இதுதான் புனிதமான காதல்

டெல்லியில் ஆசிட் வீச்சால் வாழ்க்கையை இழந்த பெண்ணுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். இந்தியாவின் தலைநகரம் டெல்லியை சேர்ந்தவர் லஷ்மி, வயது 24.

9 ஆண்டுகளாக தைரியமாக வெளியே வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அழகு பெண், பார்ப்பவர்களுக்கு வினோத பொருளாய் தென்படுகிறார்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யாரால் நேர்ந்தது? என்று ஆராய்ந்தால் மிக கொடுமையான சம்பவம் அவளது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது என்பது தான் உண்மை.

பள்ளிப்பருவ காலத்தில் குடும்பம்- நண்பர்கள் என அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு பட்டாம்பூச்சி போன்று சிறகடித்து கொண்டிருந்த காலம் அது.

15 வயதான போது, பக்கத்து வீட்டு தோழியின் சகோதரன் காதலிப்பதாய் கூறியுள்ளார். அத்தருணத்தில் காதலையும், காதலிப்பதாய் சொன்ன நபரையும் வெறுத்து ஒதுக்கியுள்ளார், பல்வேறு முயற்சிகள் செய்தும் அவ்விளைஞனின் முயற்சிகள் தோல்வியில் முடிந்து போனது.

இதனால் கோபமடைந்த அவ்விளைஞன், லஷ்மியின் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளான், துடிதுடித்துப் போனாள், இதன்பின் பத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டும் பலனில்லாமல் போனது. எந்தவொரு ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.

காலங்கள் கடந்து போக, அலுவலகம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தாள். அங்கு தான் அவளுக்கு அலோக் தீக்ஷித் என்ற சமூக ஆர்வலரின் நட்பு கிடைத்தது.

லஷ்மியின் வாழ்க்கையில் நடந்த சோகம், அலோக் மனதில் நீங்கா வடுவாய் இருந்தது. அவளை தனது துணைவியாக ஏற்றுக்கொள்ள தீர்மானித்தார், லஷ்மியின் சம்மதத்தை கேட்டுள்ளார்.

ஆனால் லஷ்மியோ தன்னைவிட அழகிலும், அறிவிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

உடனே சமூகத்தின் பார்வையில் கணவன்- மனைவி என்ற கோட்பாட்டிற்குள் நாம் நுழையாமல் நம் வாழ்க்கையை தொடருவோம் என்று அலோக் கூறவே, பச்சைக் கொடி காட்டியுள்ளார் லஷ்மி. இருவரும் மிக சந்தோஷமாக தங்களது இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற பெயரில் அரங்கேறிவரும் கொடூரங்களுக்கு மத்தியில் இப்படியான காதலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எழுதியவர் : நவன் (12-Feb-14, 10:37 pm)
பார்வை : 115

சிறந்த கட்டுரைகள்

மேலே