தன்னை உணர்த்தால் மனிதனும் தெய்வமாகலாம்

எப்படி தன்னை உணர்த்தால் மனிதனும் தெய்வமாகலாம்! என்பதை பார்போமா ...........

தெய்வத்திலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிற உண்மையை உணரும்போது மனிதன் தெய்வமாதல் என்பது மிகவும் எளிய விஷயமாகப்படும். ஆனால், அந்த உண்மையை எப்போது, எப்படி, யாரால் உணர்வது என்பதுதான் இங்கே முக்கியம். "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் " என்பார்கள் .

தெய்வத்திலிருந்துதான் மனிதன் வந்தான் என்கிற உண்மையை உணரும்போது மனிதன் தெய்வமாதல் என்பது மிகவும் எளிய விஷயமாகப்படும். ஆனால், அந்த உண்மையை எப்போது, எப்படி, யாரால் உணர்வது என்பதுதான் இங்கே முக்கியம். ஏழைகளுக்கு உதவி செய்து அவர்கள் பெறும் மகிழ்ச்சியில், புன்னகையில் இறைவனைக் காணலாம் என்பதையே "ஏழையின் சிரிப்பில் இறைவன்' என்றனர்.

படைக்கப்பட்ட அனைத்தும் இறைவனின் தன்மையோடும் தெய்வீக அம்சங்களோடும்தான் உள்ளன. பிறகு ஏற்படும் பதிவுகள் (நல்லதும் கெட்டதும் கலந்து) மற்றும் சூழல் ஆகிய காரணங்களால் ஒவ்வொரு உயிர்களிலும் களங்கப் பதிவுகள் உண்டாகின்றன. இதன் மூலம் நாம் கடவுள் தன்மையிலிருந்து வெகுதூரம் விலகிப் போய்விடுகிறோம்.

ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு என்றில்லாமல் நமக்குள்ளே கடவுளைத் தேடுவதாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான ஆன்மிகம். வெறுமனே பூக்களாலும் பாக்களினாலும் அர்ச்சித்து வழிபட்டால் மட்டும் போதாது. நமக்குள்ளே இருக்கும் உண்மைத் தன்மையை உணர்ந்து அறவாழ்க்கை வாழ வேண்டும். அறவாழ்க்கை என்பது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று நற்பண்புகளைக் கொண்டதாக அமைய வேண்டும்.

இனிமேல் நாம் காலம் தாழ்த்தாமல் நமது தற்போதைய நிலையை உணர்ந்து நமக்குள்ளே நம்மையே ஆய்வு செய்யும் பயிற்சிகள் செய்து முதலில் நம்மை நாம் களங்கமற்றவராக மாற்றி பின்னர் அதையே சமூகத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டியது நமது கடமை. இதையே மகான்கள் "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றனர்.

நம்மை நாம் உணர்வதற்குத் தடையாக உள்ள பல அம்சங்களை நம்மாலேயே உணர முடியும். நம்மிடம் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து அதன் மூலம் சரியான பாதையை நாமே தேர்ந்தெடுத்து நம்மை நல்வழியில் பயணிப்பதற்கு வாய்ப்பு அமைகிறது.

எனவே, இன்றே இப்போதே இக்கணமே நம்மை நாமே சுயபரிசோதனை செய்து நம்மிடமுள்ள தீய எண்ணங்களை, செயல்களை, சொற்களை அகற்ற ஆரம்பிக்க வேண்டும். எந்தவித கெட்டப் பழக்கமும் இல்லை என்பவர்கள் தங்களை மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தும்போது வேறு ஏதாவது தீய எண்ணங்களோ செயல்களோ இருப்பின் அவற்றையும் ஒவ்வொன்றாக கைவிட வேண்டும். பிறகு உங்களுக்கே தெரியும், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று. காரணம், தெய்வத் தன்மைக்கும் நமக்கும் உள்ள இடைவெளி என்பது நம்முள்ளே எழும் தீய எண்ணம், தீய சொல், தீய செயல்களே.

தெய்வம் என்றால் ஏதோ அபரிமிதமான சக்தி கொண்டது என்று நினைத்து பயந்துகொண்டோ, அதைநாம் அடைய முடியாது என்கிற விரக்திகொள்ள வேண்டியதில்லை. நிச்சயமாக நம்மால் அந்த நிலையை அடைய முடியும். இறைத்தன்மை என்பது வேறு எங்கும் சென்று விலை கொடுத்து வாங்கக்கூடிய விஷயம் இல்லை. அதை நம்முள்ளே நம் மனதிலேதான் கொண்டுவர வேண்டும். எனவே, எதற்கும் நமது மனமே காரணம்.

மனம்தான் அத்தனைக்கும் காரணம் என்பதால், அது குடியிருக்கும் உயிரும் உடலும் முதலில் களங்கமற்று இருக்க வேண்டும்.

இதற்கு நம் செயல்கள் அறநெறியில் இருத்தல் அவசியம். நாம் இறைத்தன்மையை அல்லது தெய்வீகத்தன்மையை அடைய முடியும் என்பதை ஏன் நம்மால் எளிதில் ஏற்க முடியவில்லை என்றால், யாரும் அடைந்தபின் நம்மிடம் வந்து வழிமுறைகளைச் சொன்னதில்லை.

அதில் வெற்றி பெற்றவர்கள் மிகச் சிலரே. இதையே "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்றனர். இதை நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், தெய்வீகத்தன்மை பெற்றவுடன் அவர்கள் இறைநிலையோடு கலந்துவிடுவதாக கொள்ள வேண்டும். மீதமுள்ள மனித இனம் அவர் மாதிரி முயற்சி செய்ய வேண்டும் என்கிற ஊக்கம் பெற வேண்டும் என்பதற்காகவே இத்தனை இயக்கங்களும் அமைப்புகளும் வழிகாட்டுதல்களும் இருந்துவருகின்றன.

இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து நாம் இப்போது வாழும் முறையில் நம்மால் இயன்ற வகையில் நேர்மையாக என்று இல்லாமல் கட்டாயம் நாம் நேர்மையாக, உண்மையாக, நியாயமாக நடந்து அறநெறி வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும்.

ஊரெங்கும் கொள்ளையடிக்கிறார்கள்; நாம் மட்டும் ஒழுங்காக இருந்து என்ன பிரயோசனம் என்று நினைப்பவர்கள் நம்மில் நிறைய பேர். இப்படியே அனைவரும் நினைத்தால் நேர்மையை நாம் எங்கே காண முடியும்? எனவே, நம்மால் இயலும் என்று எண்ணி நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்து நாம் வாழ்ந்தால் போதும். நாம் இறைத்தன்மையை அடையலாம் என்பது உண்மை.

எழுதியவர் : முரளிதரன் (30-Jan-14, 9:18 am)
பார்வை : 484

மேலே