கடவுள்

ஒரு ஆலயத்தின் பக்கத்திலே பழக்கடை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார் ஒரு பக்தர். தினமும் அங்கே வரும் ஒரு ஏழைச் சிறுவன் அவருக்கு தெரியாமல் இரண்டு பழங்களைத் திருடிச் செல்வது வழக்கம். திருடிய பழங்களில் ஒன்றை கோவில் வாசலில் இருக்கும் ஒருவருக்குக் கொடுத்து மற்றதைத் தானும் உண்டு தனது பசியைத் தீர்த்துக்கொள்வான்.

ஒரு நாள் அவன் பழங்களைத் திருடும் போது கடைக்காரரிடம் வகையாக மாட்டிக் கொண்டான். பையனிடம் வினவியபோது தான் இரண்டு பழங்கள் தான் திருடுவதாகவும்,அதில் ஒன்றை கோவிலிலிருக்கும் ஒருவருக்கு கொடுப்பதாகவும் கூறினான்.

பழங்களைத் திருடியவனோ ஒரு சிறுவன் என்று நினைத்து அந்தச் சிறுவனைத் தண்டிப்பதில் கடைக்காரருக்கு அவ்வளவு விருப்பமில்லை. எனினும் அவனைத் தண்டிக்காமல் விடுவது அவனது வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று முடிவு செய்தார். அதன்படி ”கோவிலை நூறு முறை சுற்றிவருவதுதான் உனக்கு தண்டனை” என்று கூறினார்.

பையனும் சுற்றிவர ஆரம்பித்தான். அவன் சுற்றி வருவதைக் கடைக்காரர் கண்காணித்துக்கொண்டு இருந்தபோது ஒரு சுற்றில் அந்தச் சிறுவன் தெரிந்தால் மறுசுற்றில் சிறுவனுக்குப் பதிலாக பகவான் கிருஷ்ணர் தெரிவார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு கடைக்காரர் கனவில் தோன்றிய பகவான் ” அந்தச் சிறுவன் தினமும் உனது கடையில் திருடிய இரண்டு பழங்களில் ஒன்றை எனக்கல்லவா தந்துவிடுகிறான். அதுதான் நீ கொடுத்த தண்டனையில் பாதிப்பங்கு எனக்கும் உண்டென்று ஐம்பது சுற்றுக்கள் நானும் சுற்றினேன்.” என்றார்.

எழுதியவர் : முரளிதரன் (26-Jan-14, 11:17 am)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : kadavul
பார்வை : 226

மேலே