ஏதோ வாழ்கின்றேன் என்றே இருக்கின்றேன்
கனவுகள் சுமந்து வந்தேன்
காசுக்கு விற்று விட்டேன்..
உறவுகளை பிரிந்து ஒரு
பெரும் சிறையில் வாழ்கின்றேன்..!!
காலத்தின் ஓட்டத்திலே
சிறு கல்லாக ஓடுகின்றேன்
கரைகளின் அழகு கூட
கண்களுக்குத் தெரிவதில்லை..!!
பாச விருந்துகள் இழந்துவிட்டேன்
படையல்கள் மறந்துவிட்டேன்
பழமையின் மகத்துவங்கள்
தெரிந்துகொள்ள தவறிவிட்டேன்..!!
தலைமுறைகள் சுமந்து வந்த
மருத்துவங்கள் மறந்து நின்றேன்
நிலையோடு கதவாக யாரோ
ஆட்டி வைக்க ஆடி நின்றேன்..!!
இரவுக்கும் பகலுக்கும்
பெரும் வேறுபாடு தெரிவதில்லை
குளு குளு அறைக்குள்ளே
வெறும் உடல் மட்டும் குளிர்கிறதே..!!
புதுமைகள் பல கற்றும்
பொருள் செல்வம் பல பெற்றும்
புன்னகை கிடைக்கவில்லை
அந்த நிம்மதி இழந்ததனால்..!!