நான்- காதல் - கடவுள் வினோதன்

மாசி இரண்டாம் தேதி
மனதை உருக்கியுருட்டி
எனதன்பு மகாராணியின்
மனதுக்குள்வீசி விளையாட
வியூகம் வரைந்த - நடுநிசியில்
தடதடத்த கதவுகளின்
பின்னாடி நின்ற குரல் - என்
நிதானம் குறைத்தது !

கதவு திறந்த மறுநொடி
புகுந்த ஆளிடம் - விலாசம்
கேட்க அவசியமில்லை !
தூணையும் துரும்பையும்
வீடாக்கி - மற்றோர் வாழ்வோடு
விளையாடும் வித்தகர் - பக்தியை
குருக்களுக்கு விற்றவர் !
ஆம், இறைவனே தான் !

வந்தகாரணம் - எனக்கும்
அவருக்கும் தெரிந்தவொன்றே !
நேற்றுகாலை - நான் வினவிய
வினாவுக்கான விடையோடு - என்
வீட்டிற்கு நடைபோட்டிருக்கிறார் !

மெல்லிய புன்னைகையோடு
ஆரம்பித்தார் - நீ கேட்ட
கேள்வியில் பிழையில்லை !
ஆனால், பதிலளிக்க வழியில்லை !
மீண்டும் மௌனமாகினார் !

என்ன கடவுளே என்ற
வருத்த வரிகளை - பார்வையால்
பரவவிட்டு - நானும் மௌனம்
உடுத்த எத்தனிக்கையில்
மீண்டும் தொடங்கினார் !
மீளத் தொடங்கினார் !

என்னாலானதுதான் உலகம் !
ஆயினும், கடவுளாக - எனக்கே
அப்பாற்பட்ட விடயங்களுமுண்டு !
காதலும் அப்பேற்பட்டது...!

இரு இதயங்களின் ரசவாதம்,
மனங்களின் இன்பக்காசோலை ,
உள்ளங்களின் மந்திரச்சோலை
கண்களின் காந்தக் கந்தகம்
இன்னும் இன்னுமென சொல்லி
சிலாகித்தார் - காதலைகண்ட
அவரும், அவரைக்கண்ட நானும்
அடைந்த நிலையது, பரவசம் !

நான் எழுப்பிய வினா இதுதான்,
என் காதலை சொல்லும் முன்
என்னவளின் இதயம் புகுந்து
அவள் காதலை பார்க்க வேண்டும் !
ஆகவே, அவளிதய கடவுச்சொல்
திருடிக்கோடுக்க இயலுமா இறைவா !

உப்புமா முதல் ஒபாமா வரை
எல்லாம் கதைத்தாயிற்று !
கடவுச்சொல் கொடுப்பாரென
ஆவலோடு நிற்கிறேன் - சட்டென
எழ ஆரம்பித்தவரை - வெறுமையோடு
பார்த்தேன் - மறந்ததுபோல்
நடித்துகொண்டு நடக்க ஆரம்பித்தவரை !

என் விழிகளின் வினாவை
புரிந்துகொண்டு சிரித்தார் !
கன்னியர்தம் மனதது
கடவுளுக்கும் அப்பாற்பட்டது !
காதலன் எம்மாத்திரம் ?!!
என்று தன்கை விரித்தார் !

சில அடிகள் நடந்தவர் - திரும்பி
அழைத்திட்டார் - அருகில் செல்லவே
இரகசியம் ஒன்றுரைத்தார் !
உன் காதலியின் மனம் படிப்பது
ஆகாத காரியம் - ஆனால்
அவளின் விழியை வாசிக்க
கற்றுக்கொள் - அவள் மனதின்
கள்ளச்சாவியை - நான்
அங்கேதான் புதைத்துள்ளேன்...
என்றுரைத்து மறைந்தார் !

மறுநாள் மதியமாய் விடிந்தது
அவளைப் பார்த்த பின் !
உணவரங்கம் அதிர கதைத்துச்
சிரித்தாள் - நான் அமைதியாய்
சுரங்கம் தோண்ட துவங்கினேன்,
அவளின் கருவிழியின் கதவோரம் !
கள்ளச்சாவி அருளிய கடவுள்
அரங்கக் கதவோரம் நின்று ரசித்தார் !!!


(முழுக்க முழுக்க கற்பனையே....வதந்ந்திகளை நம்பாதீர், பரப்பாதீர்...ஆஆவ்வ் ;) )

(நண்பர் கவிஜி யின் "எந்த கடவுள்" என்ற சிறுகதை வாசித்த நொடிகளில் விரலுக்குள் விழுந்த வரிகள், நன்றி கவிஜி )

எழுதியவர் : வினோதன் (12-Feb-14, 4:28 pm)
பார்வை : 117

மேலே