வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் 10-உதவி
உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் போயிருக்கும். உதவி இல்லையேல் மனிதத் தனம் குறைந்துப் போகும். மனிதநேயம் குறைந்து சுயநலப் புழுக்களாய் பயனற்று போயிருப்போம் நாம்.
ஒரு இலை காற்றில் அசைகிறது, காம்பின் ஒரு பகுதி காற்றின் எதிர்புறம் மடிந்து இலையாட, எதிர்பாராவசமாக காம்பொடிந்து இலை உடனே கீழ்விழும் நிலையில் அந்தரத்தில் தனித்துத் தொங்குகிறது. சற்று நேரத்திற்கெல்லாம் காற்று மறுபுறம் வீச, அந்த அறுந்தக் காம்பும் ஒடிந்து இலையறுந்து மரத்தின் தொடர்பறுந்து அநாந்தரமாய் கீழே விழுகிறது. காற்றின் அசைவிற்கு ஆடி ஆடி தவழ்ந்து இங்குமங்குமாய் அலைமோதி யாருமற்ற வெளியில் அனாதையாய் வந்து விழுகிறதந்த இலை. அப்படி யாருமற்று விழும் மனிதரை பற்றிப் பிடித்து தன் மார்பில் அணைத்து நானிருக்கேன், நானிருக்கேன் கவலையை விடுங்கயென்றுச் சொல்ல ஒரு கை ஒரு ஒற்றை கை வேண்டும். அந்த கை மனிதருக்கேயிருக்கும் பெரிய நம்பிக்’கை’. நம்பிக்கை தான் விழும் மனிதரை மீண்டும் தூக்கி நிறுத்துகிறது. அப்படி ஒருவரை தூக்கிநிறுத்தும் நம்பிக்கையை சுற்றியிருக்கும் பிறரே தரவல்லவர். நம் தோழராயிற்றே, நம் குடும்பமாயிற்றே நம் அண்ணன் தம்பி அக்கா தங்கையாயிற்றே என்ற எந்த முக அடையாளமும் உதவி செய்வதற்கு தேவையில்லை; நாம் மனிதராக இருத்தல் ஒன்றே உதவுவதற்குப் போதுமானது.
ஒரு வயதானவர் நடந்துபோகிறார். சற்று வண்டியை நிறுத்தி அவரை நாம் போகும் வண்டியில் ஏற்றிக்கொண்டுப் போகலாம், சில்லறையில்லாது பேருந்தில் ஒருவர் அவதி படுகிறார்’ நம் கையில் இருப்பின் அதை அவருக்குக் கொடுத்து உதவலாம். ஏழைச் சிறுவனொருவன் ஓடிவந்து கடையில் இது வேண்டும் அதுவேண்டுமென்று எல்லாவற்றையும் பார்த்துவிட்டு கடைசியில் தன் கையிலிருக்கும் சொச்சக் காசுக்கு ஏதேது வருமென்று பார்த்து அதற்குத் தக்கவாறு ஏதோ ஒரு கையப்பளத்தையோ அச்சுமுறுக்கையோ அல்லது நாலணா தேன்மிட்டாயையோ வங்கிக்கொண்டு அதோடு தனது காட்பரி சாக்லேட்டிற்கான ஆசைகளை நிராசைகளாய் மாற்றி அவனுடைய ஓட்டைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வறுமைச் சிரிப்போடு ஓடிப்போவான், அவனுக்கான ஒரு நியாயத்தை’ அதுபோன்ற ஏழைக் குழந்தைகளுடைய கனவிற்கான வெற்றிக்கெனச் சிந்திக்கும் கருணையை’ உதவிக்கான மனப்பான்மையை மனதுள் பொதுவாகத் தேக்கிவைத்துக் கொள்ளலாம்.
அதற்குமேலும் வசதியிருப்பின், அந்தக் குழந்தையைப் போலவே கடைக்கு வரும் பல ஏழைப் பெண்மணிகளில் எத்தனையோ பேர் தனது வீட்டுச் சமையலுக்குத் தேவையான மளிகைச்சாமான்களைக் கூட வாங்க வழியில்லாமல், பிய்ந்த வீட்டினது கூரைதனை வேயாமல், வயதிற்கு வந்த மகளைக் கட்டிகொடுக்காமல், பள்ளிப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பணமில்லாமல், கிழிந்தச் சீருடையை மாற்ற வழி தெரியாமல், பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் கட்டணம் கட்டவேண்டுமேயென்று குழந்தையைப் படிக்கவேயனுப்பாமல்; பூமி இடும் மரணசாபத்தை வாங்கிக்கொண்டு மண்ணோடு புதைக்கின்றனர். அதுபோன்றோரைத் தேடி புத்தகங்களோ பள்ளிச் சீருடையோ வாங்கித் தரலாம், படிக்கத் தேவையான வருடக் கட்டணத்தைக் கொடுத்து ஒரேயொரு ஏழை குழந்தையையேனும் தக்க வயதுவரை படிக்கவைக்கலாம்.
பொழுதுபோகாத நேரம் வீட்டில் வெறுமனேயிருந்து எதையோ சிந்தித்து எதற்கோ நேரத்தை வீணடித்து வெட்டியாகப் பேசி அல்லது வேறு யாரார் யோசனைகளையோ கேட்டு யாரின் ரசனைகளையோ தொலைக்காட்சியில் கண்டு கண்டு அவைகளையெல்லாம் தனதாக்கிக்கொள்வதைக் காட்டிலும் ஏதேனும் ஒரு அரசு மருத்துவமனைக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்தினர் சிரமத்தோடு அலையும் மக்கள் நெருக்கமிருக்கும் மருத்துவமனைக்கோ சென்று அங்கு அவசரமாய் வரும் நோயாளிகளுக்கு விண்ணப்பங்களை நிரப்பித் தருவது, மருந்து வாங்கிவந்து தருவது, யாருமற்று தனியே வந்து அவதிப் படுபவருக்கு உடனிருந்து உதவிகளை செய்து, உடம்பு துடைத்து எழுந்திருக்க அமர தோழமையாய் தோள் தந்து விரைவில் குணமடைவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது, தவிர ஏழ்மையான குடிசைப் பகுதிக்குச் சென்று படிப்பு பற்றி மருத்துவம் பற்றி நோய்தடுப்புமுறைகளைப் பற்றி மூடபழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது குறித்து, ஆக்கப்பூர்வமான சிந்தனையை தூண்டுவது பற்றி, அவசியமற்ற எண்ணங்களை நம்பிக்கைகளை புரிதல்களைக் களைந்து மனிதம் தழைக்கத்தக்க நல்ல நோக்கங்களை ஏற்படுத்தித் தருவது, சந்தை மற்றும் சிறப்பு அங்காடிகளுக்கு வேறு வழியின்றி வரும் முதியோர், நோயுற்றோர் அல்லது குழந்தைகளை அணுகி விவரம் சொல்லி தூக்கமுடியாமல் தூக்கிச்செல்லும் சுமையை வாங்கிச் சென்று அவர்களின் வீடுவரை சேர்ப்பது என இப்படி ஏராளமாய் இருக்கிறது பிறருக்கென நாம் உதவ வேண்டிய இடங்கள்.
அங்கெல்லாம் ஒரு நபரின் உதவவேண்டிய ஒரு கை இல்லாமல்தான் நம்பிக்கையெனும் பெருங் கை உடையப் படுகிறது. அதனால் நாளுக்குநாள் பிரியும் உயிர்களும் அவதிப்படும் குடும்பமும் ஏராளம் ஏராளம்.
அதற்காக இதெல்லாம் செய்வதொரு பெரிய மகாத்மாவின் வேலையோ, சிந்தனைச் சிற்பியின் செயலோ என்றெல்லாம் நினைத்து மலைத்துவிடவேண்டாம். இது ஒரு சாதாரண மனிதரின் கடமை. பிறருக்கு உதவுதல் என்பது செய்யமுடிந்தவரின் செயத்தக்க கட்டாயக் கடமை. சுயநலத்தை வேரறுக்கும் மருந்து இந்த பிறருக்கு உதவும் உதவியில் மட்டுமே வேகமாய் பிறக்கிறது. பொறாமையில் கசங்கும் மனங்களை தெளிவுபடுத்தும் நல்லெண்ணம் இப்படி பிறரின் நன்மையைப் பற்றி சிந்திக்கையில் மட்டுமே எளிதில் சாத்தியப் படுகிறது. கையறுந்து துடிப்பவனின் ரத்தைத்தைத் துடைத்து மருந்திடுவதைவிட களமள்ளித் தரக்கேட்கும் சாமி இவ்வுலகில் எங்குமில்லை.
பிறருக்கு உதவும் தன்மையை இழப்பதென்பது தீங்கை எங்கும் பரப்புமொரு நெடிய வேதனை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். உதவி என்பது ஏற்றுச் செய்வதென புரியாமை நம் மனிதப் பிறப்பிற்கே நேர்ந்த அல்லது வளர்ப்பில் நாம் இடறிப் போனதன் பெருத்த அவமானமென்று கொள்ளவேண்டும்.
நிறையப் பேர் சொல்கிறார்கள்; உதவி உதவி என்று ஏமாந்துப் போகுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பார் தானென. நன்றாக யோசித்துப் பாருங்கள், ஏமாற்றுபவர் எங்கிருந்து வந்தார்? அவரை உருவாக்கியவர் யார்?
ஒருவர் பத்து சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டால், ஒரு சட்டை கூட இல்லாது உடம்பு சுடுவோருக்கு சட்டையிட ஆசை வராதா? பின் பத்து பேர் நல்ல சட்டைகளை வைத்துகொண்டிருக்க ஒன்றோ இரண்டோ பேர் நிர்வாணமாய் திரியநேர்கையில், அப்படி திரிபவரை இந்தச் சமூகம் பார்த்து ஏளனம் செய்யும்பட்சத்தில் அல்லது ஒதுக்கவும் துணியும்பட்சத்தில் அந்த சட்டையை வாங்க வக்கில்லாதவன் திருட எண்ணத்தானே செய்வான்? எல்லோரும் பிறக்கையிலே பல அரிய திறன்களோடும் மதிக்கத்தக்க எல்லா தகுதியோடும் மட்டுமே பிறந்து விடுவதில்லை. இயலாமையின் விரக்தியில் கர்ப்பப்பை அறுபட்டு விழும் பாவக் குழந்தைகளும் இம்மண்ணிலுண்டு.
அப்படிப் பிறப்பவர்களைப் பற்றியும் சிந்தித்து, அவர்களையும் நல்வழிபடுத்துமொரு சமதர்ம நோக்கிலான வாழ்வை பொதுவில் எல்லோரும் அமைத்துக்கொள்ளும் தலையாயக் கடமைக்கு நமை நாம் தள்ளிவிடப் பட்டுள்ளதைப் புரிந்துகொள்ள பாறைகளை உடைத்துக் கொண்டுவரும் அருவியைப் போன்று, ஏழ்மையை துடைக்க எடுத்த ஆயுதத்தைப் போன்று, வாழ்வின் அசாத்தியத் தருணங்களை மாற்றி ஒரு அசாதாரண திருப்பத்தையுண்டாக்கும் ஒற்றைச் சிரிப்பின் மாயத்தை ஒவ்வொரு மனிதரும் பிறருக்கென தேக்கி மனம் முழுதும் வைத்திருப்போம். மாற்றம் ஏற்படும் நேர்கோட்டில் வருங்காலம் பயணிக்க நாம் முன்னுதாரணமாய் நடைபோடுவோம்.
ஏழை என்பவர் பிறக்கட்டும் அல்லது பிறக்காமலும் போகட்டும் சாகும் மனிதர் சுகத்தையும் அனுபவித்தவராய் சாக தனது பாதைகளையும் மாற்றுவோம். உதவி செய்பவரை உயிருள்ளளவும் நன்றியோடு நினைத்து நமக்குக் கீழுள்ளவரையேனும் நம்மளவிற்கு மேலேற்ற ஒவ்வொரு மனிதரும் முயல்வோம். மனிதத்தை மிருகத்தினுள்ளும் பாய்ச்சி மலையை உடைத்தாலும் கடுகைப் பிளந்தாலும் பகிர்ந்தே உண்ணப் பழகுவோம். வெற்றி எங்கும் பெய்யும் மழையென சாத்தியப்படும் இடமெங்கும் பெய்யட்டும். நன்மை நன்னிலமெங்கும் பூக்கும் மலர்களெனப் பூத்து வாழ்க்கை எல்லோருக்குமே சுகந்தமானதாய் மணக்க வாழ்வின் வசந்தங்கள் இந்தப் பள்ளமேட்டு பகுதியெங்கும் பாகுபாடின்றி பரவட்டும்..
உதவாதவர் எதிரியிலர்; உதவுபவர் தெய்வத்திற்குச் சமமெனப் பூரிப்படைவோம்..
பூரிப்பு பூமியெங்கும் நிலைத்திருக்க அனைத்துயிர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கமும்..