தில் 1953 ஜூலை 13இல் கண்விழிக்கிறார் கவிஞர் வைரமுத்து. தந்தையார் ராமசாமித்தேவர், அன்னையார், அங்கம்மாள். அறுபது வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற குக்கிராமம் அவர் பிறந்த ஊர். மண்ணோடு போராடும் மனிதர்களம், ஆடு மாடுகளும், பறவைகளும், ஊரைக்காவல் காத்த பாலைவனத்தாவரங்களும் வைரமுத்துவின் ஐந்து வயது ஆச்சரியங்கள்.
1957இல் வைகை அணை கட்டி முடிக்கப்படுகிறது. அணையின் நீர்தேங்கும் பரப்புக்குள்ளிருந்த 14கிராமங்கள் அரசாங்கத்தால் காலி செய்யப்படுகின்றன. அப்படி மூழ்கிப்போன தனது தாய்க் கிராமத்தைவிட்டு, அடையாளம் தெரியாத சோகத்தோடு அழுதுகொண்டே தன் தாயின் சுட்டுவிரல் பற்றிக்கொண்டு சுதந்திர இந்தியாவில் அகதியைப்போல வெளியேறி வடுகபட்டி என்ற அடுத்த கிராமத்திற்குக் குடும்பத்தோடு குடி பெயர்ந்தபோது வைரமுத்துவுக்கு வயது 5.
மண்ணை இழந்த சோகத்தோடு வைரமுத்து வாழ்வின் இரண்டாம் பாகம் வடுகபட்டியில் தொடர்கிறது. கல்வியோடு விவசாயம், விவசாயத்தோடு கல்வி என்று வைரமுத்துவுக்கு அங்கே இரட்டை வாழ்க்கை வாய்க்கிறது.
தமிழை நோக்கி...
1960களில் தமிழ்நாட்டை மையம் கொண்டிருந்த திராவிட இயக்கங்களின் பகுத்தறிவும், மொழி உணர்வும் கவிஞர் வைரமுத்துவை உற்சாகப்படுத்தின. தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர்-பாரதி-பாரதிதாசன்-கண்ணதாசன் என்ற ஆளுமைகள் அவரை ஈர்த்தன. வடுகபட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வி பயிலும்போதே கவிதையாலும் சொற்பொழிவாலும் தனித்து அடையாளம் காணப்பட்டார் வைரமுத்து. மொழியின் மீது கொண்ட காதலால் நூலகத்தில் கூடுகட்டும் பறவையாகிப்போனார். மொழியை வகுப்பறைகள் கற்றுத்தந்தன, வாழ்வோடு போராடும் மக்கள் அவருக்கு வாழ்க்கையைக் கற்றுத்தந்தார்கள். வறண்ட வாழ்க்கையால் நேர்ந்த வெற்றிடத்தை இலக்கியக்காற்று வந்து நிரப்பியது. 11வயதில் கவிதை எழுதத் தொடங்கிய வைரமுத்து 14 வயதில் வெண்பா என்னும் கடினமான யாப்பு வடிவத்தில் தேர்ச்சிகொண்டார். பள்ளி நிறைவுத் தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்று வெள்ளிக்கோப்பை வென்றெடுத்தார்.
கல்லூரிக் கல்வி
கண்நிறையக் கனவுகளையும் நெஞ்சு நிறைய லட்சியங்களையும் சுமந்து கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1970இல் சேர்ந்தார். அங்கே வைரமுத்துவின் கல்வி உலகமும் இலக்கிய உலகமும் விரிவடைந்தன. 1972ல் பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்தபோது இவரது முதல் கவிதைத் தொகுப்பான வைகறை மேகங்கள் வெளிவந்தது. இவர் மாணவராக இருந்தபோது படைத்த வைகறை மேகங்கள் இவர் மாணவராக இருந்தபோதே ஒரு மகளிர் கல்லூரிக்குத் துணைப்பாடமாக அமைந்தது.
மரபு, நவீனம் இரண்டையும் குழைத்து வைரமுத்து தனக்கென்று தனியானதொரு கவிதை மொழியைத் தயாரித்துக் கொண்டார். உள்ளடக்கம், உருவம்-நவீன வெளிப்பாட்டுமுறை ஆகிய அனைத்திலும் தமிழ் இலக்கிய உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.
சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றார். முதல் வகுப்பில் கல்லூரியின் முதல் மாணவராகத் தேறினார். வைரமுத்துவின்புதுக்கவிதைத் தொகுப்பான திருத்தி எழுதிய தீர்ப்புகள்1979இல் வெளிவந்தது. அது தமிழ் இலக்கியப்பரப்பில் கணிசமான அலைகளை ஏற்படுத்தியது.
திரையுலகில்...
1980இல் பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் வைரமுத்துவின் திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. இவரது வருகைக்குப் பிறகு திரைப்பாட்டு, புதிய சிகரங்களைத் தொட்டது. மொழிநடையின் கட்டுமானங்களை உடைத்து, முன்னெப்போவதுமிராத படிம வீச்சுக்களோடு திரைப்பாட்டுக்குக் கவிதையின் ஆபரணங்களை அணிவித்து பிற மொழிகளின் செவிகைளையும் தமிழை நோக்கித் திரும்பச் செய்தார் வைரமுத்து. இதுவரை 6500 பாடல்கள் புனைந்திருக்கிறார்.
ஒவ்வோரு பத்தாவது நிமிடத்திலும் இவரது பாடல் ஒன்று உலக வானொலிகளில் ஒலிபரப்பாகின்றது. அல்லது உலகத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றது. சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதினை 4முறை பெற்ற பாடலாசிரியர் இவர்தான்.
ஐந்து திரைப்படங்களுக்குக் கதை வசனமும் தீட்டியிருக்கிறார். அவற்றில் எதார்த்தத்தின் வழியே அழகியலின் எல்லைகளை எட்டியிருக்கிறார், மனிதப் பாத்திரங்களின் ஆழ்மன ஆழங்களைத் தொட்டிருக்கிறார்.
தேசிய விருதுகள்
குடியரசுத் தலைவர்களிடமிருந்து சிறந்த பாலாசிரியருக்கான தேசிய விருதை 5முறை பெற்ற ஒரே பாடலாசிரியர் இந்தியாவில் இவர் மட்டும்தான். இவர் படைத்த கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக 2003ல் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இவரது இலக்கியப் பணிக்காக 2003ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
படைப்புலகம்
வைரமுத்துவின் படைப்புலகம் ஆழ்ந்து விரிந்தது. தமிழ் இலக்கியப் பயிற்சியும், உலக இலக்கிய ஈடுபாடும், வாழ்வியல் குறித்த கூரிய பார்வையும், நேரிய சிந்தனையும், இருத்தல் பற்றிய பிரக்ஞையும், அழகியல் ஊறிய எதார்த்த மொழியும் கவிஞர் வைரமுத்துவின் படைப்புலக பலங்கள். கவிதை, நாவல், திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரைவசனம், மொழிபெயர்ப்பு என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களில் 35படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார். மொழியை நவீனப்படுத்தியதிலும், ஓர் இலக்கியத் தலைமுறையை உருவாக்கியதிலும், ஊடகங்களின் மொழிநடையைக் கணிசமாக மாற்றியதிலும் இவர்தம் படைப்புகளுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.
இவர் படைப்புகளை ஆராய்ச்சி செய்து பத்துப் பேராசிரியர்கள் டாக்டர் பட்டமும் முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் எம்ஃபில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களிலும் கடல் கடந்தும் இவரது படைப்புகள் பாடங்களாகத் திகழ்கின்றன.
மொழிபெயர்ப்புகள்
இவர் கவிதைகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், ரஷ்யன், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "A DROP IN SEARCH OF THE OCEAN" என்ற பெயரில் இவர்தம் தேர்ந்த கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களால் வெளியிடப்பட்டது."பிந்து சிந்து கி ஓர்" என்ற தலைப்பில் இவர் கவிதைகள் இந்தியில் பெருந்தொகுப்பாக மொழிபெயர்க்கப்பட்டு இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சாகித்திய அகாடமியின் தலைவரால் வெளியிடப்பட்டது.
இலக்கிய விருதுகள் வைரமுத்துவின் படைப்பாளுமையைப் பாராட்டி, முதல்வர் கலைஞரின் முரசொலி அறக்கட்டளை ஒரு லட்ச ரூபாய் விருது வழங்கியது. இவரது தண்ணீர் தேசம் படைப்புக்காகத் தினத்தந்தி, ஆதித்தனார் விருதாக ரூபாய் 50,000 வழங்கியது.
ஒரு தனியார் அமைப்பு கனடா அரசாங்கத்தோடு இணைந்து கவிஞர் வைரமுத்துவின் தபால்தலையை டொரண்டோவில் வெளியிட்டு கௌரவித்தது.
வைரமுத்து தம் ஒவ்வொரு பிறந்தநாளிலும் மூத்த கவிஞர்களுக்கும், இளங்கவிஞர்களுக்கும் கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிப் பணமுடிப்பும் பட்டயமும் தந்து பாராட்டி வருகிறார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் விருது பெற்றிருக்கிறார்கள்.
டாக்டர் பட்டங்கள்
இவரது இலக்கியப் பணிகளுக்காக, தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
சான்றோர் கூற்று
80 மில்லியன் தமிழர்கள் அன்றாடம் உச்சரிக்கும் இந்தக் கவிஞரை அன்றைய குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் காப்பியக்கவிஞர் என்று போற்றினார். இந்தியாவின் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இவரைக் கவி சாம்ராட் என்று பட்டம் சூட்டி அழைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தலைசிறந்ததமிழ்ப்படைப்பாளியுமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி இவருக்குக் கவிப்பேரரசு என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார்.
லண்டனில் வைரமுத்துவுக்கு நிகழ்ந்த பாராட்டு விழாவில் இங்கிலாந்து நாட்டின் கல்வியமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ், உணர்ச்சியும் அறிவும் சரியாக இணைந்த கலவைகள் வைரமுத்து கவிதைகள் என்று பாராட்டினார். லண்டன் மாநகராட்சியின் ஆட்சி மன்றத்தலைவர் ராபின் வேல்ஸ், ராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காட்லாந்துக் கவிஞரோடு கவிஞர் வைரமுத்துவை ஒப்பிட்டார்.
"இன்றைக்குத் தமிழை ஆண்டு கொண்டிருக்கிற கவிஞராக உலகத்திலே உள்ள எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடக்கூடிய வல்லமை வாய்ந்தவராக வைரமுத்து திகழ்கிறார்" என்று முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி இவரைப் பாராட்டியிருக்கிறார்.
இந்தியாவின் சிறந்த ஐம்பது இளைஞர்களுள் ஒருவர் என்று இந்தியா டுடே பத்திரிகை இவரைத்தேர்ந்தெடுத்துச் சிறப்பித்தது. அமெரிக்கன் லைப்ரரி ஆப்காங்கிரஸ் இவரது கவிதைகளை இவரது குரலில் ஒலிப்பதிவு செய்து உலக இலக்கிய ஆவணங்களுள் ஒன்றாகப் பாதுகாத்து வருகிறது.
கண்டங்கள் கண்டவர்
அமெரிக்கா, கனடா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாங்காக், ஸ்ரீலங்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபுநாடுகள், குவைத், ஓமன், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இலக்கியப் பயணம் மேற்கொண்டிருக்கின்றார்.
குடும்பம்
பேராசிரியரும் படைப்பாளியுமான டாக்டர் பொன்மணி வைரமுத்து இவர் மனைவி, ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற மூத்த மகன் மதன்கார்க்கி, தகவல் தொழில்நுட்பப்பட்டம் பெற்ற இளையமகன் கபிலன் வைரமுத்து என மைந்தர் இருவர், குடும்பத்தோடு சென்னையில் வசிக்கிறார்.
விரியும் சிறகுகள்
உலக மானுடம் பருகும் தாய்ப்பாலாக இலக்கியம் இருக்க வேண்டும் என்பது அவரது படைப்புக் கொள்கை.
பிரபஞ்சம் குறித்த வியத்தலும், இருத்தல் குறித்த பெருமையும், உலக சமாதானமும் போரற்ற சமுதாயமும் வைரமுத்துவின் இலக்கிய உள்ளீடுகள்
மனிதகுல மேம்பாடு என்ற இலட்சியத்தோடு இயங்கும் இலக்கியப் பயணத்தில் வைரமுத்துவின் வழிகளும், வெளிகளும் விரிந்து கொண்டே போகின்றன.
தேசிய விருதுகள்
1986 முதல் மரியாதை பாரதிராஜா
1993 ரோஜா மணிரத்னம்
1995 கருத்தம்மா பாரதிராஜா
1995 பவித்ரா கே. சுபாஷ்
2000 சங்கமம் சுரேஷ் கிருஷ்ணா
2003 கன்னத்தில் முத்தமிட்டால் மணிரத்னம்
படைப்புகள்
01. வைகறை மேகங்கள் (1972)
02. திருத்தி எழுதிய தீர்ப்புகள் (1979)
03. இன்னொரு தேசிய கீதம் (1982)
04. கவிராஜன் கதை (1982)
05. இதுவரை நான் (1983)
06. என் பழைய பனை ஓலைகள் (1983)
07. என் ஜன்னலின் வழியே (1984)
08. மௌனத்தின் சப்தங்கள் (1984)
09. வானம் தொட்டு விடும் தூரம்தான் (1983)
10. கல்வெட்டுக்கள் (1984)
11. கொடிமரத்தின் வேர்கள் (1984)
12. கேள்விகளால் ஒரு வேள்வி (1984)
13. ரத்த தானம் (1985)
14. சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் (1985)
15. நேற்றுப்போட்ட கோலம் (1985)
16. மீண்டும் என் தொட்டிலுக்கு (1986)
17. எல்லா நதியிலும் என் ஓடம் (1989)
18. வடுகட்டி முதல் வால்கா வரை (1989)
19. இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல (1991)
20. காவி நிறத்தில் ஒரு காதல் (1991)
21. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் (1991)
22. ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் (1991)
23. சிகரங்களை நோக்கி (1992)
24. இதனால் சகலமானவர்களுக்கும் (1992)
25. வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 1)1993
26. வைரமுத்து திரைப்பாடல்கள் (தொகுதி 2) 1993
27. வில்லோடு வா நிலவே (1994)
28. தண்ணீர் தேசம் (1996)
29. தமிழுக்கு நிறமுண்டு (1997)
30. பெய்யெனப் பெய்யும் மழை (1999)
31. வைரமுத்து கவிதைகள் (2000)
32. கள்ளிக்காட்டு இதிகாசம் (2001)
33. கொஞ்சம் தேநீர் நிறைய வானம் (2005)
34. ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் (2005)
35. கருவாச்சி காவியம் (2006)
-inaiyam-