கண்ணதாசன்
அமுதசுரபியே! அற்புதக் கவிஞனே!
உன் கற்பனை கலை நயத்தால்
எங்கள் இதயங்களைக் கட்டிபோட்ட
மாமேதையே! வியத்தகு சிற்பியே!
தெளிந்த நீரோடையாய் உன் கவிதை வரிகள்
இயற்கை, காதல், தத்துவம், சோகமென
உன் பேனா தொட்ட வார்த்தையெல்லாம்
கனி தரும் விருட்சங்களாய் படைத்த
காவியத் தாயின் இளையமகன்!!
சிறுகூடல் பட்டிக்கு பெருமை சேர்த்த
முத்தையாவெனும் கண்ணதாசன்!
தமிழ் இலக்கியத்துக்கு ஒரு முத்து
அவர் தமிழ் மக்களின் சொத்து
கவிதைக்கோ அவர் ஓர் கவியரசு
பழகியவர்க்கோ அவர் ஒரு பாமரன்
இந்து மதத்தில் பிறப்பெடுத்து
எல்லா மதத்தையும் நேசித்த நாத்திகன்
எம்மதமும் சம்மதமென்று
மக்களுக்கு புரியவைத்து
கண்ணனைப் பாடி, மனம் மாறி
ஆத்திகனானதும் அற்புதமே!
கோப்பையும், கோல மயிலும்
குடிகொண்டு வாழ்ந்த
இந்திய நாட்டின் உமர் கய்யாம்!
அவர் வாழ்ந்த வாழ்க்கை
சுருதி சேராத இராகங்களாய்
சுவர்ண சுந்தரிகள் வந்துபோன
அரங்கமும் , அந்தரங்கமும்
நிறைந்திருந்த வாழ்க்கையின்
உண்மைதனை பெருமையாய்
பாடி மகிழ்ந்த பெருங் கவிஞன் !
திரை இசைப் பாடல்களில்
முத்திரை பதித்த கவிஞன்
மனவாசமும் வனவாசமும் கண்டு
தன் வசந்தகால வாழ்க்கையில்
அர்த்தமுள்ள இந்து மதத்தையும்
இயேசு காவியத்தையும் எழுதியவன்
எந்த நிலையிலும் எனக்கு
மரணமில்லையென்று கூறி
அழியாக் கவிதைகள் படைத்து- நம்
நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்
மாபெரும் கவிஞனவன்!