வீதியோர பூக்கள்

தடத்தில் கிடந்த பூக்களை மிதியாமல்
தாவி தாவிச் சென்று ரயிலில் ஏறினேன்
முன்பதிவு கிடைக்காமல் பொது பெட்டியினுள்
சற்று அல்லல்பட்டு சன்னலோர இடம்பிடித்தேன் ,

இரயில் தண்டவாளத்தில் புறப்படும் நேரம்
சிலர் கூட்டமாய் இரைச்சலோடு படியேறினர்
பல வெவ்வேறு நிறமான விதமான முகங்கள்
சிந்தித்து மீண்டும் பார்த்தேன் அந்த தேவதையை ,

தங்க முலம் புசினாற் போல் பொலிவான பாவை
அளவை செதுக்கிய சிலையாய் நங்கை மேனி
வார்த்தைகளை சாகடிக்கும் சாந்த பாவனை
அனாவசிய அரட்டைகள் நடுவே அமைதி பூவின் இதழ் ,,

அவள் விழி சிந்தும் பார்வை சாரலுக்கக
என் உயிர் இங்கு ஏங்கி தவித்தது
தாமதமாய் தரை இறங்கினாலும் நேரிடியாய்
நெஞ்சை துளைத்து சாரல் மழை ,

அடுத்த நிலையம் ,பெட்டி நிரம்பியவாறே இருந்தது
உயிர் வருடிய பார்வையை நினைத்த படியே
தென்றல் வாங்க சாயும் நேரம் மென் குரலில்
பாடல் கேட்டது, நெரிசலில் நின்றவர்கள் மறைக்க
குயிலின் குரல் நான் காண இயலவில்லை,

சப்தம் மெல்ல நகர்ந்து சகியின் இன்னிசை
என் காதோரம் ஒலிக்க கண் உயர்த்தினேன்
என் விழிகளை பார்த்தவாறே அவள் கை நீட்டினாள்
சில்லறை இல்லையம்மா என்றேன்,அவள் நகர்ந்தாள் ,
மெய்தானே ,
எல்லா பூக்களும் மாலைகளாவதில்லையே...

எழுதியவர் : (21-Feb-14, 12:36 pm)
சேர்த்தது : க.சண்முகம்
பார்வை : 98

மேலே