இதழ் குவிக்கிறேன்-குமார் பாலகிருஷ்ணன்

அந்த காட்சிப் பேழையின்
குவியக் கண்ணாடிகளில்
இதழ் குவிக்கிறேன்….

எத்தனை அழகான
வெள்ளந்தி நினைவுகளை
நிழற் படமெடுத்திருக்கிறது இது…

வெளிச்சம் பத்தாத
இடங்களில்
எங்களின் சிரிப்பொலியின்
ஒளியோடும்….

புற ஊதாக் கதிர்கள்
புகமுடியாத இடத்தில்
எங்களின் முன்னலை அதிர்வுகளின்
அரவனைப்பிலும்

எத்தனை அழகான
வெள்ளந்தி நினைவுகளை
நிழற் படமெடுத்திருக்கிறது இது…
ஒரு கட்டிலுக்கு
நான்கு பேர் விகிதத்தில்
விடுதி அறையில்
விடுமுறை தினத்தில்
வியாபித்த அன்பை….

வெட்டிப் பேச்சுகளின்
வீரியத்தோடு
குட்டித் திண்ணைகளில்
குதூகலித்திருந்த குறும்பை….

எட்டரை மணி வகுப்பிற்கு
எட்டு மணிக்கு எழுந்து
அவசர அவசரமாகக் கிளம்பும் போதும்
எட்டு இருபதுவரை
நண்பனோடு கட்டி
உருண்ட சண்டைகளை…

எரிபொருளின்றி
தள்ளிய வண்டிகளை…


சில நேரங்களில்
ஓட்டுநர் உரிமமாய் மாறிய
ஒன்னும் எழுதாத குறிப்பேடுகளை….

எங்களின் நட்போடு
கைகோர்த்துத் திரிந்த

இசை இரவுகளை
விடுதிக் காவலாளிக்கு
வரவு வைத்த
வசந்த இரவுகளை..
பீட்சா கட் இரவுகளை
ஒரு குளிர்பானப் பாட்டிலில்
பத்து உறிஞ்சிகளிட்ட
பிச்சைக்கார இரவுகளை…

இன்னும் எத்தனையோ
நினைவுகளைப் படம்பிடித்த
அந்த காட்சிப் பேழையின்
குவியக் கண்ணாடிகளில்
இதழ் குவிக்கிறேன்….

எழுதியவர் : குமார் பாலகிருஷ்ணன் (9-Feb-14, 1:59 pm)
பார்வை : 579

மேலே