தாலி ஒன்னு பொண்டாட்டி ரெண்டு

‘நான் நினைக்கறேன் பேசாமே உன்ன மாதிரியே நானும் கால்யாணம் பண்ணாமலே ஒருத்தனே கூட வெச்சிக்கலாம்னு ! எதுக்கு இந்த கல்யாணம் கத்திரிக்காய்லாம் ? நீ என்ன அதெல்லாம் பண்ணிகிட்டியாமா ? இல்லைத்தானே ! நல்லாதான இருக்கு. இப்படி இருக்கறது. அப்பறம் என்ன நானும் உன் வழியையே Follow பண்றேன் !’

இருபத்தி மூன்று வயதான அனாமிக்காவின் குதர்க்கமான பதில் நாற்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க சுகுணாவை அப்படியே ஹாலில் இருந்த சோபாவில் சரிந்து அமர வைத்தது. அனாமிக்கா பார்வை ஒன்றை அவள் அம்மா சுகுணாவின் மீது விசீயவாரே மீண்டும் கையிலிருந்த I Pad டில் தட்டச்சு செய்யத் தொடங்கினாள்.

அவளது கால்கள் இரண்டும் சோபாவின் எதிரே இருந்த அழகு மேஜையின் மீதிருந்தது. அவள் கால்களைக் ஆட்டிக் கொண்டிருந்தாள். அவளது வலதுக் காலில் அணிந்திருந்த கால் சங்கிலி வினாடிக்கு ஒரு தரம் சத்தம் போட்டது. அங்கே நிசப்தமான அமைதி ஒன்று உறுவாயிருந்தது. காற்றாடி வீசும் சத்தம், கடிகார முள்ளின் ஓட்டம், கால் சங்கிலியின் மெல்லிய ஆட்டம் இவை மட்டுமே பேசிக் கொண்டிருந்தன.

இவைகளின் ஸ்பரிசம் சற்றும் குறைந்திடாத வேளையில் திடிரென்று அவைகளை கலைக்கும் வண்ணம் ஒரு விசும்பல் சத்தம் கேட்டது. அனாமிக்கா தலையைத் திருப்பாமலே கேட்டாள்.

‘ஆரம்பிச்சிட்டியா ? எப்போ மா முடிப்பே ? நான் பிறந்ததிலிருந்து நீ அழுகிறதா நான் தினம் சன் டிவி, ராஜ் டிவி மாறி சலிக்காம பார்த்துகிட்டு தான் இருக்கேன். அழுகறத விட்டுட்டு வேற வேல ஏதாவது இருந்தாப் போய் பாருமா !’

என்றவளை நோக்கி வேகமாய் வந்தால் அறையிலிருந்த ஜானகி. அனாமிக்காவின் கையிலிருந்த I Pad ட்டைப் பிடிங்கியவாறே,

‘உன் மனசுல என்னாத் தாண்டி நெனச்சிகிட்டு இருக்கே நீ ? வர வர உனக்கு வாய் ஜாஸ்தியாகிக் கிட்டே இருக்குது. யாருகிட்ட எப்படி பேசணும்னு தெரிய மாட்டுது. இப்போ உனக்கு அம்மாகிட்ட எப்படி மரியாதையா பேசறதுனுக் கூட மறந்துப் போச்சி ! உன் ஆட்டம் சரியில்லாதது ! ஒரு பொன்னா லட்சணமா அடக்கமா இருக்கவும் பேசவும் கத்துக்கோ !’

படபடவென்று கடுகாய் வெடித்தாள் அனாமிக்காவின் அக்கா ஜானகி. ஜானகியை ஏளானமாய் பார்த்தவாறே அவள் கையிலிருந்த அந்த I Pad ட்டை வேகமாய் பிடுங்கி,

‘என்ன சொன்ன ? பொன்னா லட்சணமா அடக்கமா , இருக்கவும் பேசவும் கத்துக்கணும். ஹ்ம்ம்... ஆமா... நீ இங்க என்னப் பண்ணிகிட்டு இருக்கே ? உனக்குதான் கல்யாணம் ஆச்சே.... உனக்கு புருஷன்னு ஒருத்தர் இருக்காரு தானே ? நீ அவர்கூடத் தனிக்குடுத்தனம் போய்ட்டதா கேள்வி பட்டானே இல்லையா ?! அதெல்லாம் பொய்யா ? பொன்னா அடக்கமா.... லட்சணமா.... பேசாதனாலத்தான் உன்ன கழட்டி விட்டுட்டானா உன் புருஷன் ? அதான் இங்க வந்து ஒண்டிக்கிட்டியா ?’

அனாமிக்காவின் வார்த்தைகள் மிகவும் காரசாரமவதை உணர்ந்த சுகுணா அவளை மேலும் பேச விட்டால் தேள் கொடுக்காய் அனைவரது மனதையும் கொட்டுவாள் என்பதையறிந்து ஆவேசமாய் அனாமிக்கா என்று கத்த வாயெடுத்தப் போது ஒரு ஆணின் குரல் ஆத்திரத்தோடு அனாமிக்கா என்று அலறியது.

வீட்டிலிருந்த அனைவரும் குரல் வந்தத் திசையைத் திரும்பி பார்த்தனர். வாசலிலிருந்து வேகமாய் வீட்டின் ஹாலை நோக்கி வந்தார் குமாரசாமி. முதலில் அவரது பார்வை சென்றது ஜானகியிடம் தான்.கண்களைக் கசக்கி கொண்டு நிற்கும் ஜானகியின் தலையில் கை வைத்து மெதுவாய் தடவிக் கொடுத்தார். அடுத்து சுகுணாவைப் பார்த்தார். முகமெல்லாம் அழுது வீங்கிப் போயிருந்தது. அப்பறம் பேசுகிறேன் என்றப் பாணியில் தலையை லேசாய் ஆட்டி விட்டு அவரது கனல் தெறிக்கும் பார்வைகளை அனாமிக்காவின் மீது பாய விட்டார்.

அவளோ அசட்டையாக இதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவாறு I Pad ட்டில் Facebook நோண்டிக் கொண்டிருந்தாள். அனாமிக்கா என்ற அவரது அதட்டல் குரலுக்கு சுகுணாவும் ஜானகியும் நாடு நடுங்கி போயினர். ஆனால், அனமிக்கா கொஞ்சமும் அசராமல் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் அப்படியே நின்றாள்.

‘அந்தப் போனைத் தூக்கிப் போட்டு உடைக்கப் போறேன் பார் !’

குமாரசாமியின் கோபமும் அதட்டலும் குறையாத வேகத்தில் வந்து விழுந்தது இவ்வார்த்தை.

அனாமிக்காவும் கொஞ்சமும் பயமின்றி குமாரசாமியின் முகத்திற்கு நேராய் நின்று,

‘யாரு போனை யாரு உடைக்கறது ? இந்த அதட்டல் மிரட்டல்லா உங்க சுகுணா , ஜானகிக்கிட்ட வச்சிக்கோங்க ! என்கிட்ட உங்க பாச்சா பலிக்காது ! புரிஞ்சுதா ! வந்த வேலைய மட்டும் பார்த்திட்டு நீங்க கிளம்பலாம் ! Some More இது எங்க குடும்பப் பிரச்சனை இதுலக் கண்டவங்க மூக்க நுழைக்க வேண்டாம் !’

‘அனாமிக்கா...... யாருகிட்ட என்னாப் பேச்சு பேசறே ? அவர் உன் அப்பா !’

சுகுணா அவளின் அருகில் வந்து அவளைக் கொஞ்சம் உலுக்கினார்.

‘யாருக்கு யார் அப்பா ? எனக்கா ? எனக்கு அப்படி ஏதும் தெரியலையே ? எங்க…. உன் கழுத்துல தாலியக் காணோம் ? எங்கம்மா உன் கல்யாண படம் ஒண்ணுக் கூட இந்த வீட்டு சுவருல காணோம் ? எங்கப் போச்சி எல்லாம் ? Store Room லே எங்கையாச்சம் வெச்சிர்க்கியா ? சொல்லுமா ?! அவர் அப்பானா அதுக்கு அத்தாச்சி எங்கே ? நான் தப்பா ஏதும் கேட்கலையேமா நியாயமாத்தானே கேட்கிறேன் ! சொல்லுமா !’

மகளின் கேள்விகள் சுகுணாவை ரணக் களமாக்கியது. அவளின் கேள்வியின் கூர்மைகள் மிகவும் ஆழமாக சுகுணாவின் நெஞ்சுக் கூட்டை கிழித் தெறிந்தது.

‘என்னம்மா அமைதியா இருக்கே ? தோ நிக்கிறாரே…… இவரையே கேளேன் ? எனக்கு இவர் தான் அப்பான்னு ஆதாரத்தைக் காட்டச் சொல்லு ! எப்படி சொல்லுவாரு ? அவருக்கு நீ மட்டும் தான் பொண்டாட்டியா என்ன ? ஐயோ ! தப்புத் தப்பு முதல்ல நீ அவருக்குப் பொண்டாட்டியே இல்லே !’

‘அவர் பொண்டாட்டிப் பேரு கமலாட்சி. வயசு நாற்பது. மூனு பசங்க. பெரியவன் கூட என்கூட ஒன்னாத்தான் காலேஜ்லே படிக்கறான். ஆனப், பாருங்க அவனுக்கேத் தெரியாது நான் தான் அவன் தங்கச்சின்னு. அதுத் தெரியாமே அந்த லூசு, என் காதலி என்னைக் காதலின்னு என் பின்னால சுத்துது.

நல்லப் பையன் தான் நானும் சரி சொல்லிடப் போறேன். பொண்ணுப் பார்க்க வரச் சொல்றேன். அப்போ இவரு நம்மக்கூட இந்த வீட்டுல எனக்கு அப்பாவா இருப்பாரா ? இல்லே வரப் போறே மாப்பிளைக்கு அப்பாவா வருவாரா ?’

அனாமிக்கா ! போதும் தயவு செஞ்சு நிறுத்துடி !

பதறித் துடித்தார் சுகுணா.

‘எதமா நிறுத்தச் சொல்றே ? ஏன் நிறுத்தச் சொல்றே ? உண்மைக் கசக்குதோ ?! கசக்கத்தான் செய்யும் ! ஜீரனிக்கப் பழகிக்கோ !’

‘ஏண்டிப் பொட்டு வைக்க மாட்டரே ? பூ வைக்க மாட்டரே ? அலங்காரம் பண்ணிக்க மாட்டரே இப்படிலாம் தினம் தினம் கேட்கறியே ?! அதுக்கெல்லாம் இது தான் காரணம்! வெட்கமா இருக்குமா ! அசிங்கமா இருக்குமா ! எல்லாரும் கிண்டல் பண்றாங்கமா ! அவமானமா இருக்குமா !

சீவி சிங்காரிச்சிகிட்டுப் போனா அவ ஆத்தாக்காரி மாதிரி இவளும் மினுக்கிகிட்டு எவனை மயக்கப் போறாளோ ! இப்படிலாம் காதுல படர மாதிரி பேசறாங்கம்மா ! நான் என்னாத்தான் பண்ணச் சொல்லு ?!’

‘பொட்டு வெச்சிக்கறே. பூ வெச்சிக்கறே. ஆனா, வெச்சிக்கறே பூவுக்கும் பொட்டுக்கும் சொந்தக்காரன் யாருன்னு இந்த உலகத்துக்கு நீ காட்ட மறந்திட்டியேமா !’

‘இங்கப் பாரு அனாமிக்கா . அவர் என் புருஷன். அதுக்கு சாட்சியா இதோ கண்ணுமுன்னுக்கு குத்துக் கல்லு மாதிரி நீயும் ஜானகியும் இருக்கீங்க. இதுக்கு மேலே அவர்தான் என் புருஷன்னு எல்லார்கிட்டையும் கூப்பாடு போடா வேண்டிய அவசியம் எனக்கில்ல !’

‘அவர ஊர் உலகத்துக்குக் காட்டி என்ன இருக்கு ? ஒன்னும் இல்லே ! அவர் என்னே உலகத்துப் பார்வையிலேப் பொண்டாட்டியா காமிகாட்டியும் ; என்னைக்குமே எனக்கும் உங்களுக்கும் எந்தக் குறையும் வெச்சதில்லை. அந்த வகையிலே நாமேல்லாம் ரொம்பப் புண்ணியம் பண்ணி இருக்கோம் அவர் நமக்கு கிடைக்க.’

‘மா ! சும்மா உளறாத ! பாசம் உன் கண்ணை மறைக்குது. உனக்கு வேணும்னா அவரு உத்தமரா இருக்கலாம். ஆனா, என்னைக்குமோ அவரு ஒரு துரோகி ! என் அம்மாவோடு வாழ்க்கையேப் பாழாக்கிய துரோகி ! எங்க அம்மாவே நம்ப வெச்சி கழுத்தறுத்தத் துரோகி ! துரோகி ! துரோகி ! துரோகி !’

ஆவேசத்தில் பொங்கினாள் அனாமிக்கா.

‘அனாமிக்கா ஒரு பொண்ணுக்கு எதெல்லாம் தேவையோ அது அத்தனையும் அவர் நம்ப அம்மாவுக்குக் கொடுத்துருக்காரு. நம்பளுக்கும் எந்தக் குறையும் வைக்காமலே நம்பலே வளரத்திருக்காரு.’

ஜானகி ஆவேசத்தில் இருந்த அனாமிக்காவை சமாதானப்படுத்த முயற்சித்தாள்.

‘என்னச் சொன்ன நம்ப அம்மாவுக்குத் தேவையான எல்லாத்தையும் தந்திருக்காரு…. அப்படித்தானே ?! அப்போ கலட்டு உன் கழுத்துலத் தொங்குதே தாலி அதக் கலட்டுடி! அது எதுக்கு உனக்கு ? அதான் உன் புருஷன் உனக்கு எல்லாத்தையும் தந்து நல்லாப் பாத்துக்குவாறே ! கலட்டுடி !’

‘அப்பறம் என்னச் சொன்ன நம்பல ரொம்ப நல்லா வளர்த்திருக்காரு ! நீ தான் மெச்சிக்கனும் ! சரியான ஆம்பளையா இருந்தா.....

‘அனாமிக்கா !’
என்று ஆவேசம் பொங்க ஆத்திரத்தோடு அவளை அடிக்க வந்து விட்டார் சுகுணா.

‘விடு சுகுணா விடு…… அவ என்னம்மோ சொல்ல வரா.... இதையும் கேட்ருவோமே.... நீ சொல்லுமா ?!’

‘இந்த அனுதாபப் படர நடிப்புக்கு அசர ஆள் நான் இல்லே ! நீங்க சரியான ஆம்பளையா இருந்தா. எங்க அம்மா கழுத்துலத் தாலியக் கட்டுங்க ! தாலி ஒன்னாவும் பொண்டாட்டி ரெண்டாவும் இருக்கறது அசிங்கமா இருக்கு ! எங்க அம்மா வப்பாட்டியும் கிடையாது; உங்க அந்தரங்க ராணியும் கிடையாது ! உங்க முதல் மனைவிக்குக் கொடுத்திருக்கற அத்தனை உரிமைகளையும் எங்க அம்மாவுக்கும் கொடுக்கணும்.’

இத்தனை வருஷம் எங்க அம்மா வேணும்னா அமைதியா இருந்திருக்கலாம். ஆனா, நான் அப்படி பொறுமையா இருக்க மாட்டேன் !

‘அனாமிக்கா யார்கிட்ட என்ன பேசற ? வளர்ந்திருக்கியே தவிரக் கொஞ்சமும் இங்கிதம் தெரியாமே இப்படியா நடந்துக்கறது ? இதுதான் நான் வளத்த வளப்பா ? என் வளப்புக்கு நீ தர மரியாதையா ? அவரு தப்பே பண்ணி இருக்கட்டும் எல்லாத்துக்கும் ஒரு வரம்பு முறை இருக்கில்ல ! அதுக்கின்னு இத்தனை வருஷம் இந்தக் குடும்பத்துக்கு மாடா உழைச்சவரை இப்படியா அசிங்கப்படுத்துவே ?’

‘இதுதான் நீ அவர்க்கு தர மரியாதையா ? எங்கடிப் போச்சு உன் நன்றி ? நன்றிக் கேட்ட நாயே ! அவர் சம்பாரிச்சிப் போட்ட காசுலத்தானடி இன்னிக்கி நீ ஒரு பட்டத்தாரி ! மூணு வேளையும் மூக்கு பிடிக்கத் தின்கறியே அதுலாம் யார் காசுல வாங்கன சாப்பாடு ? எல்லாம் அவர் அன்புடி. அவர் நம்ப மேலே வெச்சி இருக்கற அன்புடி.’

‘அவர் ஒன்னும் சும்மா சுகத்துக்காக அலையற ஆள் இல்லடி ! நல்லவர்டி ! ரொம்ப நல்லவர்டி ! ஏதோ இது தான் ! சின்ன விஷயம் ! செய்ய மறந்து விட்டுட்ட விஷயம் ! இதப் போய் யாராச்சம் பெருசுப் படுத்துவாங்களா ? அடிப் போடி பைத்தியக்காரி இதெல்லாம் சொன்னா உனக்கு எங்க புரியப் போது !’


அழுகையின் ஊடே சுகுணாச் சொன்னார் விரைப்பாக நின்றுக் கொண்டிருக்கும் அனாமிக்காவை நோக்கி. குமரசாமி சுகுணாவின் அருகில் சென்று அவரின் தோல் பட்டைகளை லேசாகத் தடவிக் கொடுத்தார்.

‘சுகுணா.... சுகுணா.... ஏன் இப்படி அழுகறே ? இப்போ என்ன நடந்துப் போச்சி ? நம்ப பொண்ணுக் கேட்கறதுல என்னத் தப்பு ? எந்த மகளா இருந்தாலும் தன் அம்மாக் கழுத்துல ஒருத் தாலித் தொங்கறத விரும்ப மாட்டாளா ? அதுவும் இருபத்தி மூனு வருஷமா நான் இந்த வீட்டுக்கு வரதும் போறதும் , எல்லா செலவுகளையும் ஏத்துக்கறதும் ஒரு முறையான உறவா இருக்கணும்னு அவ ஆசப் படரா ! அது தப்பு இல்லையே ! சரித்தான் !’

‘அனாமிக்கா.... நான் கொஞ்சம் ஞாபக மறதியான ஆளுமா. ஆனா, இவ்வளவு வருஷமா ஒரு விஷயத்தை அதுவும் ரொம்ப முக்கியமான விஷயத்தை மறந்து தொலைச்சிர்க்கேன் பாரு ! இப்போ அதை ஞாபகம் மூட்டனதுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டுருக்கேன்மா உனக்கு....’

‘நீ பொறந்தப்போ எப்படி சந்தோசமா இருந்தேனோ, அதே சந்தோசம் இன்னிக்கி நான் அனுபவிக்கறேன்மா உன்னால. உண்மையான அன்பு என்னைக்குமே தப்பான ஒரு உறவுக்கு அடித்தளமா இருக்கக் கூடாதுமா.... முடிஞ்ச அளவுக்கு நல்ல உறவுகளை உருவாக்கப் பார்க்கணும். ஜானகி குங்குமக் கிண்ணத்தை எடுத்து வாம்மா. அனாமிக்கா நீ போய் ஒருக் கயித்துல மஞ்சளைத் தடவி எடுத்து வாம்மா…’

என்றார் சிரித்த முகத்தோடு குமரசாமி.

எழுதியவர் : தீப்சந்தினி (11-Feb-14, 4:59 pm)
பார்வை : 908

மேலே